Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீ...