Skip to main content

பன்னீர் பூக்கள்

பன்னீர் பூக்கள்


(சூரியகதிர் இதழில் வெளிவந்த சிறுகதை )


திருப்பிப் பிடித்த மரகரண்டியால், புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது, மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை எடுத்து மூடி வைத்துவிட்டு வந்து போனை எடுப்பதற்குள் அது நின்றுவிட்டிருந்தது.

யாரென்று எடுத்து பார்த்தால், ராம் அம்மா. இவ்வளவு காலையில் எதுக்கு கூப்பிட்டாங்க என்று நினைத்தபடி அவங்களுக்கு கால் செய்தாள் சுஜி.

போனை எடுத்தவுடன், 'ப்ரவீன் அம்மா, நம்ம நிர்மி அப்பா இறந்துட்டாங்க. தூக்கத்திலேயே உயிர் போயிட்டாம். நான் கிளம்பிட்டேன். நீங்க எப்போ வரீங்க?' என்று அவங்க சொல்லிகிட்டே போக, அதிர்ந்துவிட்டாள் சுஜி.

சன்னலின் வழியே பார்வை சென்றபோது, முற்றத்து பன்னீர் மரம் பூக்களுடன் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அதை கடந்து செல்பவர்கள், ‘மணக்கிறது..’ என்று சிலாகித்துச் சென்றார்கள். இவளுக்கு மட்டும் அதன் மணம் எப்போதாவது தான் நாசியைத் தொடுகிறது.

அடுப்படிக்குள் மறுபடியும் நுழைந்த போது, மூன்று நாட்களுக்கு முன் அந்த மனிதர் இதே இடத்தில், கைகளை ஆட்டி பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மூடியிருந்த சமையல் அலமாரியை ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து, 'உள்ளே கூட அழகா அடுக்கி வச்சிருக்கியேம்மா..' என்று அதிசயப்பட்டது கண்முன் விரிந்தது.

அவர் ஓர் அருமையான மனிதர். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் அன்று இவள் வீட்டுவாசலில் வந்து இறங்கியவரை, 'வாங்கண்ணா..' என்று வாய் நிறைய வரவேற்றாள்.  'வண்டியைத் திருப்பி நிப்பாட்டு. இப்போ வந்துடறேன்' என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார் அவர்.

அவர் மனைவிதான் அவர்களின் பிள்ளைகள் திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக இரண்டு முறை வந்திருக்கிறார்கள். இவர் வருவது இதுதான் முதல் தடவை. அவரின் ஆறடி உயரம் அப்படியே இருந்தது இப்போதும். இவரைப் பார்க்கும் போதெல்லாம் பழைய நடிகர் எஸ் வி ரங்காராவ்தன சுசியின் நினைவில் வந்து செல்வார். ஆஜானுபாகுவான பருத்த பெரிய உடல், இப்போது மெலிந்து துரும்பாகியிருந்தது. அந்த முகத்தில் சிரிப்பு மட்டும் இன்னும் மெலியாமல் இருந்தது.

உள் நுழைந்தவர், 'ராஜன் எங்கே, வேலைக்கா?, ப்ரவீன் எப்படியிருக்கான், யு ஸ் பிடிச்சிருக்கா அவனுக்கு....' என்ற கேள்விகளைப் தொடுத்துவிட்டு பதிலுக்காய் காத்திருக்காமல், வரவேற்பறை முழுவதையும் அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்வையிட்டார்.

ஹோம் தியேட்டராம்மா இது..என்று பெரிய டிவியைப் பார்த்து கேட்க, அவள் இல்லையென்று பதில் சொல்லும் முன், அறையின் மூலையில் இருந்த சிறிய பவுண்டன் முன் நின்று அதை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

அவர் வீட்டின் வரவேற்பறை இதைவிட பெரிதாகவும் அழகாகவும் இருக்கும் என்பது இவளுக்கும் தெரியும். ஒரு முறை சுஜியும் சுகன்யா அம்மாவுமாக அங்கே போனபோது, அவரின் மனைவியே பேசிக் கொண்டிருந்தார்கள். இவரைப் பேச விடவேயில்லை. ஒரு மூலையில் போட்டிருந்த சோபாவில் அமர்ந்து டிவியை மியூட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ஒரு மணி நேரமாக. வீட்டுக்கு வந்து ராஜனிடம் புலம்பி புலம்பி ஒய்ந்து போனாள் இப்படி ஒரு அடிமை மாதிரி ஆகிவிட்டாரே என்று. அன்று சிரிப்பு என்பதே அந்த முகத்தில் இல்லை. இன்று அந்த முகம் சற்று மாறியிருப்பது போல் தோன்றியது சுஜிக்கு.

முன் அறையில் ஈஸி சேர் போடவேண்டாம் என்ற தன் கோரிக்கையை நிராகரித்து, தன கணவர் ராஜன் போட்டு வைத்திருந்த ஈஸி சேரின் அருகில் சென்று, தொட்டுப் பார்த்து அதில் அமர்ந்து ஒரு சில வினாடிகள் கண்களை மூடிக் கொண்டார். முகம் கொள்ளா சந்தோஷம் தெரிந்தது அந்த மௌன நிலையில். இவளுக்கு என்ன செய்யவது என்பதே தெரியவில்லை. இத்தனை சோபா, சேர் எல்லாம் இருக்க இதில் போய் அமர்ந்திருக்கிறாரே என்று எண்ணினாள்.

'சுஜி...' என்ற ராஜனின் சத்தம் கேட்டதும், 'காப்பி போடவா உங்களுக்கு..' என்று கேட்டாள். 'ம்ம்..' என்ற பதிலுடன் நகர இருந்தவனிடம் ராம் அம்மா போன் பண்ணியதைச் சொன்னாள்.  'ஐயோ, இரண்டு நாளைக்கு முன்னதானே நம்ம வீட்டுக்கு வந்தார்ன்னு சொன்னே. அப்போ உடனே கிளம்பு, நாம போலாம். போய் பார்த்துட்டு அப்படியே நான் கிளம்புறேன். இன்னைக்கு மீட்டிங் இருக்கு. கமிஷனர் ஆபிஸ் போகனும்..' என்றபடி குளிக்கக் கிளம்பினான். எப்பவும் அவசரமும் டென்ஷனும்தான் ராஜனுக்கு. அவன் பார்க்கும் காவல் துறை வேலை அப்படி.

இந்த ஒழுங்கினால்தான், தான் இத்தனை வருடம் நல்ல பெயருடன் இருப்பதாய் சொல்லிக் கொள்வான். அது ஒரளவுக்கு நிஜமும்தான். அப்படி இருந்தவர்தானே இறந்த அந்த மனிதரும்.

ராஜன் சாப்பிட உட்கார்ந்தவன், 'நீ கிளம்பலையா சுஜி..' என்றான். சாவுக்கு போகனுமா வேண்டாமா என்று தான் யோசித்துக் கொண்டிருப்பதைச் சொன்னால், டென்ஷனாயிருவார் இவர் என்று நினைத்து, 'இல்லே, நீங்க போங்க, நான் வேலை ஒதுக்கிட்டு போய்க் கொள்கிறேன்..' என்று சொன்னாள். கண்களை இடுக்கி ஒரு சந்தேகப் பார்வை வீசிவிட்டு, 'ஒருத்தர்கிட்டேயும் ஒண்ணும் பேசமுடியாது இப்போ இருக்கிற காலத்தில..' என்ற முணுமுணுப்புடன் சாப்பிட்டு முடித்து கிளம்பினான்.

வள் சாப்பிட அமர்ந்தபோது, அவருக்கு அன்று சாப்பாடு பரிமாறியது நினைவிற்கு வந்தது. வெறும் ரசம் சாதமும் பருப்பும் பாகற்காய் உருளை வதக்கலும் தான். அதையே ரசித்து சாப்பிட்டார். இந்த மாதிரி சாப்பாட்டை தான் சாப்பிட்டதே இல்லையென்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய பிள்ளைகளின் கல்யாண சாப்பாட்டை அத்துனை பிரமாதமாய் சொல்வார்கள் நட்பு வட்டத்தில். என்னவாயிற்று இந்த மனிதருக்கு இன்று, என்றே அன்று நினைக்கத் தோன்றியது சுஜிக்கு.

ப்ரவீன் அமரும் பீன் பேக்கை பார்த்து என்னவென்று கேட்டார். சொன்னவுடன், உட்கார கூடியதா என்று வியப்புக் காட்டினார். இப்படியாகத்தான் வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருளையும் சிலாகித்தார். எங்கோ தொலைத்த சந்தோஷத்தை இங்கு வந்து இவள் வீட்டில் மீட்டெடுத்தது போல் இருந்தது அவரின் செயல்கள்.

காவல் துறையில் உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவர் எந்த நண்பர்கள் உறவினர்கள் வீட்டு நிகழ்வுகள் எதிலும் கலந்துக் கொள்வதில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு பிறகு, தன்னையே முடக்கிக் கொண்டார் என்றே தோன்றியது சுஜிக்கு.

முன்பு இருந்த குடியிருப்பில், ராஜனின் குடும்பம் அவரின் நேர் கீழ்வீட்டுக்கு குடிபோனபோது, ரெண்டு பெரிய பெண் குழந்தைகள் இருந்தது அவருக்கு. அந்த பெண்பிள்ளைகளின் திருமணம் முடியும்வரை அவர்கள் அங்குதான் இருந்தார்கள். அவர் ஓய்வு பெற்ற பிறகே சொந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள்.

அந்த யூனிபார்முக்கும் அவருக்கும் ஏதோ ஒரு ஜென்ம உறவு இருப்பதுபோல் இருக்கும். அவருக்கென்றே அது பிறந்திருப்பதுப் போல் ஒரு கம்பீரம் காட்டும். மிக நேர்மையானவர். அப்படிதான் இருந்தார் பிள்ளைகள் ஹைஸ்கூல் போகும்வரை. அதன் பிறகு காலம் அவரை நிறையவே புரட்டிப் போட்டது.

ஊரில் அவரின் குடும்பம் மிக ஏழ்மையானது. இவரின் பதவிக்கு பெரிய இடத்து சம்பந்தம் அமைந்ததும் அவர் மனைவியின் ஆடம்பரமும் அதற்கு பொருந்தாத இவரின் ஊர் பழக்கவழக்கங்களும் தினமும் இருவருக்குள்ளும் சண்டைக்கு வழிவைத்ததாக முன்பு ஒருமுறை அவரின் அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறாள் சுஜி.

அந்த குடியிருப்பில், அவருடன் பொழுதும் சண்டையிடும் அவர் மனைவியின் அதிகாரக் குரல் பிரபலம். அதை கேட்கும் யாரும், லஞ்சத்திற்கான அடித்தளங்களை அவ்வமயங்களில் புரிந்துக் கொள்ளலாம். இரண்டு பெண்பிள்ளைகளை முன்னிறுத்தியே அந்த ஆறடி உயரத்தை அடக்கியிருந்தார் அந்த பெண்மணி.

ஒரு கட்டத்தில், அவர் வீட்டுக்குள், அவரின் பிள்ளைகளுக்குள், ஆடம்பரமும் பகட்டும் நுழைந்த போது, அவரால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. அவர் ஓய்வு பெறும் காலம் நெருங்கிய சமயம், அவரின் மனைவிக்கு இன்னுமொரு தொடர்பு இருந்ததாக அவரின் கீழ் பணிபுரிபவர்கள் அவர் காதுபட பேசிக்கொண்டபோது, மீதமிருந்த அவரின் சிரிப்பும் தொலைந்து போனது. மொத்தமாய் முடங்கிப் போனார் அதன் பிறகு.

ப்போதுமே சுஜியை அவருக்கு பிடிக்கும். ஜீப்பில் ஏறும் முன் இவள் வீட்டின் வெளியே நின்றிருந்தால், பேசாமல் போகமாட்டார். இவளுக்குள்ளும் ஏதோ ஒரு பந்தம் அவரைப் பார்க்கும் போது தோன்றும். அதை சரியாய் வரையறுக்க முடியாமல் தோற்றுப் போவாள்.

அவருடைய அம்மா எப்போது ஊரிலிருந்து வந்தாலும் பகல் முழுவதும் இவள் வீட்டில் தான் இருப்பார்கள். இரவு படுக்க மட்டுமே மேலே ஏறுவார். அவருக்கு சாப்பாடும் கூட இவள் வீட்டில்தான். ராஜன் கூட ஒன்றிரண்டு தடவை கேட்டிருக்கிறான் ஏன் இங்கேயே இருக்காங்க என்று. மருமகளுடன் ஒத்துப் போகாததால் இங்கு வந்து இருக்கிறாங்க என்று சுஜியும் சமாதானம் சொல்லுவாள். ராஜனுக்கு சற்று பிடிக்காதுதான், இவளுடன் சண்டையிடும் மனநிலை இல்லாததால், நிறைய நேரங்களில் வீட்டு விஷயங்களில் இவள் போக்கில் விட்டு விலகிவிடுவான். இவளுக்கு அந்த அம்மாவிடம் ஒர் ஆத்மார்த்த அன்பு இருந்தது. அவர் எது கேட்டாலும் விழுந்து விழுந்து செய்வாள்.

ஒரு முறை உடம்பு சரியற்று போனபோது, இவள் வீட்டில் தான் மூன்று நாட்களும் தங்கியிருந்தார்கள். அவர், ஊருக்கு கூட்டிச் செல்ல வந்தபோது, கண்களில் கண்ணீர் மல்க நன்றி சொன்னது நினைவில் உண்டு சுஜிக்கு.

இதுவும் கூட ஒரு காரணமாயிருக்குமோ, இப்போது அவர் தன் வீட்டுக்கு வந்ததற்கு என்று யோசித்தாள் சுஜி. அன்று அவர் வந்து சென்றதை ராஜனிடம் சொன்னபோது, 'அவர் வீட்டை விட நம் வீடு சற்று சிறியது. அப்புறம் எதனால் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்..' என்று கேள்வியை ராஜனிடம் கேட்டுக் கொண்டிருந்த சமயம், ராஜன் தூங்கிப் போயிருந்தான். விடை தெரியா கேள்விகளுடன் அவளும் அன்று தூங்கிப் போனாள்.

அவரின் இறப்புக்கு பின், சில விஷயங்கள் தெளிவாய் புரியத் தொடங்கியது சுஜிக்கு. அவள் அவரை தெரிந்தவர், பக்கத்துவீட்டுக்காரர், துறை சார்ந்த உயர் அதிகாரி, தன் கணவனின் சீனியர் என்ற பார்வையிலேயே பார்த்திருக்கிறாள் என்பதும், எல்லோரும் தெரிந்த பெண்கள் வீட்டு கணவர்களை வாய் வார்த்தைக்காக அண்ணா என்று அழைப்பது போலதான் அவளும் அவரை அழைத்திருக்கிறாள் என்பதும், ஆனால் அவரோ அதை தாண்டி தன்னிடம் அவருக்கான ஓர் உண்மை அன்பை தனக்காகப் பகிர்ந்திருக்கிறார் என்பதும் சுஜிக்கு புரிந்தபோது, என்ன பெண் நான், சகோதர பாசம் என்பது ஒரு சிலரிடம் வெளிப்படுத்த முடியாமல் ஒளிந்திருக்கும் என்பது கூட புரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறோமே என்று வருத்தப்பட்டாள்.  

அவர் அன்று விடைபெற்றுச் சென்ற போது, அவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அளவில்லாதது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவருக்கு இந்த சந்தோஷத்தின் சாவி தன் வீட்டில் கிடைத்திருக்கவேண்டும். தான் ஒரு சகோதரியாய் அவருக்கு அதை கொடுத்திருக்கிறோம் என்று நினைக்கும் போதே அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.


தெரிந்த மனிதர் ஒருவரின் மறைவு தந்த கண்ணீரை விட இப்போது தமையனாய் நினைத்து வந்த கண்ணீரில் அதிர்ச்சியை விட அன்பு அதிகமாய் கலந்திருந்தது.  இரு நாட்களுக்கு முன் தான் பார்த்த அந்த சந்தோஷம் இன்றும் அந்த முகத்தில் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அழகான ஓர் அன்பை அடைகாத்திருந்த அந்த மனிதரைப் பார்க்கக் கிளம்பினாள் அவள். வாசலில் வெள்ளை நிறத்தில் சிதறிக் கிடந்தன பன்னீர் பூக்கள். 




Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...