தார்மீகம்
அந்த ரயில் நிலையத்தின் நடைபாதை காலியாகவே இருந்தது. இரவின் வெளிச்சங்கள் விளக்குகளாய் தூங்கிக்கொண்டிருந்தன. வழக்கமான இணைப்பு நாற்காலிகளுடன் அவற்றின் அடியில் உறங்கும் நாய்களுடனும் அமைதியாகவே இருந்தது அந்த நகரத்து ரயில் சந்திப்பு. இன்னும் கோயம்புத்தூருக்கான ரயில் வர ஒரு மணி நேரம் இருக்கிறது. டிராலியை கீழே வைத்துவிட்டு, தோளில் தொங்கிய கைப்பையை கைக்கு மாற்றிக்கொண்டு நின்றேன். நடைபாதை நீண்டு, நடக்கலாமே என்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் காத்திருக்க, டிராலியின் அருகில் நிற்கும் அவசியம் இல்லாததாய் மனதுக்கு பட்டது.
பழைய ரயில் நிலையங்களைப் பார்க்கும் போதெல்லாம் இது போன்றதொரு ஆசுவாசம் ஏற்படுவதுண்டு. எதுவும் வேகமாக நடக்காது என்பது போலவும், பழகிய தோற்றம் கொண்டதாகவும், பால்யத்தில் பார்த்த ஊரிலிருக்கும் ரயில் நிலையம் போன்றே மனதுக்கு நெருக்கமாக இருப்பது போலும் ஒரு தோற்றம் கொடுக்கும்.
சுற்றும்முற்றும் பார்த்தபோது, அந்த ரயில்நிலையம் மற்ற நிலையங்களை விட ஏதோ ஒரு வகையில் வித்தியாசபட்டு நிற்பதாய் தோன்றியது. நீண்ட நடைபாதை முழுமையும் இரும்புக் கம்பிகள் நேர்குத்தாய் நிற்க, சரிவாய் ஓடுகள் வேயப்பட்டு தாழ்ந்திருந்தது. ஊரின் பழமையை பறைசாற்றவே ஓடுகளை மாற்றாமல் வைத்திருப்பார்களோ என்று நினைக்கத்தோன்றியது.
சட்டென வெளிச்சத்துடன் ஒரு கதவு காலுக்கடியில் திறந்தது போல் இருந்தது. அப்போதுதான் கவனிக்க முடிந்தது, ரயில் நிலையத்தின் அறைகள் எதுவும் நடைபாதையில் இல்லாதது. சுவரை ஒட்டி ஆங்காங்கே படிகள் கொண்டு உள்ளிறங்கி அறைகள் இருந்தன. அங்கேயிருந்து தான் வெளிச்சம் வந்தது. அந்த அடித்தள அறையிலிருந்து ஒருவன் சக்கர நாற்காலியொன்றை தூக்கியபடி வெளியே வந்தான். நடைபாதையில் வைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு வந்தான். வெளிச்சம் அவன் பின்னால் ஒளிந்துக்கொண்டது. அவன் அதை இழுத்தபோது உண்டான கிரீச் சத்தத்திற்கு சுருண்டிருந்த நாயொன்று தலை தூக்கியது. எழுந்து முன்னங்கால்களை இழுத்துவிட்டு சோம்பல் முறித்துக்கொண்டு அவன் பின்னே ஓடியது.
ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளுடன் நடைபாதைக்கு வந்து சேர்ந்தது. நகைகளுடனும் பட்டு சேலைகளுடனும் வசதியாய்த் தெரிந்தார்கள் அந்த மனிதர்கள். சொல்லி வைத்தாற்போல் ஆண்கள் மூவரும் நாற்காலிகளிலும் பெண்கள் மூவர் அதன்முன் இருந்த கல் பெஞ்சிலும் ஆண்களைப் பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டார்கள். அந்த கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாதது போல் வலது காலை விந்திக்கொண்டு ஒருவன் அவர்கள் பின் இரண்டு பெரிய பைகளைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். அவர்களுக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்க இளம் பச்சை நிறத்தில் சட்டை வேறு அணிந்திருந்தான்.
‘பி1 பெட்டி இங்கேதானே வரும்?’ என்றார் நன்றாய் வளர்ந்திருந்தவர்.
‘ஆமாம், அதைதானே போட்டிருக்கு டிஸ்ப்ளேயில்.’ என்று சொல்லிவிட்டு, ‘வா, உட்காரு சாமி.’ என்று நின்றிருந்தவனின் பக்கம் திரும்பிச் சொன்னார்.
‘இருக்கட்டும், நான் நிக்கிறேன் அண்ணா.’ என்றான் சாமி எனப்பட்டவன்.
‘உன் ஓட்டை காலை வச்சுண்டு எவ்வளவு நேரம் நிப்ப?.. இங்கே உட்காரு சாமி..’ என்று பெண்கள் அமர்ந்திருந்த கல் பெஞ்சில் இடம் செய்து கொடுத்தாள் மூவரில் உயரமான பெண்மணி. அவர் நகரும் போது, அவரின் வைரபேசரி ரயில்வே நடைபாதையின் விளக்கில் பட்டு மின்னியதை கவனிக்கக் கண்கள் தவறவில்லை. அந்த சாமி இன்னும் நின்றுக்கொண்டிருந்தான். அவர்களின் மீதான மரியாதையாகவும் இருக்கலாம். அந்த ஆண்மக்கள் பேசுவதற்கெல்லாம் அவன் சிரித்துக்கொண்டிருந்ததும் அதையே ஊர்ஜிதப்படுத்தியது.
நாய் ஓன்று வெகு வேகமாய் ஊளையிட்டுக் கொண்டே நடைபாதையில் ஓடிவந்தது. நின்றிருந்த சிலர், அதற்காக வழிவிட்டனர். படுத்திருந்த மற்ற நாய்கள் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டன. அதன் பின் சிறு கல் சுமந்து அடிப்பதுபோல் ஓடிவந்து நின்றுவிட்ட ரயில்வே ஊழியனொருவன், அது உயிருக்காய் ஓடுவதைக் கண்டு சிரித்தான். அந்த சாமி என்பவன் அவனை நெருங்கி, ‘பாவம் அது..’ என்றான்.
‘அட, சும்மாயிரு. காண்டீன் மூடிகிட்டு இருந்தோம். அப்போ நான் சாப்பிட எடுத்து வைத்த ஒரு சிக்கன் பிரியாணி பொதியைத் தூக்கிட்டு ஓடிட்டு. அதை பிடுங்கிட்டு தானே விரட்டிவிட்டேன்..’ என்று சொல்லி சிரித்துக்கொண்டே திரும்பிப் போனான்.
‘உனக்கு ஏன் அவனோட பேச்சு..’ என்றார் அவன் உறவுக்காரர்.
‘இல்லைண்ணா, அது பாவமில்லையோ. அது கிட்டே இருந்து பிடுங்கி இவன் சாப்பிட்டா இவனுக்கு சீரணிக்குமா என்ன..’ என்ற கேள்விக்கு உன் பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை என்பதாய், அவரிடமிருந்து ஒரு மூக்குச் சிதறல் சத்தம் மட்டும் வந்தது. மாமிகள் மூவரும் கொண்டு வந்த லட்டை உடைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
மௌனம் அதிகமாய் பரந்திருந்தது அந்த இரவு நேரத்தில். சக்கர நாற்காலியை இழுத்துச் சென்றவன் அதனுடனே நடந்து வருவது தெரிந்தது. அவன் பின்னே அந்த நாயும்.
அவன் வந்த அறையை விடுத்து என்னைக் கடந்து சென்று சுவரை ஒட்டியிருந்த இன்னொரு படிக்கட்டில் இறங்கி அறையைத் திறந்து அதனுள்ளே போனான். அறையின் வெளிச்சம் நடைபாதையை டார்ச்சடித்து கோலம் போட்டது. திறந்திருந்த கதவின் வழியே தெரிந்த ஓர் ஏணி, ஒரு மேசை, நாற்காலி, தண்ணி கூஜா என்று அந்த அறை புழக்கத்தில் இருப்பதை பறைசாற்றியது. அவன் பின்னால் வந்த நாயும் அவனுடனே படிகள் இறங்கி, உள்ளே சென்றுவிட்டது. அதற்கும் அந்த நிலையத்தின் அத்தனை அறைகளும் படிகளும் வேலைகளும் அத்துப்படியாய் தெரிந்திருக்கும் போல. மீண்டும் சாத்திவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.
அந்த நாயைப் போலவே எதற்காக படிகளில் இறங்கினோம் எதற்காக ஏறினோம் என்பதறியா ஒரு வலி மனதுக்குள் உண்டாகி, காலை சம்பவங்களை அசைத்துப்பார்த்தது. கருத்துகளை உரத்துக் கூறமுடியாதபடி மேடையில் இருந்து இறங்கிய நிமிடத்தை நினைக்கும்போதே எரிச்சலூட்டியது. எப்போதும் பொதுவாத கருத்துகளுக்கு உடன்படாத சபைகளுக்குள் பேச நுழைவதில்லை நான். தன்னை அறிவாளியாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் நண்பரின் வேண்டுகோளுக்கு அன்று இசைந்து நடக்க வேண்டியதாயிற்று.
மேம்போக்காய் சமூகத்தை குத்தகை எடுத்த கூட்டம் அது. தேர்தல் நேரத்தில் தினசரிகளில் காட்டும் குப்பத்தைப் பெருக்கும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களைப் போன்றவர்கள் அவர்கள். பணத்தை வாரியிறைத்து கட்டப்பட்ட மேடையும் ஆரஞ்சு வண்ண குளிர்பானமும் அதை எடுத்துக்காட்டின. ஊரில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்துவிட்டதாக ஒருவனை தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். நான் பேச எழுந்தபோது, நண்பர் சொன்னார், ‘கொஞ்சமாக பேசு..’ என்று. சபை வணக்கம் போட்ட மூன்று நிமிடங்களில் துண்டு சீட்டு வந்தது ’சாப்பிட நேரமாகிவிட்டது, பேச்சை முடித்துக் கொள்ளவும்..’ என்று. அசைவ மணத்துடன் சாப்பாடு களைகட்டியது. பெரிய மனிதரின் ஏற்பாடுதான் என்று நண்பர் முகம் கொள்ளா சிரிப்புடன் சொன்னார்.
அங்கிருந்து கழண்டு ஓடவேண்டுமென்று மனசு சத்தமிட்டது. இந்த நாயைப் போல எதற்கு ஏறுகிறோம், எதற்கு இறங்குகிறோம், அவன் பின்னால் ஏன் ஓடுகிறோம் என்பதை அறியமுடியாத சுயமூளை அற்றவர்களுக்கானது இம்மாதிரியான கூட்டங்கள். வலியை யோசிக்க யோசிக்க நிதானம் பிடிபடத்தொடங்குகிறது. வெற்றிகளை விட தோல்விகள் அதிகமான அனுபவங்களை கொடுத்துவிடுவதை என்றும் மறுப்பதற்கில்லை.
‘ரயில் வர எவ்வளவு நேரமாகும்னு கேட்டுட்டியா என்ன..’
‘ஆமா அண்ணா.. இன்னும் அரை மணி நேரம் மேலாகுமாம்..’ என்றான் சாமி.
‘இன்னைக்கு கல்யாணத்துல நடந்த கூத்தில் உனக்கு ஏதும் சம்பந்தமிருக்கோ?’ என்றபடி சாமியை நோக்கினாள் மூவரில் வயதானவள்.
‘ஹிஹி.. எனக்கு பொண்ணு வீட்டுக்காரங்கள மட்டும்தான் தெரியும் மன்னி. நான்தான் இந்த மாப்பிள்ளை நல்லவன், வல்லவன்னு சொல்லி ஏற்பாடு பண்ணினன். பெண்ணை சம்மதிக்க வைக்க அவா கொஞ்ச நாள் எடுத்தா. அதற்கப்புறம் அவாளா பேசினுட்டா. எனக்கு அதுக்கு மேலே தெரியாது.’ என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.
‘பொய் சொல்லாதே. இன்னைக்கு மட்டும் காயத்திரி ஓடியிருந்தான்னா, உன் இன்னொரு காலையும் எடுத்திருப்பா. நல்லவேளை பொண்ணை அமுக்கி பிடுச்சு கல்யாணத்தை முடிச்சுட்டா. தாலி வாங்கிட்டப்ப அவ முகத்தைப் பார்த்தேனே, அரை ஆழாக்கு அருள் இல்லை அதில்.’ என்று பொரிந்தாள் மத்திம வயதிலிருந்தவள்.
சாமி அதற்கும் சிரித்துக்கொண்டிருந்தான். ‘என்ன ஜென்மமடா நீ. உன்னை திட்டிண்டு இருக்கன். அதற்கும் சிரிக்கிறே. இவனை மாப்பிள்ளையா வச்சிண்டு நம்ம விஜயா எப்படி சமாளிக்கிறாளோ தெரியல. அந்த காலத்துல அவ வீட்டு திண்ணை காணாம நெல் மூட்டை பழவராயர் வீட்டிலிருந்து வந்து கிடக்குமாம். எங்கம்மா சொல்லுவா. அத்தனை செல்வாக்கோடு இருந்தவ. இப்பத்திய நிலைமை அவ பொண்ணை ஒத்தாசையா வந்து சேர்ந்த இவன் தலையில கட்டவேண்டியதாச்சு.’ என்றாள் மேலும் முகம் சுளித்துக்கொண்டு.
‘ராஜி, இப்போ எதுக்கு விஜயாவெல்லாம் இழுத்துண்டு? விடு பேச்சை.’ என்றார் கண்ணாடி அணிந்திருந்த மனிதர்.
‘ஏனாக்கும்.. உங்களுக்கு தானே விஜயாவை கேட்டுண்டு இருந்தா. சீர் பணம் பத்தான்னு தானே உங்கம்மா வேண்டானுட்டா. அந்த கோபமோ என்னமோ என் வாயை அடைக்கிரேள்.’ என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் ஜக்கை எடுத்தாள் கட்டை பையிலிருந்து. மற்ற இரண்டு பெண்களும் நமட்டு சிரிப்பை சற்று சத்தமாகவே சிரித்தார்கள்.
‘வண்டி வருதான்னு பாரு போ..’ என்று சாமியைத் துரத்தினார் கண்ணாடி அணிந்தவர். சாமியும் சிரித்துக்கொண்டே நடைபாதையின் ஓரமாய் தண்டவாளத்தில் விழுந்துவிடுவது போல் நின்று எட்டிப்பார்த்தான்.
அந்த ரயில்வண்டியில் ஒரு பெட்டி மட்டுமே குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பெட்டி. அதில் வெகு சிலரே ஏறக்காத்திருந்தனர். தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு என்றில்லாமல் மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூருக்கு என்றிருந்தது வண்டி. வேறு ஏதும் வண்டிகள் அந்த நேரத்தில் இல்லாமல் அந்த நிலையம் இருட்டை அப்பிக்கொண்டு ஆங்கில மர்மப் படங்களில் வரும் முதல் காட்சியைப் போலிருந்தது. ஒலிப்பெருக்கி உயிர்பெறும் சத்தம் கேட்டது. வண்டி வருவதற்கான அறிவிப்பு ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மாற்றிமாற்றி ஒலிபரப்பாகியது.
அங்கங்கே முடங்கியிருந்த மக்கள் சுருட்டிக்கொண்டு எழுந்து சுறுசுறுப்பானார்கள். ரிசர்வ் செய்யப்படாத பொது பெட்டியின் அருகே கூட்டம் மூட்டைகளையும் சிறு பைகளையும் தூக்கிக்கொண்டு நின்றது. தூரத்து சிவப்பு விளக்கின் மீதே அனைவரின் கண்ணும் பதிந்திருந்தன. அதை மறைத்து சட்டென கரிய ஒற்றை யானையாய் அந்த எஞ்சின் அருகில் வரத் தொடங்கியது.
அதன் நீண்ட சிவப்பு மூக்கு நெருங்கி வந்தபோதும் கருப்பாகவே இருந்தது. ரயிலின் முகப்பு நம்மை கடக்கும்போது எழும் சத்தம் காதை பதம் பார்க்கும் என்பதால் அதை பார்த்தவாறு இருந்த வலதுகாதை மூடிக்கொண்டேன். மங்கலாய் ஒரு விளக்கு வெளிச்சம் அதனுள்ளே இருப்பவர்களை வெளிகாட்டியது. அதன் தடதடக்கும் சத்தம் இதயத்தின் அருகாமையில் ஒலித்து உடல் முழுவதையும் அசைத்து பார்த்தது. முகப்பு கடந்து, பெட்டிகள் முன்னோக்கி நகரத்தொடங்க சத்தமும் சற்றே விலகியது அல்லது பழகிப்போனது. காதிலிருந்து கைகளை நீக்கி டிராலியுடன் பெட்டி நிற்க காத்திருக்க, அந்த பெரிய குடும்பம் எனக்குமுன் பெட்டியின் வாசல் தேடிக்கொண்டு அசைந்துக்கொண்டு நின்றது. வண்டி ஓரிடத்தில் அமைதியானது.
சாமியானவன் தூக்கமுடியா சுமையுடன் பெட்டிக்குள் முதலில் ஏறினான். வாசல் அருகிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு மற்ற பைகளை இவர்களிடம் இருந்து வாங்கி உள் வைத்துக்கொண்டிருந்தான். வண்டி இரண்டு நிமிடம்தான் நிற்கும் என்பதால் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். அவர்களும் ஏறினார்கள். நான் ஏற முனைய, சாமி இறங்கத் தொடங்க, நான் நகர,’தேங்கஸ்ங்க’ என்று சொல்லிகொண்டே வேகமாய் நகர்ந்தான். பெட்டியில் ஏறிவிட்டு, அவன் எங்கே விரைகிறான் என எட்டிப்பார்க்க அவன் அதற்குள் நான்கைந்து பெட்டிகள் கடந்து காலை விந்தி இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.
உள்ளே இடம் பார்த்து அமர்ந்தபோது, அடுத்த பகுதியில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், அதெல்லாம் சரியா ஏறிவிடுவானென்று.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....