தவ்வை புதினம் - உரை
கவிஞர் அன்புதோழி ஜெயஸ்ரீ
நூல்களை வாசித்து எழுதுவதற்கான நேரம் கிடைப்பதேயில்லை என்று பொய்யுரைப்பதைவிட எழுத ஆரம்பித்தபின் வாசிப்பு ஆர்வம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. ஆனால்,அகிலா மேடமின் எழுத்துக்களைவிட அகிலாக்கா எனக்கு நெருக்கமெனக் கொண்டிருப்பதால் 'தவ்வை' இருக்கின்றபடியே வெகு சீக்கிரமாய் எனை ஆட்கொண்டு விட்டாள்.
மேலும்,ஒரே மூச்சில் இந்நாவலை வாசித்து முடித்து தவ்வை குறித்துப் பகிர வேண்டிய உள் உந்துதலுக்குப் பெயர் பெண்மை எனும் சக்தி எனக்குள்ளும் இருப்பதால்தான் என்று எண்ணுகிறேன்.
Non-Linear எனும் கதை சொல்லல் முறையில் மூன்று தலைமுறை கதாபாத்திரங்கள்,நடைமுறை பழக்கங்கள் ,சம்பவங்கள்,சொல்லாடல்கள் என எல்லாவற்றையும் அனாயசமாக சுவாரசியம் குறையாமல் பிணைத்து நம்மை பிரமிக்க வைக்கிறார் நூலாசிரியர் அகிலா அவர்கள்.194 பக்கங்களாக...பின்னொரு காலங்களாய் 7 அத்யாயங்களும் முன்னொரு காலங்களாய் 6 அத்யாயங்களுமாய் மொத்தம் 13 என்று.... மேலைநாட்டு துர் எண்ணிக்கையாகவும், நம் இதிகாசக் கூறல் வகையில் 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு அஞ்சாத வாசமென காலக்குறியீடுகள் மிகச் சரியாக இம்மண்ணின் எழுதப்படா சட்ட மறைகூறுகளினூடே பொருந்தி பெண்மையின் நீண்ட வலிமிகு சமரச வாழ்வியலை நெல்லைத் தமிழில் கண்முன் காட்டுகின்றன.
தவ்வையின் இளம் பருவத்தில் மட்டுமல்ல Post partum depression எனும் பிரசவத்திற்குப் பிறகான பெண்களின் உளவியல் மாற்றங்கள், மனக்கிலேசங்கள் பலவும் அதிகம் பேசப்படாத வறண்ட சமூகமாகத்தான் இன்றும்கூட இருக்கிறோம் என்று நானும் அறுதியிட்டுச் சொல்வேன். ஒரு மனநல ஆலோசகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை பொங்கிப் பெருகும் கருணைத் தாயாக ஆசிரியர் ஆங்காங்கே அழகாக எட்டிப்பார்க்கிறார். அந்த இடங்களில் கதைகளத்தைவிட்டு நாம் சற்றே விலகி நம் பூட்டியை, பாட்டியை, ஆச்சியை, அம்மாவை, அத்தையை, சித்தியை... பக்கத்து வீட்டுப் பெண்ணை இல்லை நம்மையே அங்கே தவ்வைக்குள் பொருத்திக் கொள்ள நேர்கிறது.அந்த இடங்களில்தான் பெண்மைத் தெய்வம் எங்கும் நிறைந்ததாகி பரிசுத்தமான வெற்றி எய்துகிறது.
தன் இயலாமையை மறைக்க வன்முறையைக் கைப்பிடித்துக் கொள்ளும் உடற்குறையே மனஊனமுமாகி அந்த கோழைத்தனமெனும் பிறழ்வு நேரடியாக ஒரு நேர்மையான நெஞ்சத்தை எதிர்கொள்ளத் திராணியின்றி பொறியாகிச் சுடுகிறது. அக்கொடும் மனத்தீ பரவிப் பரவி பல நல்ல உள்ளங்களை வாட்டிப் பொசுக்குகிறது.
Domestic violence எனும் குடும்ப வன்முறை என்பது அன்றும் இன்றும் நம் சமூகக் கட்டமைப்பின் பார்வையில் பொருளீட்டாத, வசதிகளற்ற, குடித்துவிட்டு சாலையில் எல்லோரும் பார்க்க மனைவியை அடித்து உதைப்பது மட்டுமே என்றாக்கி இருக்கிறார்கள்.தந்திரமாக கனன்று கொண்டிருக்கும் பெரும்மனக்குரங்கு வாய்பிளந்து அனல் உமிழ்ந்து ஒளிந்து மறைந்து மாடியறை எனும் உச்சாணிக் கிளையில் அமர்ந்து கொண்டு தவ்வையின் பன்னீர்பூக்கனவுகளை சிதைத்து சிதைத்து அவள் வாழ்வையே வாசங்கள் இல்லாத வனமாக்கி விழுங்கிவிடுகிறது. எங்கும் குற்றவாளி ஆக்கப்படவே மாட்டான் அவன் எனும் பாலின சமத்துவப் போலிமையின் வேர்களை தவ்வை ஆழமாய் அசைத்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.
பூக்களைப் பெண்கள் என்பார்கள் ஆனால் தவ்வை எனக்குச் சொன்னது ஆண்களே பன்னீர் பூக்கள்...அந்த மென் இதழ்கள் ஆணாக வேண்டும் மலர்ந்து தன் மேல் மொத்தமாய்ப் படர்ந்து வீழ்ந்து தன்னை முழுதுமாய் மூடி தன் சுயம் தொலைக்கும் வண்ணம் வேறுநிறமேற்றி விட மாட்டானா.. எனும் சிறு ஏக்கமன்றி அந்த பெண் மண்ணுக்கு வேறென்ன பெரிதாக ஆசை இருக்க முடியும். நிறைந்த பன்னீர் பூக்களின் மண்தரையில் தவ்வையும் ரங்கனும் எனக்குத் தெரிந்தார்கள். அப்பாவுக்குப் பிடித்த சிறுபூக்களை நினைத்து புகுந்தகம் நுழையும் புதுப்பெண் தவ்வையினுள் கதையினுள் பேசப்படாத தமிழ் வாசத் தந்தையின் சாயல் நிறைய இருக்கிறதென உணர்கையில் தவ்வை அர்த்தநாரீஸ்வரர் அவதாரமாய் நம்முள் படர்கிறாள். தெய்வாம்ச சக்தி அல்லது இயற்கையின் சீர்வழி மனிதநேய சக்தி கொண்டு நிறைந்தவர் படுகுழியில் விழுந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிதானமாக நிற்பார் என்பது தவ்வை சொல்லும் பாடம்.
ஒட்டுமொத்த ஆண் சமூகத்தின் மேல் சாணி எறிந்து உரக்கப் பேசும் பயனில்லா பெண்ணுரிமைக் கொடியை இந்த ஆண்களே இப்படித்தான் என்று நாவலாசிரியர் எங்கும் தூக்கிப் பிடிக்கவில்லை. எல்லா காலத்திலும் ஆபத்பாந்தவனாக அனுசரணையாக ஒரு ஆண்மகன் இருக்கத்தான் செய்வான் என்பதான கருணை பொழியும் நேரியல் கதாபாத்திரம் சங்கரலிங்கம்.
உயிர்கண்ணியின் தொடர்புகள் காலங்கள் சுழன்றாலும் தொடரும். அற்புதமான ஜீவகண்ணிகளுக்கு அழிவை இயற்கை தந்து விடாது என்பதாக, விசாகன் வந்து நிற்கும்போது தவக்காலப் பலன் காட்சியாய் நமக்கும் கண்ணீர் துளிர்க்கிறது.தவ்வை மௌனத்தில் பேசுகிறாள்... அறிவார்ந்த நெடுங்கால தலைமுறைக் காப்பெனும் பெருக்கடமையைத் தோளேற்றி நடக்கும் வலியபெண்மை ஒருபோதும் இன்னொரு பெண்ணுக்கு எதிரியாவதேயில்லை.
அந்தரங்கங்களை அவற்றின் அதே புனிதத்தோடு கட்டிக் காக்கும் அவர்களின் சிறுபுன்னகை, கண்ணசைவு, கைக்கோர்ப்பு எல்லாவற்றிக்கும் பொருள் உணருமளவு ஆண்சமூகம் இன்னும் நுட்பமாக மனித மனங்களை நெருங்கவில்லை என்ற மறுக்கமுடியாத உண்மையின் பெருமிதம் புதினத்தின் நிறைவுப் பகுதியில் கனிந்த தவ்வையாக மூப்பழமாய்ச் சுவைக்கிறது. தூய்மையான கொய்யாமலர் வசீகரமாய் வைசாலியின் தெளிவு மனதைக் குளிர்விக்கிறது.
இதற்குமேல் விரிவாகப் பேசினால் கதைக்கருவின் மையத்தை வெளிச்சமிட்டு காட்டியதாகி விடும். வந்து விழும் இயல்பான தமிழ்ப் பெண் வாழ்வியலை சுவைத்து வாசிக்கும் அனுபவம் உங்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் எனவே அளவாய்ப் பகிர நினைக்கும் என்னை தவ்வை இழுக்கிறாள். "ஏ.. டீ இன்னும் ஒரு வா சோறு.. "என்று ஆதுரமாய் முடிவிலாப் பெண்மையை ஊட்டிக்கொண்டே போகிறாள்.
தவ்வையை வாசித்து முடிக்கும்போது இரண்டு அவிழ்க்கப்படா முடிச்சுகள் மனதை இறுக்கமாகச் சுற்றிக் கொள்கின்றன. ஒன்று- தவ்வை மலர்ந்து கனிந்து வாழ்ந்த வசந்தநொடிகளின் யதார்த்த காட்சிகள் எப்படியிருந்திருக்கும் ? அடுத்தடுத்த தலைமுறைகள் தாண்டியும் நினைவில் போற்றும் உறவுக்கு எத்தனை காலம் உடன் வாழ்ந்தோம் என்பதா முக்கியம் எப்படி என்பதல்லவா முக்கியம் அப்படி என நீங்களே உள்ளே போய் உணர்ந்து கொள்ளுங்கள் என வாசகனுக்கு ஒரு கற்பனாச் சிறகை அங்கே சொல்லாமல் தவ்வை தந்து விடுகிறாள்.
இன்னொன்று அந்த துர்மரணம் குறித்த கேள்வி..எப்படி என்று.இப்படியான மரணங்களுக்கு அங்கேயே இருந்த ஒரு நபரைச் சுட்டுவது அறமல்ல... கற்பு, கணவன், குல கௌரவம் என்று இச்சமூகம் பெண்ணினத்தின் மேல் போர்த்தி விட்டிருக்கும் நயவஞ்சக சாயங்களே காரணம். எனவே அந்த முடிச்சு அப்படியே நம்மிடம் தங்கி பேசாத மௌனங்களைப் புரிந்து கொள்ள வைக்கிறது.
சர்வதேச மகளிர் தினம் நெருங்கி வருகின்றது. நிச்சயம் இன்னும் உலகின் பல மூலைகளிலிருந்து பெரும்போராட்டங்களைக் கடந்து தவ்வை நிறைந்து சிரிக்கிறாள் வாழ்ந்து கொண்டே இருக்கிறாள். அவளை வாழ்த்துவதும் கொண்டாடுவதும் அவசியமாகிறது .
ஒரு வாஞ்சையான கைப்பிடி உரிமைக்கு ஏங்கும் எளிய பெண்மையை ஆணினம் மட்டுமல்ல அரைகுறைப் பெண்களும் புரிந்து கொள்ளும் காலம் வருமென தவ்வை நம்பிக்கை தருகிறாள்.அறிவியல் உடலியல் தெளிவுகளோடு,உளவியல் புரிதல்களையும் மென்மையாக வலியுறுத்துகிறாள்.
தவ்வை - மௌனத்தோடு பிணைந்த நிதானத்தின் அழகுமொழி.கேட்காத அலறல்களின் மங்கல சங்கீதமான எதிரொலி.
அவசியம் வாசியுங்கள்.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....