புத்தகம் : தவ்வை
புத்தக ஆசிரியர் : அகிலா
புத்தக மதிப்புரை : முனைவர் பெண்ணியம் இரா. பிரேமா
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
.......................................
எழுத்தாளர் அகிலா அவர்களின் தவ்வை நாவல் பெண் சார்ந்த புனைவாகும். பெண் எழுத்தாளர்கள் தொடாத ஒரு கருவினை அவர் தொட்டுப் பேசியுள்ளார்.
எழுத்தாளர் தி ஜானகிராமன் இக்கருவினை தன்னுடைய "நள பாகம்" என்ற நாவலில் எடுத்தாண்டுள்ளார். ஆனால் அந்நாவலில் இக்கருவினை, பெண் சார்ந்த புனைவாக அன்றி , ஆண் சார்ந்த புனைவாகப் பேசியுள்ளார்.
எழுத்தாளர் பெருமாள்முருகன் தன்னுடைய "மாதொருபாகன்" என்ற நாவலில் இக்கருப்பொருளை ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்ததாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரு எழுத்தாளர்களுமே பெண்ணின் உளவியலை அணுகிப் பார்க்கத் தவறிவிட்டனர்.
சகப் பெண் எழுத்தாளர்கள் தொட்டுப்பார்க்கத் தயங்கும் ஒரு விவாதத்திற்குரிய கருப்பொருளை எழுத்தாளர் அகிலா அவர்கள் தன் முதல் நாவலிலேயே தொட்டுப் பார்த்து இருப்பது அவருடைய தனித்துவத்தை நமக்கு உணர வைக்கின்றது. பெண் உடல் சார்ந்து நடத்தப்படும் ஆணாதிக்க அதிகாரத்தினை முன்வைத்து இக்கதை நகர்த்தப்படுகின்றது.
இந்த உலகம் பெண்களைப் பிரசவிக்கும் உயிர் இயந்திரமாகவே பார்க்கிறது. தாய்மைக்கான தகவமைப்புக்காக அவள் உடல் கடக்க வேண்டிய வலிகள் பற்றிய அக்கறையோ கருணையோ இந்த உலகுக்கு இல்லை. திருமணம் குழந்தைப் பேற்றிற்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒப்பந்தமாக விளங்குகிறது. ஒரு பெண் தாய்மை அடைய தாமதமானால் ஊரும் உறவும் அவள் மனதில் சொருகும் அம்புகள் கிழிக்க வெளிப்படும் கண்ணீர், குருதி வடிவமாகிறது.
அறிவியல் தொழில்நுட்பம் குறிப்பாக மருத்துவ தொழில்நுட்பம் வளராத முந்தைய தலைமுறை காலகட்டம் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் "மலடி" என்று தூற்றப்படுவதுடன், பல குடும்பங்களில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் மறுமணம் செய்து கொள்வது மிகச் சாதாரணமாக சமூகத்தில் நடைபெறும் நிகழ்வாக இருந்து வந்துள்ளது. அதைத் தவிர இச்சமூகத்தில் குழந்தை பேற்றுக்காக வேறு பல கொடுமைகளையும் பெண்கள் அனுபவித்து இருக்கிறார்கள். கணவன் ஆண்மை அற்றவனாக இருந்தாலும், அவன் தன்னுடைய இயலாமையை மறைத்து, அதைத் தன் மனைவியின் இயலாமையாக, தன் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பிரதிபலிக்கின்றான்.
தன்னை ஆண்மை உள்ளவனாக அடையாளம் காட்டிக்கொள்ள அவன் செய்யக்கூடிய உட் சூட்சுமங்களை இக்கதை எடுத்துப்பேசுகின்றது. தனக்காக இன்னொருவனின் கருவைச் சுமக்கும் மனைவியை அவன் நாள்தோறும் செய்யும் சித்திரவதைகள் இக்கதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நாவலில், 'தவ்வை' என்ற பாத்திரம் பெண்களுக்கே உரிய ஆசாபாசங்களோடு படைக்கப்படவில்லை. கணவனின் அன்புக்கு ஏங்குவது, தாய் பாசம் என்ற பெண்களுக்கேயான குணநலன்கள் இப் பாத்திரப் படைப்பின் மூலம் உடைக்கப்படுகின்றன. தவ்வை, தான் பெற்ற குழந்தையைப் பெரிதாகப் போற்றி, பரிவு காட்டியதாகக் கதை ஆசிரியர் ஓரிடத்திலும் பதிவு செய்யவில்லை. அதற்காக ஏங்கியதாகவும் காட்டவில்லை. இக்கதையில் இதனை ஒரு பெரும் மாற்றமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குழந்தை பிறப்பு, அதன் வளர்ப்பு, அதனுடைய நலன் இவற்றிலேயே தன்னுடைய நேரத்தின் பெரும்பான்மையைச் செலவழிக்கக் கூடிய பெண்கள் தான் நடைமுறையில் நாம் காணும் பெண்கள். ஆனால் தன் வாழ்க்கையைக் குழந்தை வளர்ப்பிலும் குழந்தை பாசத்திலும் மூழ்கடித்துக் கொள்ளாமல், மனநோய்க்கு ஆட்பட்ட தன்னை அதிலிருந்து தானே மீட்டெடுத்து, தன் வாழ்வைத் தானே முடிவெடுத்து வழிநடத்துகின்ற கதாபாத்திரமாக தவ்வை படைக்கப்பட்டுள்ளாள்.
மாமனார் காட்டிய வழியில் தன்னை ஆசிரியையாக உருவாக்கிக் கொண்டு, தான் வாழும் நாட்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக்கொள்கிறாள். வயதான காலத்திலும் தன் வாழ்க்கையைத் தானே எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பெற்று வாழ்கின்ற பெண்ணாக தவ்வை படைக்கப் பட்டிருப்பது ஒரு புதிய வழித்தடத்தைப் பெண் சமூகத்திற்கு அமைத்துக் கொடுக்கின்றது. அத்துடன், குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணினத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்துள்ளது.
தவ்வை - மனைவி, தாய் என்ற பிம்பத்தைத் தாண்டி, தான் தனிப்பட்டவள் என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளாள். இது படைப்பாசிரியரின் நுட்பமான வெற்றி எனலாம். பெண் ஆணுக்கானவள். அவனைச் சார்ந்து வாழவேண்டும் என்று விதிககப்பட்டவள் என்ற மரபார்ந்த பிம்பத்தைத் தகர்த்தெறிகின்றாள். நுகர்வு கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்த பெண்ணாக தவ்வை காட்சியளிக்கின்றாள். அத்துடன் காம இச்சைகளைத் துறந்த பெண்ணாக உருவாக்கபட்டிருக்கிறாள். தவ்வை தனித்துவம் மிக்கவள். வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவள் அல்லள். அவள் அதிலிருந்து மீண்டு எழுந்து, தனக்கான வாழ்வை வாழ்பவள் என்ற புதிய பெண் பிம்பத்தைத் தன் கதாபாத்திரத்தில் வழி ஆசிரியர் படைத்துக்காட்டியுள்ளார்.
பெண் மரபார்ந்த விழுமியங்களை மீறும்போது, தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள். அவளுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் ஆணுக்கானதாக இச்சமூகம் கற்பிக்கின்றது. பெண் தனக்கான குடும்ப எல்லையை /தாம்பத்திய எல்லையை மீறும்போது, அவள் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றாள். அப்பொழுது அவள் வீட்டில் இருந்து விரட்டியடிக்கபடுகின்றாள். சில பல இடங்களில் கணவன் மனைவியைக் கொன்று அவள் தலையை வெட்டி எடுத்து வரும் சம்பவங்களும் நிறைவேறியுள்ளன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறி தனித்துவமிக்கவளாக அதே கிராமத்தில் செல்வாக்கோடு, தன் புகுந்த வீட்டாருக்கும் ஊருக்கும் நம்பிக்கை உடையவளாக வாழ்ந்து வருவது என்பது ஒரு புதிய பரிணாமமாக, பெண்ணினத்தின் மீட்சிக்கான வழிமுறையாக இனம் காணமுடிகிறது.
பெண்களின் அழுகையை இந்நாவல் முன் நிறுத்தவில்லை. பெண்களின் வலியை உணர்த்தினாலும், அவ்வலியைத் தன் அனுபவத்தால் தூக்கி எறிந்து, தனித்துத் தன்னை நிலைநாட்டிக் கொண்டு இச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு சில பெண்களின் குறியீடாக தவ்வை படைத்துக் காட்டப்பட்டுள்ளாள். ஆணாதிக்கச் சமூகத்தில் அப்படி தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் தான் கொற்றவை, செல்லியம்மன், காளி, மாரி, துர்க்கை, அங்காளி என்ற பெண் தெய்வங்கள் என்று நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். "ராணியாய், ஜமீன்தாரினியாய், எஜமானியாய்- இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்" என்று அவர் குறிப்பிடுவது எத்தனை எதார்த்தமான உண்மை.
தவ்வை நாவல் பாத்திரப் படைப்பில் மட்டுமன்றி உத்திகளைக் கையாள்வதிலும் சிறந்து விளங்குகின்றது. இந்நாவலில் கதை நடந்த காலம் முன்னும் பின்னுமாகப் பேசப்படுகின்றது. அதனைப் பின்னொரு காலம், முன்னொரு காலம் என்று குறிப்பிட்டுள்ளது வாசகர்கள் நோக்கில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி வட்டார வழக்கு கதை முழுவதும் பயணிக்கின்றது. இரட்டைக் கட்டு வீடு, கொல்லைப்புறம், படலை, இடுக்கு, பத்தாயம், கட்டாந்தரை, புட்டம், பின் கட்டு, பத்துத் தண்ணி, சுண்டக் கறி, கொசுவம், மாடக்குழி, விறகடுப்பு, பகழி, வாய்க்கால் என்று வட்டார சொற்கள்கள் நாவல் முழுதும் புழங்குகின்றன.
கதை நாயகி தவ்வை, பெண் நாட்டுப்புற தெய்வமான செல்லியம்மனைத் தன் தோழியாகப் பாவிக்கிறாள். சில நேரம் செல்லி அம்மனாகவே தன்னைப் பாவித்துக்கொள்கிறாள்.
'செல்லி தானே நம்ம கடவுள். அவதான காவல் தெய்வம்! நான் அழும் போதெல்லாம் என் கண்ணைத் துடச்சு விடுவா....!. நான் சிரிக்கும்போது அவளும் சிரிப்பாள்...!'என்ற தவ்வையின் வாக்கு இதனை உறுதி செய்கின்றது.
குடும்ப அமைப்பில், பெண்கள் தங்களை இப்படி தெய்வமாகப் பாவித்து கொள்வது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நடந்தேறியுள்ளது.
'ஒவ்வொரு பெண்ணும் இளையவர்களின் தவ்வைதான். கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பை யாருக்காகவோ எதற்காகவோ காப்பாற்றிக் கொண்டே தீப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்' என்ற நாவலாசிரியரின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
மொத்தத்தில், எழுத்தாளர் அகிலாவின் தவ்வை நாவல் தமிழ் இலக்கியத்திற்கு புதிய வரவு மட்டுமல்ல ; புதுமையான வரவும் கூட; மரபார்ந்த பெண் பிம்பத்தை மாற்றியமைக்கும் முயற்சியே தவ்வை. அடிமை வாழ்வு வாழும் பெண்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக இந்நாவல் அமையும் என்பது உறுதி.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....