பெண் எழுத்தும் சிறுகதைகளும்
(9.8.2023 அன்று கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடந்த
சாகித்ய அகாடெமி கருத்தரங்கக் கட்டுரை)
Women’s Writing and Short Stories
Sahitya Akademi
Nari Chetna programme
பெண் எழுத்தும் சிறுகதைகளும்
(படைப்பாக்கம்: து. அகிலா
எழுத்தாளர், மனநல ஆலோசகர்
கோயம்புத்தூர்)
பெண் எழுத்து
பண்பட்ட அறிவார்ந்த சமூகம் என்பது தனி மனிதனின் விருப்பங்கள், முன்னெடுப்புகள், ஏமாற்றங்கள், மனமுறிவுகள், மகிழ்ச்சிகள், வருத்தங்கள் போன்ற அகவெளிபாடுகளை மட்டுமன்றி, சடங்குகள், சம்பிரதாயங்கள் அவற்றின் மீதான மதவொழுக்க கோட்பாடுகள், வர்க்கரீதியான பாகுபாட்டுக் குறியீடுகள், சாதீய நிலைபாடுகள், மொழி மற்றும் வரலாற்றுக்கூறுகள் என்று புறவயப்பட்ட கட்டமைப்புகளையும் சுமந்துக்கொண்டே இயங்குகிறது. காலம்காலமாய் அவன் படைக்கும் இலக்கியங்களும் மனிதனையும் அவன் இயங்கும் இச்சமூகத்தையும் குறித்து பேசிவருவதும், அதன் வழியே மொழி அதன் திண்ணத்துடன் வளர்ந்து வருவதும் கண்கூடு.
படைப்புலகில் பெண்கள் எழுதும் படைப்புகளின் அவசியம் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. இங்கு இரண்டு கண்ணோட்டங்களை எடுத்துக் கொள்வோம்.
ஒன்று, ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகள் குறித்து நாவலாசிரியர் துர்கனேவ் சொல்லும்போது, ‘அவரின் கதைகளில் இருக்கும் தத்துவார்த்த மனநிலை, நமக்குள் நிறைய கேள்விகளை எழுப்பிவிட தவறியதில்லை’ என்கிறார். ஒவ்வொரு படைப்பும் இவ்வாறான கேள்விகளை எழுப்ப தவறுவதில்லை. அதுதான் அந்த படைப்பின் மிகப்பெரிய உன்னதம்.
இரண்டு, கட்டுரையாளர் ஜோசப் பிராட்ஸ்கி (Josepy Brodsky) ‘Less Than One: Selected Essays’ என்னும் கட்டுரையில், 'படைப்பாளியின் சுயம் வெளிபடாத படைப்புகள் இல்லை' எனச் சொல்கிறார்.
இவ்விருக்கூற்றுகளையும் சரிவர நாம் நோக்கும்போது, ஒரு படைப்பாளியின் பால் பாகுபாடும் இதில் சில விழுக்காடுகள் பங்கேற்கும் உண்மை புலப்படும். பெண் படைப்பாளியின் சுயம் பெண்ணாகவே, பெண் உணர்வாகவே வெளிப்படும் என்பதும், அத படைப்பில் அவர் நம்முள் எழுப்பும் கேள்விகள் பெண் குறித்த புரிதலுக்கு நம்மை இட்டுச்செல்லும் என்பதும் உண்மை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் பெண்களின் நிலை, பெண்கல்வியின் அவசியம், பெண்சிசு கொலை, குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்றவற்றைப் பற்றி பெண்கள் பேசவேண்டிய எழுதவேண்டிய அவசியங்கள் இருந்தன. பெண்கள் தீவிரமாக எழுதத் தொடங்கிய காலகட்டமும் அதுதான். பெண் சமூக உளவியலை, பெண் படைப்பாளிகளால் நேர்த்தியாக தங்கள் படைப்புகளில் வைக்க முடிந்தது எனலாம். இம்மாதிரியான பெண்ணெழுத்துகளின் மூலமே பெண் குறித்த சமூக பார்வைகள் நமக்கு அதிகமாய் கிடைக்கப்பெறுகின்றன என்றும் கூட சொல்லலாம். இதுதான் பெண்ணெழுத்தின் அவசியம்.
கவிதைகளில் பெண்ணுக்கான படிமங்களாய் உறைந்திருந்த மலர், நிலா, நாணம், மென்மை, கற்பு போன்ற சொற்கள் இன்று அர்த்தமற்றதாக மாறி காலங்கள் ஆகின்றன. எண்பதுகளில் எழுதிய மூத்த பெண் கவிஞர்கள் இரா மீனாட்சி, திரிசடை, கிருஷங்கனி போன்றோரின் கவிதைகளே அதற்கு சான்றாகி, அதன் பின்னான சுகிர்தராணி, சல்மா, குட்டி ரேவதி போன்றோரின் விளிம்புநிலை பெண்களைக் குறித்த கவிதைகள் பெண்ணெழுத்துலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது எனலாம். பெண்ணின் படைப்புலகம், அவர்கள் எழுதும் புனைவுகளில் பெண்ணுலகின் அழகியலையும் அறவியலையும் மட்டுமல்லாமல் அவர்களின் ஆக்ரோஷ உலகையும் வெளிப்படுத்தியதைக் காணலாம்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சமகால பெண்களின் சமூக பிரச்சனைகளான, அதாவது பெண்கள் படித்து, வேலைக்குச் செல்லத்தொடங்கியிருந்த ஒரு காலகட்டம் அது.. பாலியல் வன்முறை, விவாகரத்து, இரண்டாம் விவாகம், போன்றவற்றைக் கொண்ட படைப்பாக்கங்கள் வரத்தொடங்கின. இன்றைய பெண் எழுத்துகளில் பெண்ணை புரிந்துக்கொள்ளவே முடியாது என்னும் கோட்பாடுகளை உடைக்கும்வண்ணம், பெண்ணின் மனம் சார்ந்த வெளிபாடுகளும், உடல் அரசியலும், பணியிடம் சார்ந்த பாலியல் சீண்டல்கள், குழந்தை பெறுதல் குறித்த விழிப்புணர்வு, தனியொரு பெற்றோராய் சமூகத்தில் வாழுதல் போன்றவைக் குறித்து வெளிப்படையாக படைப்புகள் மூலம் பேசப்படுகின்றன.
சமகால தமிழிலக்கியத்தில் பெண்களால் படைக்கப்படும் புனைவுகளில் எழுத்துமுறை மாற்றங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நவீனத்துவத்தின் கூறுகளைத் தங்கள் எழுத்துகளில் கையாளுவதில் பெண் படைப்பாளர்கள் தனி கவனம் கொள்கிறார்கள். வரவேற்கத்தக்க மாற்றங்களை இன்றைய பெண் எழுத்துலகம் கண்டு வருகிறது.
பெண்களின் சிறுகதையுலகம்
“ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் பெண்ணினம் முழுமைக்காகவும் எழுந்து நிற்கிறாள்.”
என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியலாளருமான மாயா ஏஞ்சலோ.
ஔவையாரில் தொடங்கி இன்றுவரை பெண்ணெழுத்தின் அவசியத்தை சமூகமும் இலக்கியமும் வெளிப்படுத்திக்கொண்டே வருவதைக் காணலாம். சமூக வாழ்வின் நேரும் பெண் விடுதலை சிந்தனைகளின் கூறுகள் படைப்பிலக்கியங்களில் வெளிபட தொடங்கி காலங்கள் ஆகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் பெரும்பான்மை, குடும்பத்தில் இருந்து பெண்ணின் விடுதலை மற்றும் உரிமைகள் குறித்து பேசின. ஆணும் பெண்ணும் நிகரென கொள்ளும் குடும்ப வாழ்வே சமூகத்தின் அடித்தளம் என்று பேசின. சமையலறையும் வீடும் மட்டுமே பெண்ணுக்கானது அல்ல, கல்லூரியும் அலுவலகமும் பெண்ணுக்கானதே என்று பேசின. பெண் கல்வி மற்றும் குடும்ப உரிமைகள் குறித்தும் பொதுஜனப் பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட கதைகளால் வீட்டில் இருந்த பெண்களிடம் மனமாற்றம் ஏற்பட்டதை மறுக்கவியலாது.
பெண் சமையலறை கடந்து வெளியுலகை எட்டிப்பார்த்த காலகட்டத்தில் அவளின் சமூக அச்சங்கள், கல்வி, பொருளாதார மேன்மை, அலுவலக வாழ்க்கை, குடும்பம் என்ற அனைத்தையும் சித்தரிக்கும் கதைகளாக எழுதியவர்கள்தாம் அம்பை, சிவசங்கரி, வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, அனுராதா ரமணன் போன்ற பலர். இவர்களின் சிறுகதைகள் அன்றைய இருபதாம் நூற்றாண்டின் பெண்கள். இந்த பெண் கதாபாத்திரங்கள் ஆணின் அடுக்குமுறையை எதிர்க்கும் புரட்சி பெண்களாகவும், வரதட்சணை கோரும் மாப்பிள்ளை வீட்டாரை மறுப்பவர்களாகவும், திருமணத்தில் தன் அபிப்பிராயம் கோருபவர்களாகவும், காதல் மணத்தை அதிகம் ஆதரிப்பவர்களாகவும், கல்லூரி சென்று கல்வி கற்பவர்களாகவும், பணிக்கு செல்லும் பெண்களாகவும், அலங்கார விரும்பிகளாகவும், உடை கலாசாரத்தை மாற்றி அமைப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ பேசும் பெண்ணின் நுண்ணரசியல் பேசப்படவேண்டிய ஓன்று. சமையலறையை தவிர, வெளியுலகம் தெரியாத பெண்ணின் கடைசிகால வாழ்வின் உளவியல் குறித்து பேசுகிறது. திருமணம் என்று ஆனால், புகுந்த வீட்டில் சமையலறையை தன் கைக்குள் கொண்டுவருவதே பெண்ணின் மிகப்பெரிய இலட்சியமாய் போதிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி பேசுகிறது இக்கதை. அம்பையின் கதைகளில் பெண்ணின் விடுதலை நோக்கு குறித்த பார்வை தெளிவாய் முன்வைக்கப்படுகிறது. அதுவே அவரை தேசிய அளவில் பேசப்படும் படைப்பாளியாய் உருவெடுக்க வைத்தது எனலாம்.
சிவசங்கரியின் ‘சோறு ஆறுதுங்க’ என்னும் சிறுகதையில், பெண்ணை ஆக்ரமிக்கும் ஆணின் ஆணவம் தெளிவாய் சுட்டப்படுகிறது. சினிமாவில் இயங்கிய ஒருவன் அதை விட்டுவிட்டு சொந்த ஊரில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து வாழ்கிறான். பெண்கள் குறித்த நல்ல அனுமானத்துக்கு அப்பாற்பட்ட கருத்துகளுடன் இருக்கும் அவன், வீட்டு வேலை செய்யும் புதிய பெண்ணொருத்தியைக் கண்டதும் அவளை அடையும் நோக்கில், தனது உதவியாளனை அழைக்கிறான். இவன் அந்த பெண்ணுக்கு தூண்டிலாய் கொடுக்க, வாங்கி வைத்திருக்கும் பிரியாணியை, வாத நோயால் படுத்தபடுக்கையாய் இருக்கும் கணவனுக்குக் கொண்டு செல்லும் கவனத்திலே இருக்கும் அவள், ‘நீ என்னைச் சட்டுபுட்டுன்னு அனுப்பிச்சா சூட்டோடே அதுக்குக் கொண்டு கொடுப்பேன் – அனுப்பிடறயா’ என்று தன்னுடைய வறுமையைச் சாதகமாக்கும் அந்த ஆணின் வக்கிரம் தெரியாமல் கேட்கும், பெண்ணின் இயலாமையும் அறியாமையும் புரியவருகிறது நமக்கு.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கதைகள் சமையலறையே பெண்ணுக்கானது மட்டுமல்ல, ஆணுக்கானதும்தான்; குழந்தை பராமரிப்பிலும் ஆணுக்கு பங்குண்டு என்பதையும் எடுத்துரைத்தன. இன்று அக உணர்வுகளை வெளிபடுத்தும் கதைகளின் தளம் கூடியிருக்கிறது. இன்றைய பெண் எழுத்துகள் நவீன எழுத்துமுறையை கையாளவும் அவற்றுள் தங்களின் அக உணர்வுகளை கதையில் முதன்மைபடுத்தவும் தொடங்கியிருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் ‘என் கதை’ எழுதிய கமலா சுரையா சந்தித்த சமூகம் கொடுத்த உளைச்சலை இன்றைய பெண் படைப்பாளுமைகள் அசாதாரணமாக தங்களின் எழுத்தின் மூலம் கடந்து வருவதைக் காணும்போது பெண்களின் எழுத்துலகம் மாறிவருவதை பேருவப்போடு காணலாம்.
சமகால சிறுகதைகள் எழுத்துலகில் பெண் படைப்பாளிகளான உமா மகேஸ்வரி, கலைச்செல்வி, அகிலா, சல்மா, லாவண்யா சுந்தரராஜன், பிரமீளா பிரதீபன், ஐ கிருத்திகா, அம்பிகாவர்ஷினி, மலர்வதி, ஜா தீபா, விஜி முருகானந்தம் போன்றோரின் சிறுகதைகள் பெண் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் களமாக விளங்குகின்றன. பெண்ணின் சமூக சிக்கல்களை ஆராயும் இவ்வெழுத்துகள், அவர்களின் உடல் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் சேர்த்தே பேசுகின்றன.
‘மரப்பாச்சி’ என்னும் சிறுகதையில், உமா மகேஸ்வரி அவர்கள் பேசும் பெண் உளவியல் மிகப் பெரிது. மரப்பாச்சி பொம்மையின் உருவில் தோழியை, சக உணர்வாளியை பார்க்கும் சிறு பெண்ணொருத்தி, காதலின்பால் மயக்கமுறும் பொழுதில் மயிரடர்ந்த மார்பினை கொண்ட இளம் வாலிபனை கனவுகாணும் சொந்தத்தையும் மரப்பாச்சியிடமே காண்கிறாள். தன் உடம்பின் மீது ஆதிக்க செலுத்த முயலும் மாமாவினால் அவளின் கனவுகளின் இனிமை தவிடுபொடியாகிறது. உடல் என்பதன் மீதான அசூயை அவளை மரப்பாச்சி பொம்மையிடம் இருந்து விலக்குகிறது. மரப்பாச்சியை விட்டு விலகும் இந்த செயல், உடல் சிராயும் உலகத்துள் அதிரடியாக இழுத்து வரப்பட்டு தன் குழந்தைத்தனத்தை இழக்கும் வளரிளம் பெண்களின் உளவியலை சொல்கிறது. யதார்த்தம் வேறாகவும் கற்பனை உலகம் வேறாகவும் சிதைந்து வாழ்தல், வளரிளம் பெண்களுக்கு பெரும் மனச்சோர்வை உண்டுபண்ணும் என்பதை இக்கதையில் சுட்டுகிறார்.
லாவண்யா சுந்தரராஜனின் ‘செண்பகா சித்தி’ என்னும் கதை பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. ஒரு பெண், அவள் அம்மாவாக இருக்கட்டும், சித்தியாக இருக்கட்டும், பாட்டியாக இருக்கட்டும், மனைவியாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் பெண்கள் என்றால், நெகிழ்ந்த உடை உடுத்தக்கூடாது, சிறுவயதில் இருந்து ஆணுக்குப் பிடித்தமானதாக இருந்த செயல்கள் இறுதிவரை அவனுக்குச் செய்யப்பட வேண்டும், பிடித்தமான சமையல் செய்யவேண்டும், தோசையைக் சூடாக ஊற்றிக் கொடுக்கவேண்டும், வீடு கவனிக்க படவேண்டும், அன்பு, பாசம், பரிவு என்ற பெண்களுக்கான இலக்கணங்களில் குறைவு பட்டுவிடக் கூடாது என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிச்செல்லும் கதை இது. கதையின் நாயகன் திருமணம் ஆகாத இன்றைய இளைஞன். சிறுவயதில் தான் கண்டு ரசித்த அதே சித்தியே தனக்கு வேண்டும். திருமணமான குழந்தை பெற்ற சித்தியை அவன் வெறுக்கிறான், அவள் முன்பு மாதிரி பாசம் காட்டுவதில்லை என்பதற்காக. அவளின் ஆடை அலங்காரங்களில், அலுவலக பரிமாற்றங்களில் குறை காணுகிறான். பெண்ணை உடைமையாகக் கருதும் போக்கும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. அவளின் சிறு மீறல்கள் கூட பெரும் பிரளயமாக, அவள் தன்னை விட்டு போய்விடுவாள் என்னும் சந்தேகமாக, பயமாக உருக்கொள்ளும் சாத்தியங்களை, தன் குடும்பத்து பெண்களை தான் விரும்பும் பார்வையிலேயே வைத்திருக்க விரும்பும் ஆண்களின் செயலை இக்கதை சொல்லிச் செல்கிறது.
ஜா தீபா அவர்களின் ‘ஊறா வறுமுலை’ கதையில், குழந்தையில்லா பெண்ணை கோவில் கோவிலாக அழைத்துச் செல்லும் கணவனை காட்டுகிறது. அவளின் வழியாக அந்த திரௌபதி அம்மனே பதில் சொல்வதாக கதை முடிகிறது. தவமிருக்கும் திரௌபதி அம்மனின் சிலையைப் பார்த்து பேச்சி என்னும் அந்த பெண் கதாபாத்திரம்,
“ஆம்பளைங்க மாதிரி எல்லாத்தையும் தூரப்போன்னு உதறிட்டா பொம்பளைங்க தவமிருக்க முடியும்.. ஆளு அழகா சேலை கட்டி நெத்தியில சந்திரா சூரிய நெத்திச்சூட்டி எல்லாம் வச்சிக்கிட்டுல்லா தவம் இருக்கா..’, பேசுவதாக வரும் இடம் சிறப்பு.
ஆசிரியர் ஓரிடத்தில் சாமிக்கு உடை மாற்றுவதை இவ்வாறு எழுதுகிறார்:
‘திரௌபதி அம்மனுக்கு வேறு சேலை அணிவிக்கப்பட்டது. பாண்டவர்களுக்கு திரை கட்டாமல் வேறு துண்டு வேட்டிகள் மாற்றப்பட்டன.’
சேலை கட்டும்போது மறைவு இருந்ததை சொல்லாமல், வேட்டி கட்டும்போது திரை மறைப்பு இல்லாமல் போனதைச் சொல்கிறார். பெண் எப்போதுமே ஓர் உடைமைதான் என்பது இங்கு சொல்லாமல் சொல்லப்படுகிறது.
ஐ கிருத்திகாவின் ‘சுமை’ என்னும் சிறுகதை ஏழ்மை நிலையில் இருக்கும் தாயொருத்தியின் கையறு நிலையை உறக்கப் பேசுகிறது. இறந்து போன கணவனின் அரை மாத ஓய்வூதியத்தில் ஜீவிக்கும் ஒரு தாய், தனது மகளின் திருமணத்தை குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து நடத்துகிறாள். மகளின் பிரசவம் மற்றும் குழந்தை சீர் போன்றவற்றிற்கான பணம், சிசேரியன் பிரசவ செலவுக்கே சரியாகிவிடுகிறது. மகளின் மாமியார், குழந்தை பிறந்ததும் சொன்னது தினமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது அவளுக்கு.
“குழந்தைக்கு ஒரு பவுனில் செயினும் அரை பவுனில் வளையலும் போட்டிருங்க. இன்னும் மூணு மாசமிருக்கே.. நீங்க செய்வீங்க..”
வீட்டுக்குவந்து செல்லும் உறவினர்கள், மறுமகன் போன்றோருக்கான சமையல், குழந்தை பராமரிப்பு, மற்றும் வீட்டுச்செலவுக்கென மளிகைக்கடன் ஏறிக்கொண்டே செல்கிறது. ஒரு நாள் மகள் சொல்கிறாள், ‘அம்மா! பாரேன்.. குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறாள்..’ என்று. இவளும், ‘மூணு மாசமாச்சுல்ல.. முகம் பார்க்கத்தானே செய்யும்..’ என்று. அவளுக்குள் இப்போது மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட அழுத்தம் வருகிறது. மீண்டும் அவளுள், ‘ஒரு பவுனில் செயினும், அரை பவுனில் வளையலும்..’ ஓடத்தொடங்குகிறது என்று முடிகிறது கதை. இந்த கதை அவள் அதற்கு என்ன செய்தால் என்னும் முடிவை நமக்குச் சொல்லவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கதைகளில் சொல்லப்பட வேண்டும் என்பதில்லை. நிலையை உணர்த்தினால் போதுமென ஆசிரியர் நிறுத்தியிருப்பதில் ஒரு சோகம் வாசிப்பவரின் எண்ணக்கிடங்கை சற்று அசைத்துப் பார்க்காமல் விடுவதில்லை.
இந்த இடத்தில் உமா மகேஸ்வரியின் ‘வருகை’ என்னும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. அதை, மாப்பிள்ளையின் அம்மாவின் முன் கைகட்டி, தலைகுனிந்து குறுகி நிற்கும் பெண்ணைப் பெற்றஒரு தகப்பனின் அவலத்தை உமா மகேஸ்வரி அவர்கள், ‘நாற்காலி கூட அப்பாவை விட உயரமாய் தெரிகிறது’ என்று குறிப்பிடுகிறார்.
பெண்ணியம் செல்வகுமாரியின் ‘கூடையில் ஒழுகும் ஈரம்’ என்னும் சிறுகதையில், மீனவ சமூக பெண்ணொருத்தி, கணவன் இல்லாத கையறு நிலையில் அதிலிருந்து மீண்டு வர மீன் விற்று குழந்தைகளை வளர்த்தெடுக்கிறாள். பெண்களின் இம்மாதிரியான சாமர்த்தியத்தை மட்டும் அதில் சொல்லிவிடு நின்றுவிடாமல், மீன் கூடையுடன் பொது பேருந்தில் பயணிக்கவியலா சங்கடத்தையும் அதனால் பிடித்துத் தள்ளப்படுவதையும், செய்யும் வேலையில் நேரும் சமூகத்தின் புறக்கணிப்பையும் பதியவைத்திருப்பார்.
கலைச்செல்வியின் ‘கட்டுக் கழுத்தியம்மன்’ சிறுகதை, சமூக கட்டாயமான குழந்தை பிறப்பை முன்னிலைபடுத்தும் சமூகத்தின் மூடநம்பிக்கைகளும் ஆணாதிக்க சிந்தனைகளும் பெண்ணுக்கான தடைகளாக எவ்வாறு அமைகின்றன என்று சுட்டுகிறது. பெரும்தனக்காரரான தன் கணவன் அவரிடம் உள்ள குறையால், தன்னை அணுகாமல் இருப்பதையும், அதனால் குழந்தையின்மையையும் தன் தாயிடம் பகிரும்போது, அந்த தாய் கொதித்தெழுகிறாள். அதை காணும் அப்பெண்ணின் கணவன், பெண்களுக்கு இத்தனை அடங்காத்தனமா என்னும் ஆண் ஆளுமையில் அவர்களை தீயிட்டு கொளுத்துகிறான். மௌனியாய் அதை காணும் அவரின் தம்பி அதற்கு வாழ்நாள் சாட்சியாய் இருக்கிறான். இறந்த தன் மனைவியை ‘பிள்ளைத்தாச்சி இறந்துவிட்டாள்’ என்று பொய் சொல்லி கோயிலும் எழுப்புகிறான். அதில் திருவிழாவும் நேர்த்திகடன்களும் பெண்களால் வழிவகையாய் நடத்தப்படுகின்றன என்னும் நிதர்சனத்தை சொல்லியிருப்பார் கலைச்செல்வி.
அகிலாவின் ‘நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க’ என்னும் சிறுகதையில், தாயற்ற தன்னை அணுகும் தகப்பனை விலக்கி வைக்க தினமும் போராடி வாழும் பெண், அவன் இறந்து போகும் சமயம், அழாமல் அமர்ந்திருக்கிறாள். கதையின் முடிவில் ஆசிரியர் எழுதுகிறார் :
“‘ஆம்பளங்க யாராவது வந்து காலு விரல இழுத்து கட்டுங்கப்பா..’ என்று யாரோ சொல்ல, டெய்லர் சதாசிவம் தன் கையில் வைத்திருந்த ஒட்டுதுணியை வைத்து விரல்களை கட்டிக்கொண்டிருந்தார்.
‘அப்படியே மூக்கில பஞ்ச வச்சிருங்கண்ணே..‘ என்றாள் அமுதா சத்தமாக. மல்லிகாவும் ஜெகனம்மாவும் ஒருசேர அவளைத் திரும்பிப்பார்த்தார்கள். வெயில் சூடேற தொடங்கியிருந்தது.”
பிரமீளா பிரதீபனின் ‘அது புத்தனின் சிசுவல்ல’ என்னும் சிறுகதையில், சித்தார்த்தன் வெளியேறிய பின்னான யசோதாராவின் நிலையை இன்றைய நவீன காலத்து பெண்ணுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்புகிறார். ‘ராகுலன் பிறப்பான், ஆனால் அவன் புத்தனின் சிசுவல்ல..’ என்கிறார். பெண் உரிமைக்கான கட்டுடைப்புகள் அவரின் பல கதைகளில் நேருகின்றன. ‘உரப்புழுக்கள்’ என்னும் சிறுகதை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் அன்றாட வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது. ஆண்களின் உடல் வன்மங்களுக்கு பலியாகும் அப்பெண்களின் அவலநிலை, கட்டிய கணவனே அடுத்தவனுடன் அவளைப் பகிரும் சோகம், அதனால் வெறுப்புறும் பெண் எடுக்கும் வித்தியாசமான ஆனால் அதே போன்றதொரு முடிவு போன்ற பெண் வாழ்வின் நெருக்கடிகள் இக்கதை முழுவதும் பேசப்படுகின்றன.
மலர்வதியின், ‘லில்லி பெண்ணுக்கு அப்பனில்லை’ என்னும் கதை கன்னியாகுமரி மாவட்டத்து வட்டார வழக்குமொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தகப்பனில்லா சிறு பெண்ணின் உள்ளக்கிடங்கைச் சொல்கிறது. அவளின் தாய் அவள் தகப்பன் இறந்துவிட்டான் என்பதைச் சொன்னபோதும், அவளின் குழந்தை மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. 'அப்பன் மாதிரி' என்று நினைக்கும் அவளின் அப்பனின் கூட்டுக்காரன் நல்லவனில்லை, தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்கிறான் என்று தெரிய வரும்போது, அவள் அவளின் தாய் சொன்னதை நம்புகிறாள். ‘எனக்கு அப்பனில்லை.. வேறு யாரையும் அப்பனாக நினைக்கவும் முடியாது’ என்பதையே. பெண் குழந்தையைக் கூட ஆண் சமூகம் பார்க்கும் விதமே வேறு என்பதை இக்கதையில் காட்டியிருப்பார் ஆசிரியர்.
அராபிய பெண்ணியச் சிறுகதைகள் தொகுப்பில் (தமிழில் ஜான்சி ராணி) இருக்கும் பெண் படைப்பாளிகளுள் ஷரீஃபா அல் ஷம்லான், பத்ரியா அல் பிஷீர், டெய்ஸி அல் அமீர் போன்ற பெண் படைப்பாளுமைகளின் சிறுகதைகள் பெண்ணிய பேசுபொருளாய் வாசிக்க கிடைக்கின்றன.
ஷரீஃபா அல் ஷம்லான் அவர்களின் ‘இரகசியம் மிக இரகசியம்’ என்னும் சிறுகதையில் வரும் படித்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண் தனது கணவனின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட வேறொரு உறவு குறித்து அறிந்ததும், அந்த உறவை கலைத்துவிட்டு, சமூக கட்டாயத்துக்காக ஒன்றும் நேராதது போல அவனுடன் சேர்ந்து வாழ்தல் என்பதாக செல்கிறது கதை. அவன் அவளை ‘நீ மிக நல்லவள்’ என்று புகழும்போது, தான் தன் கணவனை மீட்டெடுத்து வந்ததை ‘இரகசியம், மிக இரகசியம்’ என்று அவள் சொல்வது இன்னும் வேதனை என்கிறார் ஆசிரியர்.
பத்ரியா அல் பிஷீர் அவர்களின் ‘புதன்கிழமை நாட்குறிப்புகள்’ என்பதில், குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தும் கணவனை வெறுத்தாலும் மற்றைய பொழுதுகளில் அவன் தன்னையும் தன் குழந்தைகளையும் சரியாகத்தான் கவனிக்கிறான் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கும் பெண்ணின் மன உளைச்சலைச் சொல்லும் கதை இது. பொறுமை என்பதற்கு பெண்ணின் அளவுகோல் என்னவென்பதை வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் கதை இது.
டெய்ஸி அல் அமீர் அவர்களின் ‘பூனை, பணிப்பெண், மனைவி’ சிறுகதையில், பணக்கார வீடு, அதில் தன் போகத்துக்கு வாழும் கணவன், அவனை தட்டிக் கேட்கவியலாத கையறு நிலையில் மனைவி என்று போகும் இந்த கதையில், அவர்கள் வீட்டு பணிப்பெண்ணானவள், எநாத் எஜமான் கோபப்பட்டான் என்னும் காரணத்திற்காக அந்த வீட்டை, வேலையைத் துறந்துவிட்டு சுயமரியாதையுடன் வெளியேறுவதைப் பார்க்கும் மனைவியும் அவளின் பூனையும் என்று முடிகிறது கதை. சமூக கட்டமைப்புக்குள் சிக்கி வெளியேற முடியாமல் உழலும் பெண்களை அதிகமாகப் பேசுகின்றன அராபிய நாட்டு பெண்களின் கதைகள்.
சிறுகதைகளில் ஆண்-பெண் உறவு:
மலர்வதியின் கதைகளில் வரும் கிறித்துவ இனத்துப் பெண்களாகட்டும், சல்மா படைக்கும் இஸ்லாமியப் பெண்களாகட்டும், தீபாவின் கதைகளில் வரும் இந்து பெண்களாகட்டும், பிரமீளாவின் கதைகள் காட்டும் சிங்கள பௌத்த மதத்துப் பெண்களாகட்டும், இனம், மதம், நிலப்பரப்பு கடந்து பெண் படைப்புகளை ஆராய்ந்தால், ஆண்களின் மீதான கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்றவை குறித்த நிலைபாடுகளை நாம் அறியலாம்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன் போன்றோரின் கதைகளில் வரும் பெண்களில் பெரும்பான்மையோர் ஆணின் ஆதிக்கத்துக்குள் சிக்கித் தவித்தாலும், தன் மகளிடம், ‘உன் அப்பாவைப் பற்றி உனக்கென்னத் தெரியும்.. அவர் ஆடாத ஆட்டமா..’ என்று பேசுபவர்களாகவும் ஆனால் தன்னைப் போலவே அவளும் ஆணுக்கு அடங்கி சாத்வீகமாய் வாழவேண்டும் என்று சொல்லித் தருபவர்களாகவும் இருந்தார்கள். பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் வீட்டிலிருந்து கணவனைத் திருத்த முயற்சி செய்பவர்களாக இருந்தார்கள். இருந்தும், சில பெண் கதாபாத்திரங்கள் கல்வி, வேலை என்று கணவனிடம் இருந்து விலகி வந்து வெற்றிகரமாக வாழ்ந்ததாக கதைகளில் பெண்ணுக்கான உத்வேகத்தைக் காட்டின.
இன்றைய பெண் கதைகள் காட்டும் சித்திரம் வேறு வகையிலானது. சமூக கட்டுப்பாடுகளை உடைத்து வெளிவரும் பெண்கள், தங்களின் கல்வி அறிவால், திறமைகளால், உயர்ந்ததொரு நிலையை பெண் சமூகம் எட்டியிருக்க காரணமாக இருப்பவர்கள். பெண் படைப்பாளிகள் இந்த சமூக பிம்பத்தின் பின்னிருக்கும் கடுமையான உளவியல் பிரச்சனைகளை ஆழமாக அலசுகிறார்கள் தங்களின் படைப்புகளின் வழியே. பெண்களின் உயர்வுக்குப் பின்னான ஆண் வர்க்கத்தின் உழைப்பு மெச்சப்படும் அதே சமயத்தில், பெண்களின் கல்வி, வேலை திறம், ஆடை சுதந்திரம், கலாசாரம் மீதான ஆண்களின் சந்தேகங்களால் குடும்பங்களில் பெண்ணுக்கு நேரும் அவமானங்களை வன்முறைகளை, அதனால் அவள் அடையும் மன ரீதியான பாதிப்புகள் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
வர்க்க வேறுபாடுகள் இன்றி, வேலைக்குப் போகும் பெண்களே இன்றைய பெண் சிறுகதைகள் முழுவதும் பயணிக்கிறார்கள். பணியிடங்களில் நேரும் துன்பங்கள், பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை இக்கதைகளில் காணலாம். ஆண் தோழமைகளுடன் ஆன புரிதலை எழுத்தில் கொண்டு வருகிறார்கள். வீட்டிலிருக்கும் ஆண்களின் இயல்பிலிருந்து அவர்கள் வித்தியாசப்படும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இன்றைய ஆண் சமூகத்தை சற்றேறக்குறைய சரியான கோணத்தில் அணுகுகிறது இந்த பெண் படைப்புலகம் எனலாம். இம்மாதிரியான பெண் படைப்புகள், பெண்களின் அக வெளிபாடுகளை, திறமைகளை, உணர்வு ஓங்குதலை, வாதத்திறமையை எடுத்தியம்பும் அதே நேரத்தில், அதற்கான ஆணின் இணையான மற்றும் எதிர்வினைகளையும் சொல்லிச் செல்கின்றன எனலாம். இப்படைப்புகள் பேசும் யதார்த்தங்கள் ஆண்களின் உலகில் ஒரு மாற்றத்தை எதிரொலிக்கவே செய்கின்றன.
இன்றைய பெண் எழுத்துகள் பூட்டிய வீடுகளுக்குள் இருந்து எழுதப்படுவதில்லை. பணியிடங்களில், பயணங்களில், மொத்தமாய் சமூகத்துக்குள் நின்று எழுதுகிறார்கள். இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நவீன கவிதைகளுக்குள் உடல் அரசியல் என்பதை சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோர் முன்வைத்து எழுதத்தொடங்கினார். இன்றைய சிறுகதைகளிலும் நாம் அதை காணலாம்.
மலர்வதியின் ‘பொட்டச்சி’ என்னும் சிறுகதை, ‘நீங்கள் என்னை மடத்துக்குள் தள்ளினாலும் என் உடலுக்கு நான் தீங்கு செய்யமாட்டேன். என் விருப்பத்தில் உள்ளவனுடன் நான் உறவில் இருப்பேன்’ என்னும் வாதத்தை முன்வைக்கிறது.
லாவண்யா சுந்தரராஜனின் ‘முற்றத்து அணில்’ சிறுகதை, உறவுகளுக்குள் நேரும் நேர்கோடு மீறிய உறவு சித்திரத்தைப் பதிய வைக்கத் தவறவில்லை. கணவனின் தம்பியுடன் ஆன உறவை நாசூக்காக கடத்துகிறது இக்கதை.
பிரமீளாவின் ‘ஓரிரவு’ கதை, ஓர் இரவில் நேரும் பெண்ணின் உடல் வேட்கையை, தூங்கவியாத பொழுதுகளை அவளின் மனவோட்டமாக நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.
பெண்ணின் உடல் அரசியல் குறித்து எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் குழந்தை கதாபாத்திரங்களே இல்லாமல் இருப்பதையும் நாம் கவனிக்கலாம்.
எடு: மலர்வதியின் ‘ஒரே ஒருக்கா கேசு கொடுக்கனும்’, சல்மாவின் ‘யுத்தம்’, லாவண்யாவின் ‘சப்தபர்ணி மலர்கள்’, அகிலாவின் ‘மிளகாய் மெட்டி’, ஜா தீபாவின் ‘நீ நான்’
இவை அனைத்துமே கணவன்-மனைவி பிரச்சனைகள் குறித்து அலசுகின்றன. கணவன் மனைவி உறவுக்குள் குழந்தை என்ற ஒன்று வருவதற்குள் உறவுக்குள் நேரிடம் பிணக்குகள், வாக்குவாதங்கள், யதார்த்த காலத்து பிரச்சனைகள், சந்தேகங்கள், பொருளாதார சண்டைகள் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. குழந்தைகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைகளில், குடிக்கும், சந்தேகப்படும் ஆண்களுக்கு எதிரான பெண்களின் போராட்டம் வேறு வடிவத்தில், பெண் குழந்தைகளைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தத்துடன் உருமாறுகிறது.
பெண்ணெழுத்தின் அவசியம்
உலகெங்கும் எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகளின் மொழி ஒன்றுதான். அவை பெண்ணுரிமை குறித்தே அதிகம் பேசுகின்றன. அவரவர்களின் இனம், நிலப்பரப்பு சார்ந்து கதைகள் படைக்கிறார்கள். யதார்த்ததில் பெண்ணுக்கான சுதந்திரம் விரிவடைகிறது எனினும், படைப்பு சுதந்திரம் இன்னும் முழுமையடைந்ததாக ஏற்க இயலாத சூழல் இன்றளவிலும் நிகழ்கிறது. பெண் படைப்புகள் பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த கட்டுடைப்புகளைச் சொல்ல இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன.
இங்குதான் கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின்,
‘நல்லது
பேசிக்கொண்டிரு
ஜாக்கிரதை
சப்தம் வெளி வராதிருக்கட்டும் ‘
என்னும் இக்கவிதை நினைவில் வந்து, பெண்ணெழுத்து கடக்க நினைக்கும் தூரம் அதிகம் என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
பெண்ணின் மனதை, உடல் அரசியலை, சமூக புறக்கணிப்புகளை பேசவும் எழுதவும், அவற்றை இச்சமூகம் வாசிக்கவும் ஏற்கவும் பெண்மொழி, பெண்ணெழுத்து இன்னும் காத்திரமாய் வெளிவர நம் தமிழிலக்கியம் காத்திருக்கிறது. வரவேற்போம்.
பெண்ணெழுத்து
"பெண் தன் உணர்வுகளை, சிந்தனைகளை,
சமூகப்பார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய
அதிக கட்டாயத்தில் இருக்கிறாள்.
இங்கே பெண்ணெழுத்தின் தேவை இருக்கிறது.
பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை,
ஆண் பெண் எழுத்துகளின் இடையே இருக்கும்
மெல்லிய கோடு அழிக்கபடாமல் இருக்கும்"
~ அகிலா..
*********
அற்புதமான கோர்வையான உரை. உலகளாவிய படைபாளர்கள் முதல் மிக முக்கியமான படைப்பாளர்களாக வலம் வந்த பெண் படைப்பாளர்கள் பெயர்களுடன் சமகால பெண் படைப்பாளர்களின் அறிமுகத்தோடு, அவர்களுடைய முக்கியமான கதைகளுடன் கூடிய உரை மிக அருமை. பெண்களுக்கான படைப்புலகின் வலம் வரும் படைப்பளர்களுக்கான ஆக்கமும், ஊக்கமும் தரும் உரை. சிறப்பான உரை வீச்சுக்காக வாழ்த்துகள் பல.
ReplyDeleteமகிழ்ச்சியும் நன்றியும் தங்களுக்கு.. என் கவனத்தில் வந்திருக்கும் இன்றைய பெண் படைப்பாளர்களைக் குறிப்பிட்டு உள்ளேன். நன்றி..
Delete