தவ்வை புதினம் - மதிப்புரை
தவ்வை - அகிலா
மதிப்புரை : T N ரஞ்சித் குமார்
"பெண்கள்தான் எத்தனை எத்தனை விதமாய்..! அவர்களுக்குள் எத்தனை ஆயிரம் ரகசியங்கள்..! ஊரின் பெயர், நாட்டின் பெயர், இனத்தின் பெயர், சாதியின் பெயர், மதத்தின் பெயர் எல்லாம் மாறியிருக்கலாம். ஆனால், பெண்கள் ஒன்றுதான்! " (பக்கம் 206)
வாசகனுக்கு புனைவு அளிக்கும் தனிச்சலுகை, எத்தனை காலம் ஆனாலும் கதாபாத்திரங்களால் ஒருபோதும் பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வாய்ப்புகளற்ற ரகசியங்களை மனதோடு வைத்துப் பேணச் சொல்லி நம் மீது படைப்பு வைக்கும் நம்பிக்கை. இப்படியான சுதந்திரம் சமயங்களில் எந்த அளவுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறதோ சில சமயங்களில் அதுவே ஒருபோதும் நம்மால் இறக்கி வைக்கவோ ஆற்றுப்படுத்தவோ முடியாத பெரும் சுமை ஒன்றை சுமக்க வேண்டிய கட்டாயத்தை விதித்து விடுகிறது. நீர்வழிப் படூஉம் நாவலின் இறுதி வரி தரும் அதிர்ச்சி ஒரு உதாரணம்.
அதேபோல கதாபாத்திரங்களால் மட்டுமே புரிந்து கொள்ளும் படியான உளவியல் சூட்சுமங்கள் கதைகளில் தென்படும் போது வாசகனின் சிந்தனையில் உருவாகும் கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் கிடைக்காமல் போவதும் உண்டு. சமீபத்தில் படித்த எஸ்.ரா வின் பதினாறு டயரிகள் சிறுகதையில் இதற்கான உதாரணம் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளிலும் வாசகன் அடையும் பலன் என்னவாக இருக்கும் என்று பார்க்கும் போது மிக முக்கியமாகப் படுவது அக்கதாபாத்திரங்களோடு மானசீகமாக உரையாட இவை உருவாக்கும் இணைப்புகள் நீடித்த கருத்து மற்றும் உணர்வுரீதியான பரிவர்த்தனைகளுக்கு வழிகோலுகின்றன. முரண்களையே அனுபவிக்காமல் தொடரும் வாசிப்பு இப்படியான மானசீக உரையாடல்கள் உருவாகவோ அதன் மூலம் தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ளவோ அடித்தளம் அமைத்துத்தருவதில்லை.
தவ்வை நாவல் இந்த இரண்டு அம்சங்களையும் சரிவிகித அளவில் கலந்து படைக்கப்பட்டுள்ளது. மையக்கதாபாத்திரமான தவ்வை க்கு நாவலின் இறுதியில் அவளது பேரனின் மனைவியான வைசாலி வந்து சேரும் வரை அவளைப் புரிந்து கொள்ள இயல்வது கதையைப் பின்தொடரும் வாசகர்களாகிய நம்மால் மட்டுமே. இத்தனைக்கும் தவ்வை யின் அம்மா பார்வதியம்மாள், அத்தை சுமங்கலியம்மாள், மருமகள் ருக்மணி மற்றும் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண்கள் என பெண்களால் சூழப்பட்டே இருப்பினும் தவ்வை யின் அயராத மனத்தவிப்பு அவர்கள் யாராலும் புரிந்து கொள்ளப்படாமலேயே போகிறது. மாமா சங்கரலிங்கம் மட்டுமே தகப்பனைப் போல அக்கறையுடன் நடந்து கொள்கிறார். ஆனால் அவரால் கூட தவ்வையின் மனப்பிறழ்வுக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியுமாலே போகிறது.
இவான் துர்கனேவின் முமூ சிறுகதையில் வரும் ஊமையனின் குணாம்சங்களோடு- யாரோடும் சிநேகம் கொள்ளாத ஒடுங்கிய குணம், பண்ணை முதலாளிக்கு மிகுந்த விசுவாசமாக இருத்தல், கட்டுமஸ்தான உடற்கட்டு, பெண்களின் அணுக்கம் எப்படிப்பட்டதென்றே அறியாதத் தன்மை, குழந்தை மனம்-இந்நாவலில் வரும் ரங்கன் இருக்கிறான்.
தவ்வை மற்றும் ராமநாதன் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போக சமூகத்தின் வழக்கமான ஏச்சு பேச்சுக்கள் முதலில் தவ்வை மீது விழுந்தாலும் ஒரு கட்டத்தில் ராமநாதனின் உண்மையான பலவீனம் நோக்கி சந்தேகப்பார்வை திரும்புகிறது. தன் மீது விழ இருந்த வீண் குற்றச்சாட்டு தவறி விட்டாலும் அதன்பிறகு தவ்வை மீட்க முடியாத மனப்பிறழ்வுக்குள் சிக்கி அலைக்கழிய நேர்கிறது.
அம்மாவே ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு ஆறுதலை நாடுவது தான் இழிவாகப் பார்க்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடுமோ என்ற நடுக்கத்தை தளர்விக்கும் ஒரே ஆறுதலாக தவ்வைக்கு, காவல் தெய்வமான செல்லியம்மன் மட்டுமே இருக்கிறாள்.
முன்னொரு காலம், பின்னொரு காலம் என்று தவ்வை யின் திருமணமான காலமும், அறுபது வயதிற்கு மேல் ஆகி தன்னந்தனியாக வசித்து வரும் முதிய வயதுக் காலமும் சீராக அத்யாயங்கள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி வட்டார வழக்கை அச்சு பிசகாமல் மொழியில் கொண்டு வந்துள்ளதோடு அத்யாயங்களின் வரிசை வடிவமைப்பும் நாவலின் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய பலமாகப் படுகிறது. கதையில் தனிப்பட்ட முறையில் எனக்குக் குறையாகப் பட்டது ராமநாதனால் தவ்வை அனுபவிக்க நேரும் வன்கொடுமைகளுக்குத் தக்க தீர்வு அவனுக்கு கிடைக்காமல் விரைவிலேயே தடம் தெரியாமல் அழிந்து போகிறான். தவ்வை யின் பரிதாபமான நிலைக்குக் காரணமான அவனது நடவடிக்கைகள் மீதான ஆற்றாமைகள் கூட அவனது விரைவான மறைதலோடு சேர்ந்து மங்கிப் போவது போல் பிரமை ஏற்படுகிறது.
கதை முழுவதும் தவ்வை ஐ மையமாகக் கொண்டே நகர்கிறது. பண்ணை வீட்டின் நான்கு தலைமுறைகளை கதையில் கொண்டு வந்திருப்பதால் கதாமாந்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக ஒருவரை இன்னொருவரிடமிருந்து பிரித்து அறியும்படி ஒவ்வொருவரையும் அவர்களது வாழ்க்கைச்சூழலை பிரதிபலிக்கும் குணங்களோடு மிக நுட்பமாகவும் தேர்ச்சியுடனும் படைத்துள்ளார் அகிலா. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் ரங்கன் கதாபாத்திரம் கதையில் வாய்விட்டுப் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் ஒன்றிரண்டு மட்டுமே. ஆனால் தவ்வை யின் பதட்டம் நிரம்பிய கணங்கள் முழுவதிலும் ரங்கனின் உயிர்த்துடிப்பு வேகமாக அடித்துக் கொள்வதை அவனது இன்மைத் தருணங்களிலும் நம்மால் உணர முடிகிறது.
காலத்தில் முன்னும் பின்னும் நினைவலைகளாகச் சீராகச் செல்லும் நாவல் தவ்வை யின் பேரனான விசாகனின் மனைவி வைசாலி வந்ததும் வேறோரு உச்சமான தளத்தை எட்டுகிறது. தவ்வை ஐ மானசீகமாகப் பின்தொடரும் நம்மின் பாரத்தை ஓரளவுக்கேனும் இறுதியில் இறக்கி வைப்பது வைசாலி தான். கதையின் இறுதிப் பகுதியில் தவ்வை க்கும் வைசாலிக்கும் இடையே நடைபெறும் மறைமுகமும் வெளிப்படையானதுமான உரையாடல்கள் அதிலிருந்து இருவருக்குமிடையே மலரத் துவங்கும் உணர்வுப்பூர்வமான ரகசியமான அந்நியோன்யம் மிகச் சிறப்பாக அகிலா அவர்களால் கைகூடி வந்திருக்கிறது.
இவ்வருடம் வாசித்த புனைவுகளில் தவ்வை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இமையம் அவர்களின் எங் கதெ வாசித்து முடித்து இரண்டு நாட்களாக நாவலின் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் இருந்தேன். தவ்வை நாவலும் அதே பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. அகிலா அவர்களின் பிற படைப்புகளையும் தேட துவங்கி விட்டேன்.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....