அம்மா தந்தது.... வேர்கள் ஆழமாய் இருந்தும் கிளைகள் பல இருந்தும் நீ செய்த சிறு காதல் கிறுக்கலில் நீங்கள் இருவரும் பகிர்ந்த வாழ்க்கையை எனக்கு கொடுக்காமல் உன் பெயரும் சொல்லாமல் தகப்பன் இவனேன்றும் சுட்டாமல் தெருவின் விளிம்பில் பெண் பிள்ளையாயிற்றே என்கிற சிறு ஆதங்கம் கூட இல்லாமல் என்னை விட்டுச் சென்றாயே அனாதை என்கிற அடையாளத்துடன்.... உறங்கினால் எழுப்பவும் உணவை வாய் நிறைய கொடுக்கவும் விதம் விதமாய் உடை உடுத்தி என்னை அழகு பார்க்கவும் என் முகசாயலை உறவுகளில் பொருத்திப் பார்க்கவும் எனக்கான பொருட்களை எனக்கேயென்று சேர்த்து வைக்கவும் உன் சிறு அதட்டலில் என்னை பெண்ணென்று எனக்கே புரிய வைக்கவும் உன்னை தேடுகிறேன் என்றாவது அனாதை என்கிற சொல்லை நீ கடக்க நேரிட்டால் என்னை பற்றிய நினைப்பு உன்னை கடக்குமென்ற எதிர்பார்ப்பில்......