Skip to main content

பெண்ணுடலின் மீது மட்டும் ஏன் இத்தனை வன்முறை?

  பாலியல் வன்முறை


ஐந்தாறு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, பெண்ணுடல் குறித்த சமூக தகவமைப்பு. கல்கத்தா மருத்துவர் மௌமிதா மீது நடத்தப்பட்ட மிக கொடுரமான பாலியல் வல்லுறவு வன்முறை அது.

பெங்கால் ஆளும் கட்சியும், மத்தியில் இருக்கும் கட்சியும், பெங்கால் காவல்துறையும் இந்த வன்முறை குறித்து, மாறிமாறி ஒவ்வொரு விதமான குற்றச்சாட்டுகளை மற்றவர்கள் மீது முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மருத்துவக் கல்லூரியின் பிரின்சிபால் சந்தீப் கோஷ் விசாரணையில் இருக்கிறார். பெண் பித்து பிடித்த சஞ்சய் ராயை கைது செய்கிறார்கள். இந்த சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி வளாகம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சமூகமே இன்று கொதித்து நிற்கிறது. உயிர் காக்கும் தொழில் என்பதால் இந்த போராட்டம் கவனப்படுத்தப்படுகிறது. காவல்துறையை தன் கைவசம் வைத்திருக்கும் மாநில அரசின் முதலமைச்சர், களத்தில் கொடி பிடிக்கும் பெண்களோடு கை கோர்த்து நின்று காமெடி செய்து, நடந்த கொடுரூரத்தைத் திசை மாற்ற முயற்சிப்பதை எல்லோரும் வேடிக்கை கூத்தாக பார்க்கிறோம். பெண்ணுக்கு எதிரான, பெண்ணுடலுக்கு எதிரான, பெண் சமூகத்துக்கு எதிரான கேலிக்கூத்தாக இவை எல்லாம் நம் கண் முன் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஏதோவொரு மாபெரும் சதி இதன் பின்னே இருப்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது. இதையெல்லாம் எழுதவேண்டுமா எழுதவேண்டாமா என்ற கோபம் என்னுள் இந்த நான்கைந்து நாட்களாக ஓடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சமூகம், அரசியல் பின்னணி என்ன என்று பல்வேறு அரசியல்வாதிகளாகட்டும், ஊடகவியலாளர்களாகட்டும், சாதாரணமானவர்களாகட்டும், தலையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு பேச வந்தது இந்த சதி பின்னணியைப் பற்றி அல்ல. ஒரு பெண் என்றால் ஆணுக்குள் நேரும் மிக கேவலமான உடல் சார்ந்த கொடூரங்களைப் பற்றிதான் பேச நினைக்கிறேன்... Perversions... ஆணின் வக்கிரங்கள்..

ஆகஸ்ட் 9 அன்றிரவு, முதுகலை மருத்துவ மாணவியான மௌமிதாவின் மீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வு வாசிக்க வாசிக்க நெஞ்சைப் பதறவைக்கிறது...

//அவள் கழுத்து நெரிக்கப்பட்டு, அவளது தைராய்டு குருத்தெலும்பு நொறுங்கி, அவளது உதடுகள், விரல்கள் மற்றும் அடிவயிற்றில் பலத்த காயங்கள் இருந்தன என்று பிரேத பரிசோதனை அறிக்கை விவரிக்கிறது. அவளுடைய தலை ஒரு சுவரில் அல்லது தரையில் கடுமையாக அறையபட்டிருக்க வேண்டும், மேலும் அவளது வாய் மற்றும் மூக்கு வலுக்கட்டாயமாக மூடப்பட்டு உதவிக்காக அவள் அழுவதை......
உடைந்த கண்ணாடியிலிருந்து கண்ணாடித் துண்டுகள் அவள் கண்களில் படிந்திருந்தன. பாலியல் வன்கொடுமைக்கான தெளிவான ஆதாரங்களுடன், உயிருடன் இருக்கும்போதே இந்த காயங்களை அவர் அடைந்தார் என்று அறிக்கை உறுதிப்படுத்தியது. அவளது வாய், கண்கள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் இருந்து ரத்தம் வழிவது..... //

இது ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியின் மொழியாக்கம். இதற்கு மேல் என்னால் இதை தொடர முடியவில்லை.
தமிழில், ஊடகம் ஒன்று, அவள் உடலில் 150 கி திரவம் (?) இருந்ததாகவும், அத்தனை திரவம் ஒருவனிடமிருந்து வந்திருக்க முடியாதென்றும் slide போடுகிறார்கள். அது என்ன 'திரவம்' ... வெளிப்படையாக விந்து என்று சொல்ல வேண்டியதுதானே.. எல்லாத்தையும் இப்படி மூடி மறைச்சு தானே, கட்ட மண்ணாகி நிற்கிறோம்... ஆண் வயசுக்கு வருவதை, ஆணின் சுயமையை, ஆணின் அழுகை வரை எல்லாத்தையும் மறைச்சு வச்சு அவனுக்கான வக்கிரங்களை அதிகப்படுத்துவதும், அதேசமயம் பெண்ணை அடங்கு, அடங்கு, அதிகம் பேசாதே, அழுது காரியத்தை சாதித்துக்கொள் என்று கட்டுப்படுத்துவதுமாக இருக்கும் சமூகம்தானே நம் சமூகம்.... பாலியல் கல்வியைச் சரிவர கற்பிக்காமல், இருபாலினரையும் அடக்கி வைத்து, மனவிகாரங்களை வளர்த்தெடுத்து இவ்வாறான பாலியல் வன்முறைகளை, வன்கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாமெல்லோரும் தான் இக்கொடூரத்திற்கு காரணம்.

நிர்பயாவிற்கு நேர்ந்ததைவிட, அபயாவிற்கு (இதில் பெயர் மாற்றம் வேற) நேர்ந்தது அதிகமென்று அடுத்தொரு ஊடகம் சொல்கிறது. எங்கிருந்து இந்த yardstick யை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள்? பெண்ணுடலை சிதைப்பதில் என்ன அளவுகோல் உங்களுக்கு வேண்டியிருக்கிறது.

மௌமிதா மீதான இந்த அளவு மிருகத்தனம், ஒரு பெண்ணை அடக்குவதற்காக மட்டும் நிகழ்த்தப்பட்டதல்ல, இது பெண்ணின் மீதான ஆணின் ஆதிக்கம், கட்டுப்பாடு போன்ற செய்தியை, உரத்த குரலில் நம் பெண் சமூகத்திற்கு எச்சரிக்கையாக அனுப்புகிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.

பெண் என்றால், அவளுடைய அடிவயிற்றை, பெண்குறியை தாக்கும் அவச்செயலை யார் இந்த ஆண்களுக்கு கற்றுக் கொடுத்தது? பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களில் ஒன்றாக இது பேசப்பட வேண்டிய ஒரு நிலை. ஆனால் அவர்களால் பேசப்படுவதில்லை. பாலியல் தொழில் செய்துவந்த ஒரு பெண்மணி ஒருமுறை யூடியுப் சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது சொன்னது நினைவுக்கு வருகிறது... 'என்னோட இள வயசுல மகாபலிபுரத்துக்கு அஞ்சு பேரோட போனேன்... அன்னைக்கு அனுபவிச்ச வலி இருக்கே... ' என்று நிறுத்திக்கொண்டார். இதை சொல்லும்போது அந்த பெண்மணியின் முகத்தில் துளி சலனமில்லை. எல்லாம் அனுபவித்தாயிற்று இந்த உடம்பு என்னும் saturation இருந்தது, அந்த முக மௌனத்தில்.. அவர் பேசாமல் பேசியது ஆண் சமூகத்தின் வக்கிரங்களைப் பற்றிதான்.

இந்த மன விகாரங்களை, கொடூரங்களை பெண் உடல் மீது அரங்கேற்றுவதற்காகத்தான் இந்த ஆண்கள் காலம் காலமாக பாலியல் தொழில் செய்யும் பெண்களை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என்றைக்கு ஆண்களின் வக்கிரங்கள் குறித்து வாயைத் திறக்கிறார்களோ, அன்றைக்கு சமூகம் ஒட்டுமொத்தமாக தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது போல நடித்து (?) எழுந்து, அவனுக்குப் போதனைகளை வழங்கும் என நம்புவோம்.

இச்சமூகத்து ஆண் மக்களின் மனதின் வக்கிர உள்ளீடுகளைச் சரிசெய்ய, என்ன முயற்சிகளை இச்சமூகம் எடுக்கப்போகிறது என்பதுதான் பெரும் கேள்வி.

மஹாராஜா திரைக்கதையில் வரும் சிங்கம்புலியின் பாத்திரம் சொல்வது இதுதானே. கொலை செய்ய வருகிறவன், பெண்பிள்ளையைக் கண்டதும் எத்தனை முறை வன்புணர்வில் ஈடுபடுகிறான் என்பதுதானே அக்கதையின் மெயின் சரடே. மனதளவில், ஒவ்வொரு ஆணும், பெண் என்பவள் தன் சபலம் என்பதை ஏற்றி வைத்திருக்கிறான். இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் அந்த மனதிற்கு புரிவதில்லை. இந்த உணர்வு ஆணுக்குள் அவனுடைய adolescent age வளரிளம் பருவத்தில் பலமாக ஊன்றப்பட்டுவிடும். அந்த காலகட்டத்தில் அவனுக்கான சரியான பாலியல் கல்வி வழிகாட்டல் தேவையாகிறது. ஆனால் அதை செய்ய நம் சமூகம் தயாராக இல்லை. ஒரு பெண்பிள்ளையை தயார்படுத்தும் இந்திய சமூகம் அதுபோல ஓர் ஆண்பிள்ளையைத் தயார்படுத்துவது இல்லை. அவன் ஆண், அவனுக்கு எல்லாம் தானே தெரியும், 'நீ ரூமூக்குள்ள போ, மாப்பிள்ளை பாத்துக்குவார்' என்று இன்றும் சொல்லிக்கொண்டு திரிகிறது இச்சமூகம். இதை மாற்றுவதுதான் இந்த கொடூரத்தில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடம்.

சில நாட்களுக்கு முன்பாக எவட் கூப்பர் எழுதிய She speaks புத்தகத்தில் பெண்ணிய செயல்பாட்டாளரான கவிதா கிருஷ்ணன், நிர்பயா கூட்டு பாலியல் வன்முறையின் போது, பேசியதைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததைப் பதிவு செய்திருந்தேன்.

// We will be adventurous.
We will be reckless.
We will be rash.
We will do nothing for our safety. //

அந்த கடைசி வரி மனதை விட்டு அகல மறுக்கிறதாகவும் எழுதியிருந்தேன். அன்று அதை வாசித்தவர்கள் சரியாக அந்த வரியைப் புரிந்து கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது.

இச்சம்பவம், "We will do nothing for our safety" என்பதற்கான பொருள் முழுமையும், அதாவது, எங்களைப் பாதுகாக்க நாங்க எதுவும் செய்ய போவதில்லை; ஆண்களின் பெண்ணுடல் குறித்த பைத்தியக்காரத்தனத்தை மட்டும் சரிசெய்யுங்க என்னும் பொருளை, கொடுக்குமென நான் நம்புகிறேன்.






Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...