அகிலா
சொந்த ஊர் திருநெல்வேலி. முப்பது வருடங்களுக்கு மேலாக கோயம்புத்தூர் வசிப்பிடம்.
அப்பா துரைராஜ் காவல்துறை அதிகாரி. அம்மா சுந்தரி.
பெண்ணின் விருப்பத்திற்குரிய தலைவன் அவளின் தகப்பன்தான். ஆனால் அவளின் உந்துசக்தி, உத்வேகம் எல்லாவற்றிற்கும் பிறப்பிடம் அவளின் தாய்தான். சுயசிந்தனையை ஊக்குவிப்பவள் தாயே. என் தாயும் அவ்வாறே. யாரையும் நேருக்கு நேராக கண் பார்த்து பேசக் கற்றுக்கொடுத்தவள் அவளே. பெண்கள் குறித்தான என்னுடைய சிந்தனையின் பின்புலம் அவளே. வாழிய!!
செயல்பாடுகள்:
கடந்த பதினைந்து வருட காலமாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துத்துறைகளில் இயங்கிவருகிறேன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு என்று சுழல்கிறேன். தன்முனைப்பு பேச்சாளராகவும் பெண்ணிய சிந்தனைகளை விதைக்கும் பெண்ணியவாதியாகவும் கதைசொல்லியாகவும் கல்லூரிகளில், பொதுமேடைகளில், ஊடகங்களில், இணையத்தில் செயல்பட்டுவருகிறேன்.
நூல் அனுபவங்கள்:
பெண் என்னும் பார்வையில் வாழ்க்கை அனுபவங்களை கட்டுரைகளாக்கி இருக்கிறேன். எனது இருதய அறுவை சிகிச்சை அனுபவங்களை 'நின்று துடித்த இதயம்' என்னும் புத்தகமாய் கொண்டுவந்தேன். அதற்கு நெருஞ்சி படைப்பாளுமை விருது கிடைக்கப்பெற்றேன்.
இங்கிலாந்து சென்றுவந்த பயண அனுபவங்களை அந்நாட்டின் சமூகம், அரசியல், மக்களின் வாழ்வுமுறை போன்றவற்றை எழுத்தாக்கி, 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' என்னும் பயண இலக்கிய நூல் படைத்துள்ளேன்.
ஆங்கிலத்தில் 'I Named The Village' என்னும் கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது. 'தவ்வை' என்னும் முதிய பெண்ணின் கதையை சொல்லும் நாவல் படைத்துள்ளேன்.
பெண்ணைப் புரிந்துக்கொள்ள ஏதுவாக பெண் குறித்த சுவாரசிய கட்டுரைகள் கொண்ட 'நாங்கதாங்க பெண்கள்' என்னும் நூல் வெளிவந்துள்ளது. இந்த கட்டுரைகள் 'புதிய தரிசனம்' இதழில் வெளிவந்தவை.
மின்னூலாக 'காட்டிடைவெளி' என்னும் நூல், 'மனதின் ஓசை' என்னும் பகுப்புக்குள் வெளிவந்துள்ளது. அடுத்ததாய், 'மழையில் நனையும் புலுனிக்குஞ்சுகள்' வெளிவருகிறது. இதுவரை பதிமூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.
பன்னாட்டு தமிழ் கருத்தரங்கங்கள் பலவற்றில் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்துள்ளேன்.
அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை :
i) உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் சார்பில், 8.12.2017 அன்று மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற 'வைகைத்தமிழ்' கருத்தரங்கில், 'மதுரை வட்டார எழுத்தாளர்கள்' என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.
ii) மலேசியாவில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகம் 8.12.2018 அன்று சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடத்திய 'தமிழ் இலக்கியங்கள்: பன்முக நோக்கு' என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கில், 'படைப்பியலில் பெண் உளவியல்' என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.
iii) ஆஸ்திரேலியா (சிட்னி) தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்தியா ஆய்வியல் துறை இணைந்து, 31.3.2019 அன்று கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய 'பன்னோக்குப் பார்வையில் தமிழ்மொழியும் இலக்கியமும்' பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, 'சிறுகதைகள் வெளிப்படுத்தும் நடப்பியல் சமூகம்' என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.
iv) செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லூரி, தமிழ் உயராய்வு மையம், மற்றும் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணைந்து 5.4.2019 அன்று மதுரை செந்தமிழ் காலூரியில் நடத்திய, தமிழிலக்கியப் படைப்புகளில் பெண் பதிவுகளும் படைப்பாளுமைகளும்' என்னும் கருத்தரங்கில், 'பெண்ணெழுத்தின் விழுமியங்கள்' என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன்.
v) அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளா, தமிழ்த்துறையும் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய 'அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும்' என்னும் தலைப்பில், 'சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள்' என்னும் பொருண்மையில், நவம்பர் 8, 2023 அன்று நடத்திய, உரை நிகழ்த்தியுள்ளேன்.
v) சாகித்ய அகாடெமி, 24.3.2019 அன்று கோவையில் நடத்திய 'சமகால தமிழ்க்கவிதைகள்' என்னும் கருத்தரங்கில், 'நவீன கவிதைகளில் பெண்ணியம்' என்னும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.
vi) சாகித்ய அகாடெமி 9.8.2023 அன்று கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'நாறி சேதனா' என்னும் பெண் படைப்பாளுமைகள் சந்தித்த இலக்கிய நிகழ்ச்சியில், தலைமையேற்று, 'பெண் எழுத்தும் சிறுகதைகளும்' என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.
அகில இந்திய வானொலி:
அகில இந்திய வானொலியின் இலக்கிய நிகழ்ச்சிகளில் தனி உரைகளும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்று நவீன தமிழ் இலக்கியம் குறித்து உரையாடி வருகிறார். கல்லூரிகளிலும் தமிழ் இலக்கிய மன்றங்களில் மாணாக்கர்களுக்கு இலக்கியம் குறித்த உரைகள் ஆற்றிவருகிறேன்.
கோவை புத்தகத் திருவிழா 2019 யில், 65 பெண் கவிஞர்களைக் கொண்டு ‘பெண்பா’ கவியரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளேன்.
இலக்கியச் செயல்பாடுகள்:
கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்ந்து, கோவை இலக்கியச் சந்திப்பு, களம் இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், திருப்பூர் இலக்கிய வட்டம், பொள்ளாச்சி இலக்கிய வட்டம் போன்ற பல நேர்சந்திப்புகளிலும், இணையவழி இலக்கியச் சந்திப்புகள் பலவற்றிலும் சுமார் 100 நூல்களுக்கும் மேலாக நூல் திறனாய்வுகள் செய்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து, இரண்டு ஆய்வுக்கட்டுரை நூல்களும் வெளியிட்டுள்ளேன்.
ஆய்வில் என் நூல்கள்:
முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வுக்காக, எனது 'தவ்வை' மற்றும் 'அறவி' நாவல்கள், 'மண்சட்டி' சிறுகதை தொகுப்பு, மற்றும் கவிதை தொகுப்புகளை, அவனாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்கள் கல்லூரி, கோவை, பூசாகோ கலை அறிவியல் கல்லூரி, கோவை, மார்த்தாண்டம் அரசு கலைக் கல்லூரி, கன்னியாகுமரி, விக்டோரியா அரசு கலைக் கல்லூரி, சித்தூர், கேரளா, அரசு கலைக் கல்லூரி, சித்தூர், கேரளா கல்லூரி மாணவ மாணவிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கவனம் பெற்றவை:
சிறுகதை தளத்தில் வெகு காலமாக இயங்கிவருகிறேன். கல்கி, கணையாழி போன்ற பத்திரிக்கைகளில் எழுதிவருகிறேன். என்னுடைய யானைகளின் பாதைகள் குறித்த 'வலசை' சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டியில் (2017) இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 'மிளகாய் மெட்டி' என்னும் சிறப்பு கவனம் பெற்ற என் சிறுகதை தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் படைப்பாளுமை விருதைப் பெற்றுத்தந்தது. 'மண்சட்டி' சிறுகதை தொகுப்புக்கு தேனி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 'அசோகமித்திரன் நினைவு இலக்கிய விருது' (2019) கொடுக்கப்பட்டது.
பெண் குறித்த ஆளுமை செயல்பாட்டிற்காக, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் ‘பெண்ணியச் சிந்தனைச் சிகரம் விருது' (2020) கொடுத்து கௌரவித்தது. மற்றும் திருப்பூர் அரிமா சங்கத்தின் ‘அரிமா சக்தி விருது’ (2014), ஜெயவர்மம் அறக்கட்டளை, ஜெசீஸ், சிவோகா அறக்கட்டளை போன்றவற்றிலும் விருதுகள் பெற்றுள்ளேன்.
கல்வியும் பணியும் :
இளங்கலையில் பொறியியல் பட்டம், முதுகலையில் கணினி பயன்பாட்டியல் மற்றும் மனநல ஆலோசனை பெற்றிருக்கிறேன். கோயம்புத்தூரில் Insight Counselling என்னும் மனநல அமைப்பின் நிறுவனராக, மனநல ஆலோசகர் பணியில் உள்ளேன். கணவன்- மனைவி, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் போன்றோருக்குள் உண்டாகும் குடும்ப உறவு சிக்கல்கள், பெண்களின் உளச்சிக்கல்கள், வேலை மற்றும் குடும்பம் சமநிலை செய்வதில் எழும் பதற்றம் மற்றும் மனச்சோர்வு சார்ந்த சிக்கல்கள், குழந்தைகளின் கற்றல் சார்ந்த குறைபாடுகள், பதற்றம், பயம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றில் மனநலம் பேணிவருகிறேன்.
கணவர் புகழேந்தி மேனாள் காவல்துறை அதிகாரி, மகனார் ஒருவர்.
தொடர்புக்கு :
D. Ahila,
Counselling Psychologist,
Kovaipudur, Coimbatore - 641042
Email : artahila@gmail.com
வாழ்த்துக்கள் மேடம்.. உங்கள் எழுத்துலக பயணம் சிறக்கட்டும்.
ReplyDelete