வலசை ( சிறுகதை ) (அமரர் கல்கி நினைவு விருது பெற்ற சிறுகதை - 2017) I கா ல்வாயின் ஓரமாய் அந்த பெரிய வீடு அந்தகார இருளுக்குள் தனித்து அமிழ்ந்து போயிருந்தது. வெளீர் மஞ்சள் வண்ண வாயிற்கதவுகளுடனும் வெள்ளை சுற்றுச்சுவருடனும் சிறு பிறையொளியில் மங்கலாய் காட்சி தந்தது. அந்த வீட்டின்முன், எங்கு செல்வதென அறியாமல் பருத்தும் நெடிந்தும் நின்ற கரிய நிற யானைக்கு சோர்வு அதிகமிருந்தது. கூட்டம் விட்டு பிரிந்தும் மலையின்று இறங்கியும் இரண்டு நாட்களாகிறது. தான் முன்னின்று நடத்திய தன் பிளிறுகளையும் குட்டிகளையும் காப்பாற்றமுடியாமல் குண்டடிப்பட்டு கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டு தனித்து நிற்பது அவமானமாய் தோன்ற ஒரு கோபம் கொப்பளித்தது. எல்லாம் இந்த மனிதர்களால் ! உணவும் தண்ணீரும் எங்கிருக்கும் என்று தேடி இத்தனை தொலைவு வந்தாயிற்று. இங்கிருந்துதான் அதன் நாசி தொட்டது, மாவின் வாசனை. கரும்பின் வாசம் போலவே மாவின் வாசத்திற்கும் இக்களிறு அடிமை. மகிழ்வாய் தலையாட்டிக் கொண்டது. வாயிற்கதவு வழி நுழையாமல் கிழக்கு பக்கமாய் அந்த வீட்டைச் சுற்றியது. முன்பக்கம் தவிர மற்ற ...