வெற்றிடமாய் இருக்கும் இந்த நிமிடங்கள் எனக்கே எனக்கானவை... கவிதை வடிக்க எண்ணி காகிதம் தொட்டால் மை தொட்ட எழுதுகோலின் எழுத்து கூட வெள்ளையாய்.... என் வண்ணங்கள் கூட எண்ணத்தின் வழியை தொடமுடியாமல் எட்டிச் சென்றுவிட்டன.... ஒன்றுமில்லா ஒற்றை வீட்டுக்கு என்னை இழுத்து செல்லும் அந்த பாதை சருகுகளின் ஒதுக்கங்களில் ஒளிந்திருக்கிறது கால்கள் நடை நிறுத்த கட்டளையிட மனமோ பிரபஞ்சத்தின் மையம் நோக்கி... சிலந்தியின் முணுமுணுப்பை தாண்டி காய்ந்து போன ஓலைகளின் ஓட்டைகளின் வழியே வெளிச்சங்களை சாப்பிட்டு கொண்டிருக்கும் மேடான மண்தரையின் மீதமர்ந்து காகிதம் தொட்டால் அதில் வண்ணமாய் ஒரு கவிதை... எழுத்தாய் ஒரு சித்திரம்... காத்திருங்கள்... வெறுமையின் வீட்டையும் என் வசிப்பை வாசிக்கும் அளவுக்கு மாற்றிவிட்டு வருகிறேன்....