1
புகைந்துக் கொண்டிருக்கும் தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றினாள். கடுகு, உளுந்து போட்டு தாளித்து கருவேப்பிலையைத் தேடும்போது, அது இல்லாதது நினைவில் வந்தது அமுதவல்லிக்கு. ‘வேதா’ என்றாள் சத்தமாக. பதிலே இல்லை. அடுப்பை அணைத்துவிட்டு, இங்கேதானே படிச்சுகிட்டு இருந்தா என்ற நினைப்புடன் ஹாலுக்கு வந்தபோது, வெளிச்சமற்ற மூலையில் அமர்ந்து,வேதா கணக்குடன் சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள்.
‘ஏய்ய்.. நான் கூப்பிட்டது காதில் விழலயா என்ன..’
‘அட போக்கா.. நான் படிக்கும்போதுதான் உனக்கு ஏதாவது வீட்டில் இல்லைன்னு தோணும்..’ தலை நிமிராமல் பேசினாள். வேதா வளர்ந்து வருவது இவளுக்குள் பயத்தை உண்டுபண்ணியது. எட்டு வயசிலேயே எடுப்பாய் இருப்பதாக பட்டது.
‘சுதர்சன் கடை வரைக்கும் போய், கருவேப்பில வாங்கிட்டு வாடி..’ என்று கெஞ்சலாக சொல்ல வெடுக்கென எழுந்து சென்றாள் வேதா. அடுத்த மாசம் முதல் நாமளும் நம்ம கடையில் காய் எல்லாம் வாங்கிவச்சுட்டா தன்னை பார்த்து பல்லிளிக்கும் ராஜுவின் முன் போய் நிற்க வேண்டியிருக்காது என்று நினைத்துக்கொண்டாள்.
‘காலையில் எழுந்து குடிக்கபோன அந்த ஆளை இன்னும் காணோம். அப்படியே அந்த ஆளு எங்காவது செத்துக்கிடக்குதான்னு பாரு’ என்றவளை திரும்பி பார்த்து வலிச்சம் காட்டிவிட்டு போனாள் வேதா. குடிச்சுட்டு சுயமில்லாம தெருவுல விழுந்துகிடக்கிறவன் செத்தவன் போலதான் அமுதாவுக்கு. அவள் வரும்வரை வாசற்படியில் உட்காரலாம் என்று அமர்ந்தாள். அம்மா இறந்ததில் இருந்தே மாரிமுத்து என்னும் அவளின் தகப்பன் வெறும் ‘ஆளு’தான் அவளுக்கு. அவனை பார்த்தாலே குமட்டலாய் இருக்கும் அமுதாவுக்கு. குடியும் சீட்டாமுமாய் தள்ளாடும் அவனிடம் தான் பட்ட பாடெல்லாம் கண்முன் ஓடும். பதினாறு வயதிலேயே தன்னை, கூட சீட்டாடும் நாற்பத்திரண்டு வயசுக்காரனுக்கு கட்டிக்கொடுத்து, அவனோடு நெகமத்துக்கு வாழப்போனதும், அஞ்சாறு மாசமா அவனின் குடியிலும் அடியிலும் வதைப்பட்டு, உண்டான கருவும் கலைஞ்சதும் அவன் வேண்டாம்னு பஞ்சாயத்து பண்ணி அறுத்துவுட்டுட்டு வந்ததும் மன்னிக்கவே முடியாத விஷயம்தான் அவளுக்கு.
அதுக்கப்புறம் இந்த கடையே சாசுவதமாய் வந்து தாய் வீட்டோடு உட்கார்ந்ததும், இந்த ஆளு ‘மூதேவி.. மூதேவி.. செலவு வச்சுட்டு இப்போ இங்கே வந்து உட்கார்ந்திருக்கு பாரு.. சனியன்..’ என்று தினம் திட்டுவதும் மனதுக்குள் ஓடியது. பெண்ணுக்கென்று எங்கும் புகலிடம் இல்லை. பெத்த வீட்டை விட்டா, புகுத்த வீடுன்னு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு என்று ஓடிகிட்டே இருக்கணும். அவளுக்குன்னு தனியா எதுவும் இல்லாததும் யாரையாவது அண்டியே வாழவேண்டியிருப்பதும் புரிந்தபோது இந்த சமூகத்தின் மீது கோபமாக வந்தது அமுதாவுக்கு. ‘சை.. என்ன நெனப்பு இது காலைலே...’ என்று அதை உதறி எழுந்தாள்.
அம்மாவுக்கு பிறகு, வீட்டின் முன்வாசலில் உள்ள தாத்தாவின் இந்த மளிகை கடை மட்டும் இல்லேன்னா சாப்பாடே இல்லங்கிற உண்மதான் அவள எப்போவும் சுடும். அதுக்காகவே தாத்தா படத்தை கடையில் மாட்டிவைத்து அதுக்கு இரண்டு ரூபாய்க்கு ஊதுவத்தி காலைலேயும் சாயங்காலத்திலேயும் கொளுத்தலேன்னா அவளுக்கு அன்னைய பொழுது இம்சைதான்.
காலையிலே போன ஆளு சரியா பதினொரு மணிக்கு போதை தீர்ந்து, இவகிட்டே இருந்து காசு வாங்கி திருப்பியும் குடிக்கவேண்டி, இவள் வியாபாரம் பார்க்கும்போது பார்த்து, வந்து நின்னு காசு கேட்கும். கொடுக்கலைன்னா, ‘சீலையை நகத்தி கட்டி கடைக்கு வர்றவனுங்க கிட்டே காசு பண்ற சனியனே.. இழுத்து மூடிட்டு காசு குடுடி..’ என்று அங்கேயே அவளை கேவலமாக பேசும். அப்புறம் அவ அம்மாவையும் தாத்தாவையும் இழுத்து வச்சு அசிங்கமா ஆரம்பிக்கும். மரக்கடைக்கு அடுத்தாற்போல், தெருவென்றும் சொல்லமுடியாமல் சந்தென்றும் சொல்லமுடியாத வடிவில் இருக்கும் அந்த நீண்ட வீதியில் எல்லோருக்கும் இது பழக்கமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த ஆளு பேசும்போதெல்லாம் இவ கூசிக்குறுகித்தான் போவாள்.
அசிங்கமான வசவுகளை கேட்டுக்கேட்டு அவளுக்கு புளித்து போய்விட்டது. கொஞ்ச நாளா அந்த ஆளோட கண்ணு தன் மாரு மேலேயே இருக்கிறத கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கா. கடைசி ஒரு மாசமா ராத்திரி நேரத்துல முன்கட்டில் அதுக்கு சாப்பாடும் வைத்து, அதை தாண்டி ஹாலுக்குள் வரும் கதவை தாள் போட்டுவிட்டு இவளும் வேதாவும் ஹாலில் படுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். குடித்துவிட்டு வந்து கதவை தட்டித்தட்டி சலித்து, அசிங்கமாக பேசிவிட்டு தூங்கிப் போவது அதன்பிறகு மாரிமுத்துவின் தினசரி வழக்கமானது.
இந்த வீடும் கடையும், பக்கத்தில் இன்னும் இரண்டு வீடுகளும், தாத்தாவின் சொத்துகளாய் இருந்தன. அதன் வாடகையில் சற்று சௌரியமாக அம்மாவை வளர்த்தார். களக்காட்டு பக்கம்தான் தாத்தாவின் ஊர். அங்கு விவசாயம் சரிந்தபோது கொஞ்சம் பணத்துடன் கோயம்பத்தூருக்கு வந்து வியாபாரம் செய்ததாக அம்மா சொல்லும். ஊர் பக்கமிருந்த வந்ததாக சொன்னதால் மாரிமுத்துவை அம்மாவுக்கு கட்டிவைத்தாராம். அதன்பிறகு அம்மாவுக்கு அடியும் உதையும் இரண்டு பொம்பள பிள்ளைகளையும் தவிர வேற எதுவும் கிடைக்கவில்லை.
இவளுக்கு பத்து வயது இருக்கும்போது, வேதா பிறந்தாள். அவள் பிறந்து ஒரு மாத கணக்கில் அம்மா உடல் பலகீனத்துடன் இறந்துபோனாள். பாட்டியால் வளர்க்கமுடியாது என்று சித்திதான் வேதாவை மூன்று வயதுவரை வளர்த்தாள். அம்மா இல்லாத வீட்டில் இவளுக்கு மாரிமுத்துவைப் பார்த்து பயம் இருந்தது. ‘பொட்டையா பெத்து வச்சிருக்கே..’ என்று சொல்லியே அம்மாவை அடிப்பது போல இனி தன்னையும் அடிப்பாரோ என்று. அம்மா இல்லாமல் எப்படி இவரோடு இருக்கமுடியும் என்ற பயத்தை சித்தியிடம் சொன்னபோது, ‘பயப்படாத. நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க. அசராம வாழனும்..’ என்றாள். சித்தி வீட்டிலும் போய் மாரிமுத்து குடித்துவிட்டு அடிக்கடி தகராறு பண்ணியதில், வேதாவை இங்க கொண்டு வந்து விட்டுவிட்டு ‘உங்க சங்காப்தமே வேணாண்டி..’ என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு எப்போதாவதுதான் வருவாள்.
இந்த ஹாலை பார்க்கும் போதெல்லாம் அம்மா நெனப்புக்கு வருவாள். இந்த ஹாலில்தான் அவளை கிடத்தியிருந்தார்கள். அம்மா ஏன் அசைவில்லாமல் படுத்திருக்கிறாள் என அப்போது அமுதாவுக்கு புரிந்திருக்கவில்லை. மல்லிகா சித்தியிடம் கேட்டதுக்கு, அவள்தான், ‘உங்க அம்மா இனி வரமாட்டாடி..’ என்று சொல்லி இவளை இழுத்து வைத்துக்கொண்டு அழுதாள். அவளின் கண்ணீரிலும் மூக்கு சிந்தியும் ஈரமான சேலையில் ஒருவித நாற்றம் அடித்தது. விலகி அமர்ந்தாள். அம்மாவின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்திருந்தார்கள். இவளும் கையால் தன் மூக்கை அடைத்து வைத்துப்பார்த்தாள். மூச்சு மூட்டியது. விரலை மூக்கில் இருந்து எடுத்ததும் காற்று திணறிக்கொண்டு வெளியேயும் உள்ளேயும் போய் வந்தது.
‘என்னடி ஆச்சு உனக்கு..’ என்று சித்தி பயந்துப்போனாள். அம்மாவுக்கு மூக்கில் அடைச்சு வச்சிருக்காங்களே, அதை நானும் செய்து பாத்தேன் சித்தி..’ என்றவுடன், ‘ஏன் புள்ள இப்படி செய்தே.. ‘ என்று பதறினாள்.
‘அம்மாவுக்கும் எடுத்துவிடுங்க.. மூச்சுவிட கஷ்டமாயிருக்கும்..’ என்று உதடு பிதுக்கி அழத்தொடங்கினாள். ‘சும்மா இருடி’ என்று சத்தம் போட்டது சித்தி.
அன்று இரவு முழுவதும் வேதா பாப்பா வேறு அழுதுகிட்டிருந்தது. யாரும் பார்க்காத சமயம் பார்த்து அம்மாவின் மூக்கில் உள்ள பஞ்சை எடுத்துவிடலாம். அம்மாவும் எழுந்துவிடுவா என்னும் எண்ணமும் அன்று இரவு முழுவதும் இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் சித்தி அங்கேயே இருந்தாள்.
மறுநாள் காலையில் அம்மாவைத் தூக்கிட்டு போகும்வரை அவளால் அந்த பஞ்சை எடுக்கமுடியாமல் போனது, இப்போவரைக்கும் வருத்தமா இருக்கும் அவளுக்கு. பக்கத்தில் யாராவது செத்துபோயிட்டால், படுத்திருப்பவரின் மூக்கில் இருக்கும் பஞ்சை எடுத்துவிட்டு, அவர் மூச்சு விடுவதை அழுபவர்களிடம் காட்டி சிரிக்க வைக்கலாமா என்றும் தோன்றும். அப்படிதான் நாலு வருஷத்துக்கு முன்ன, எதுத்த வீட்டு ஜெகனின் தாத்தா இறந்துப்போனப்ப, துக்கம் தாங்கமுடியாம அழுதுக்கிட்டு இருந்த ஜெகனம்மா கிட்டேபோய் ‘நா ஒன்னு சொல்லட்டுமாக்கா..’ என்றபோது, என்ன என்பதுபோல் கண்ணீரோடு பார்த்தாள் இவளை.
‘மூக்கில மூச்சுவிட முடியாம அடச்சு வச்சிருக்கிற பஞ்சை கொஞ்சம் எடுத்துப் பாக்கலாம்கா. அவரு முழிச்சாலும் முழிச்சுக்குவாரு.. ‘ என்று இழுத்துக்கொண்டே சொல்ல, ‘ஒன்ன என்னமோன்னு நெனச்சேன். நீயானா சின்ன புள்ளயாட்டம் இல்ல பேசுற. நல்லாதான இருக்கே..’ என்று கோபமாய் பேச அந்த இடம் விட்டு நகர்ந்து உட்கார்ந்து ஏதும் செய்யமுடியாமல் அழுததை நினைத்தால் இப்போவும் அழுகை வரும் அமுதாவுக்கு.
2
சமையலறையின் ஜன்னல் வழியாக தெரிந்த துண்டு வானத்தில், ஏரோபிளேன் ஓன்று மௌனமாய் நகர்ந்துக்கொண்டிருந்தது. மனிதர்களை விட்டு தொலைவில் போவதால் சத்தம் தேவையில்லை என்று நினைத்துவிட்டது போலும். அதற்குள் இருக்கும் மனிதர்கள் பேசிக்கொண்டு தானே இருப்பார்களென அமுதாவுக்கு பட்டது. ஒருகாலத்தில் வேதாவும் நன்கு படித்து அதில் போகலாம். ஏன் நானும் கூட போகலாமோ என்ற நினைப்பு அவளுக்குள் வந்ததும் பக்கத்து தெரு ராஜேஸ்வரி சொன்னது நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டாள்.
விசேஷ நாட்களில் அருகிலிருக்கும் விசாலாட்சி கோயிலுக்கு சம்பங்கியும் வில்வ இலைகளும் வெள்ளை தாமரை மொட்டுகளும் வாங்கிவருவதும் தொடுத்து கொடுப்பதும் இவளின் வேலை. பூவெடுக்க பூமார்க்கெட்டுக்கு ராஜேஸ்வரியுடன்தான் போவது வழக்கம். அப்படி ஒருநாள் போகும்போது ராஜேஸ்வரி கேட்டாள்,
‘நீ வெளிநாடு போறியா? டெய்லர் வேலைக்கு ஆள் கேட்கிறாங்களாம். நீ தையல் படிச்சிருக்கேதானே. என் விட்டுக்காரரோட பெரியண்ணன் ஏஜென்ட்டா இருக்காங்க. நேத்து பேசிகிட்டு இருந்தாங்க. அங்க போயி நல்ல சம்பாதிச்சா வேதாவை பெரிய படிப்புக்கு அனுப்பலாம்தானே..’
‘நல்ல ரோசனைதான். காசு அதிகமாகும்தானே. அத கூட கடைய வச்சு வாங்கிக்கலாம். எங்கப்பன் கிட்டே இவள தனியா விட்டுட்டு போகத்தான் பயமாயிருக்கு. நா இல்லாம போனா எனக்கு செஞ்சத போல இவளையும் எவனுக்காவது கட்டி வச்சுரும். அதுக்குதான் யோசிக்கிறேன்..’ என்றாள் இவள்.
‘ஹாஸ்டல்ல விடலாம் அவள. நம்ம பிரான்சிஸ் பள்ளிக்கூடத்து பாதர் எங்களுக்கு வேண்டியவங்கதான். ஏற்பாடு செய்யலாம் அமுதா.. உனக்கும் கைல கொஞ்சம் காசு புழங்கும். நாளபின்ன இன்னொரு கல்யாணம் கட்டிக்கலாம். இப்பிடியேவா காலம் பூரா இருக்கமுடியும்?’ என்றாள் ராஜேஸ்வரி.
இன்னொரு கல்யாணம் என்றதும் அவளுக்குள் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இவ தன்னை வேவு பாக்கக்கேட்கிறாளா இல்ல நோண்டி பாத்து நாலு விஷயத்தை நம்ம வாயிலிருந்தே வாங்கி பத்து வீட்டுல நியாயம் பேசவேண்டி கேட்கிறாளா என்ற யோசிப்பில், ‘சரி. யோசிக்கிறேன்..’ என்று அன்னைக்கு முடித்துக்கொண்டாள்.
சமையல் முடித்து எல்லாம் மூடி வைத்துவிட்டு, குளிக்கக் கிளம்பினாள். இப்போவே எட்டு ஆச்சு. சீக்கிரம் கடையில் போய் உக்காரணும், தெருவில இருக்கிறவங்க பற்று செலவு கணக்கும் எழுதும் அக்கவுன்ட் நோட்டு வேற காலியாயிடுச்சு. அதையும் ஒன்னும் வாங்கப்போகனும் என்று யோசித்துக்கொண்டே அடுக்களையை விட்டு வெளியேவர, ‘அமுதா... ஏய் அமுதா.. இங்க வந்து பாரு. உனக்கா இப்படி சோதன வரணும்..’ என்று ஜெகனம்மாவின் அலறல் கேட்க, வழக்கமா குடிச்சுட்டு வேட்டிய ரோடுபூரா இழுத்துட்டு வரும் அப்பன பாத்துதானே சத்தமா நாலு திட்டு திட்டும் இந்த ஜெகனம்மா, இன்னைக்கு என்ன நம்மள கூப்பிடுது என்று உள்ளே பதைப்பு உண்டாச்சு அமுதாவுக்கு.
3
ஹாலில் பாய் விரித்து, மாரிமுத்துவைப் படுக்க வைத்திருந்தார்கள். அவனின் தலைமாட்டில் நெளிந்துப்போன ஒரு காமாட்சி விளக்கு மினுக்மினுக்குன்னு உயிர விட்டுவிட்டு தொட்டுக் கொண்டிருந்தது. அந்த சின்ன வீட்டின் முன்பகுதியில் சாத்தியிருந்த கடையை ஒட்டி சிலர் வேடிக்கை பார்த்தபடி சென்றுக்கொண்டிருந்தனர். அக்கம்பக்கம் இருப்பவர்கள், மளிகை வாங்க பக்கத்து தெருவில் இருந்து வருபவர்களின் முகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருந்தன.
இரண்டு வீடு தள்ளியிருக்கும் கனகாவின் பாட்டி இவளருகில் வந்து, ‘ஏண்டி, காசு கீசு வச்சிருக்கியா எரிக்க?.. எம்பையன் கேட்க சொன்னான். செலவு செஞ்சுட்டு வாங்கிக்கவா..’ என்று கேட்க,
‘இல்ல பாட்டி, இவளுக்கு பீசுக்கு உள்ள காசு அஞ்சாயிரம் இருக்கு. அத வச்சு எரிச்சுவிடுங்க..’ என்று எழுந்துபோய் எடுத்துக்கொடுத்தாள்.
‘யாருக்காவது சொந்தக்காரங்களுக்கு சொல்லனும்னா சொல்லிருடி..’ என்றபடி பாட்டி எழுந்துவிட்டு, ‘கொஞ்சம் அழுடி. எல்லோரும் தப்பா நெனப்பாங்க..’ என்று சொல்லி நகர்ந்ததும், வேதா அழுதுகொண்டே சுவரோரமாய் நிற்பதை கவனித்தாள். அவளருகில் போய் அவளையும் உக்காத்தி, தானும் சுவரில சாய்ந்து உக்காந்துக்கொண்டாள்.
பொள்ளாச்சி பக்கமிருந்து ஒரே சொந்தமான மல்லிகா சித்தியும் அவங்க வீட்டு ஆளுங்களும் வந்ததும் அந்த வீடு மயான அமைதியை சற்று தளர்த்தது. வந்தவ சத்தம் போட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாள். ‘குடியோ கிடியோ, ஆம்பளங்க பேருக்கு இவரு கிடந்தாரு. இப்போ அதுவும் இல்லாம போயாச்சே..’ சத்தமிட்டவளை தொடையின் பக்கவாட்டில் கிள்ளினாள் அமுதா.
‘வாய மூடிகிட்டு அழு. இல்ல எந்திச்சு போ.. எல்லோருக்கும் சொல்லி கொடுத்திராத.. ‘ என்று காதில் ஓதினாள். சித்தி அவளை மலங்க பார்த்தாள்.
‘என்னடி, உனக்கு துக்கமா இல்லயா.. உங்கம்மா செத்தப்போ என்னவெல்லாம் கேட்டே..எப்படி பயந்த. இப்போ என்னடி இப்படி ஆயிட்டே.. தைரியம் வந்திருச்சுடி உனக்கு.‘ என்று உதட்டோரமாய் சின்ன சிரிப்புடன் சொன்னாள்.
பதில் பேசாமல் சுவரில் சாய்ந்துக்கொண்டாள் அமுதா. சித்திக்கு இங்கு நடப்பது என்ன தெரியும். அந்த ஆளு ஒரு ஆம்பள என்பதை சித்தி என்னைக்காவது நினைச்சு பாத்திருக்காளா. கதவ தாளிட்டு தான் ஹாலுக்குள் படுக்கும் அவலம் அவளுக்குத் தெரியுமா. ஒரு நா ராத்திரி குடிச்சுட்டு வந்து இவள திட்டிக்கிட்டே, இவ மாரின் மீது கைவைத்ததும், பக்கத்தில் இருந்த காமாட்சி விளக்கை எடுத்து அந்த ஆளு கையில குத்தியதும் இந்த விளக்கு நெளிந்து போய் இப்போவும் சிரித்துக்கொண்து அவன் தலைமாட்டிலே இருப்பதும் இவளுக்கு மட்டும்தானே தெரியும். மொகத்தை சேல தலப்பு வச்சு அழுந்த துடைத்துக்கொண்டாள். ஜெகனம்மா எல்லோருக்கும் காப்பி வாங்கி வந்தாள். காப்பி சூடாய் உள்ளே இறங்கியது.
‘ஆம்பளங்க யாராவது வந்து காலு விரல இழுத்து கட்டுங்கப்பா..’ என்று யாரோ சொல்ல, டெய்லர் சதாசிவம் தன் கையில் வைத்திருந்த ஒட்டுதுணியை வைத்து விரல்களை கட்டிக்கொண்டிருந்தார்.
‘அப்படியே மூக்கில பஞ்ச வச்சிருங்கண்ணே..‘ என்றாள் அமுதா சத்தமாக. மல்லிகாவும் ஜெகனம்மாவும் ஒருசேர அவளைத் திரும்பிப்பார்த்தார்கள். வெயில் சூடேற தொடங்கியிருந்தது.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....