அறவி: ஓர் பார்வை
அறவி புதினம் குறித்த புத்தகத் திறனாய்வு - இணைய நிகழ்வு, வாருங்கள் படிப்போம் குழுவினரால் நிகழ்ந்தது நேற்று (18.11.2023, 7.30 pm)
அறவி குறித்த கதைக்களத்தை விவரித்த முனைவர் பிரேமா அவர்கள், கதையின் பாடுபொருளை, கதை அமைப்பை, கதைக்களங்களான திருச்செந்தூர் மற்றும் இங்கிலாந்தில் நார்தம்ப்டன் சூழல் விவரிப்பின் நேர்த்தியையும் வெகுவாக பாராட்டினார்.
பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள், பெண்ணியத்தின் புதிய சிந்தனைகள் என்று நேற்றைய அறவி புத்தகத் திறனாய்வின் பக்கங்களை, அவற்றை நோக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் மேடையாக்கி, 'பெண்ணியம்' பிரேமா அவர்களால் அருமையாக மாற்றிக்கொடுக்க முடிந்தது வியப்பே.
இந்த புதினத்தின் தலைப்பால், அறவி என்பது இல்லறத்துள் பெண் துறவைக் குறிக்கும் சொல்லாக மாறியிருப்பதாக அவர்கள் உரைத்தபோது மகிழ்வாக இருந்தது.
பெண்ணின் உடலியல் பிரச்சனைகளைப் பேசும் ஒரு புதினத்தால், அவளின் வெளியழகை பேசாமல், அவளின் அகத்தை மட்டும் பேசியிருப்பது, பெண்ணை முன்னிலைப்படுத்திய புதினங்களில் என் பார்வையில் இதுவரை யாரும் இவ்வாறு எழுதியதில்லை என்று அவர் பேசியபோது, பெண்ணின் உள்ளிருக்கும் உணர்வை இப்புதினத்தின் வழி சரிவர கையாண்டிருக்கிறேன் போலும் என்று நினைத்தேன்.
கதைநெசவு நன்றாக வந்திருக்கிறது என்றும் சொன்னபோது, அந்த சொல் 'கதைநெசவு' எனக்குப் பிடித்திருந்தது.
ஒத்த கருத்துடைய சிலரால் மட்டுமே உணர்வுபூர்வமாக மட்டும் ஒட்டிக்கொள்ளாமல் அறிவார்த்தமாக, நாவலின் உள்ளீடு என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ளும் வித்தையைச் செய்யமுடியும். முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் நூலை வாசித்து அவர்கள் உரைத்த கருத்துகள், இரண்டாவதாக பிரேமா அவர்களின் உரை முன்வைத்த கருத்துகள்.. இவை இரண்டுமே சரிவர புதினத்தை எடுத்தாண்டன என்று கொள்ளலாம்.
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் முனைவர் பிரேமா அவர்களுக்கு என் பேரன்பு ❤️💖
நேற்றைய தினம் எனக்கு, பெண்ணிலிருந்து வேறுபட்டு, 'ஆணின் பார்வையில் பெண்' என்னும் அடுத்த முயற்சி குறித்து சிந்திக்க வழிவகையும் செய்தது எனலாம்.
புத்தகத் திறனாய்வைத் தொடர்ந்து முன்னெடுக்கும் ஒளிவண்ணன் மற்றும் உமா மகேஸ்வரி அவர்களின் வாருங்கள் படிப்போம் குழுவிற்கு என் அன்பை உரித்தாக்குகிறேன். குழுவின் அர்ஷா மற்றும் ரெஜினா அவர்களுக்கும் என் அன்பு. 🧡🧡
கலந்துக்கொண்ட, அதன் பிறகு என்னோட உரையாடிய (அதில் சிலர் யூடியூப் வழியாகவும் பார்த்திருந்தனர்) வாசகர்கள், பேராசிரியர்கள் எல்லோருக்கும் என் அன்பு. 🤎🤎
அறவி நாவல் காலச்சுவடு பதிப்பகத்தில் Kalachuvadu, Commonfolks, Panuval Bookstore, Dialforbooks, Amazon என்று எல்லா தளங்களிலும் கிடைக்கும்.
புத்தகத் திறனாய்வு காணொளியின் லிங்க் முதல் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்.. நேற்று ஜும்மில் இணைய இயலாதவர்கள் பார்க்கலாம்..
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....