Skip to main content

ஷேர்னி (Sherni) திரைப்படமும் நானும்..

 ஷேர்னி - Sherni Movie



ஷேர்னி திரைப்படத்தை OTT தளத்தில் பார்க்க நேர்ந்தது. முந்தைய நாளே அந்த படம் என் கண்ணில் பட்டிருந்த போதிலும், மொழி தடுமாற்றம் - இந்தி மொழி படம் - காரணமாக யோசித்துவிட்டேன். ஆனாலும் அதன் கதை சுருக்கம் என்னை பார்க்காமல் ஒளிந்து கொள்வதற்கான காரணங்களைக் கேட்டது. கேள்விகளே, மனிதனின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. படம் பார்க்கப்பட்டுவிட்டது என்னால். 


Sherni என்றால் இந்தியில் பெண் சிங்கம் என்று பொருள். ஆனால் இந்த படத்தில் வருவது பெண்புலி. புலிக்கு உருது மொழியில் 'ஷேர்' என்பதும் அதுவே, பேச்சு வழக்கு மொழியாய் இந்தியிலும் அமைந்துவிடுவது உண்டு. அதுதான் பெண்புலியாய் 'ஷேர்னி'. 




மனிதர்களை வேட்டையாடும் பெண்புலியொன்று மலைகிராமங்களில் சுற்றித்திரிய, ஒரு காட்டை விட்டு மற்றொன்றுக்கு நகர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்று, பேராசையும் மமதையும் கொண்ட மனிதர்களிடம் சிக்கி இறந்து போவதே கதை. இங்கு வித்யா பாலன் (Vidya Balan) காட்டிலாக்கா அதிகாரியாக இடமாற்றத்தில் வந்து சிக்குகிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் அலுவலக சூழல், புலியைக் கொன்று பிடிக்க வேட்டையாளர்களின் சாதுர்யம், அதை சாதகமாக்கும் அரசியல் நாயகர்கள், வனத்தை நேசிக்கும் ஆனால் பயம் கொள்ளும் மலை வாழ் மக்கள் என்று கதை யதார்த்த களத்தைச் சுற்றி இயங்குகிறது. 

வனத்துறைக்குள்ளே இரண்டாய் உடைகிறது மனித அரசியல். மலைவாழ் மக்களுடன் தொடர்பில்லா மேல் தட்டு அதிகாரிகள், மக்களை, அவர்களின் மலையைச் சுற்றி இருக்கும் வாழ்விடங்களை, ஆடு மாடுகள் மேய்ப்பிடங்களை புரிய முடியாத அந்த அதிகார வர்க்கம், அவர்களுக்கான அரசியல் தொடர்புகள், இவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கீழ் மற்றும் நடுத்தர தட்டு அதிகாரிகள், அதில் ஒன்றாய், காட்டிலாக்கா அதிகாரியாய் வரும் வித்யா பாலன் என்று கதை யாரையும் முதன்மைபடுத்தாமல் பிரச்சனையை மட்டும் திரைப்படம் முழுமையும் இழுத்து செல்வது சிறப்பு.




"ஒரு பொம்பளையை அனுப்பியிருக்காங்க.." என்ற பெண்ணினம் குமுறச்செய்யும் சொற்கள், அதை கேட்டதும் புலியாய் பொங்கி எழாமல் கண்களில் மட்டும் சிறிது சலிப்பைக் காட்டியபடி சாதாரணமாக பேசத்தொடங்கும் வித்யா பாலன், மிக நேர்த்தியான தேர்வுதான் இக்கதைக்கு. 

"நான் பார்த்துக்குகிறேன்.." என்று தைரியமூட்டும் மேல் அதிகாரியும் அரசியலுக்குள் தான் இயங்குகிறார் என்று தெரிந்ததும், நிதானமாய் ஆனால் கோபம் கலந்த, "கோழை" என்ற சொல்லுடன் விலகுவதும் சிறப்பு. யதார்த்தம் பேசுவதற்கு இங்கு ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? மனித நேயம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும். 

இங்கு வித்யா பாலனுக்குப் பதிலாக ஒரு ஆண் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பெரிதாய் மாறியிருக்க போவதில்லை என்பது என் கருத்து. அதனால் இங்கு தலைப்பில் இருக்கும் பெண் புலி Sherni என்பதை நான் அந்த காட்டு புலிக்கானதாக நான் எடுத்துக் கொள்கிறேன். படத்தின் இறுதிவரை என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவர் ஒரு பெண் அதிகாரி என்ற உணர்வை (குடும்பத்தாலும் அதிகமான மன உளைச்சல் இல்லை), பாலின வேறுபாட்டால் பெரிதாய் பாதிக்கப்பட்டதாய் எங்கும் காட்டப்படவில்லை அல்லது வித்யா பாலன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை இயக்குனர் பெண் கதாபாத்திரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று எடுத்திருந்தால், இதை, இயக்குனர் அமித் மசூர்க்கர் (Amit Masurkar) அவர்களுக்கு ஒரு பாராட்டாய் தெரிவிக்கிறேன். வித்யா பாலனை மனதில் வைத்துதான் காட்டியிருந்தார் என்றால், அதன் தீவிரம் போதவில்லை என்று என்னால் சொல்லமுடியும். 

கிராபிக்ஸ் புலி வந்து திரைப்படத்திற்கான பார்க்கும் ரசனையை குறைத்துவிடுமோ என்ற யோசனை என்னுள் இருந்தது. அவ்வப்போது அதை காட்டவேண்டிய கட்டாயங்கள் நேரும் இடத்தில், நிஜ புலியானது, வனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் வழியாக காட்டப்படுகிறது. 


ஷரத் சக்சேனா



Conservationist என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஷரத் சக்சேனா (Sharat Saxena) இலகுவாக யதார்த்தத்தில் வேட்டைக்காரன் இப்படிதான் இருப்பான் என்பதை வடிவமைக்கிறார். வனப்பகுதிகளில் ரிசார்ட் கட்டுவதும், விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் புகழை போதையாய் கொண்டாடுவதும் இன்றைய மான் வேட்டை அத்துமீறல்களின் உளவியலாக கொள்ளலாம். 


இயக்குனர் அமித் மசூர்க்கர்



இந்த படத்தில் புலி என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.. புலி என்பதை இயற்கைக்கான, மற்ற விலங்குகளுக்கான குறியீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் எந்த துறைக்கும் பொருத்திக்கொள்ளலாம். 


இந்த பதிவின் தலைப்பில் 'ஷேர்னியும் நானும்..' என்பதில் என்னுடைய தனிப்பட்ட மனநிலை ஒளிந்திருக்கிறது. 

சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்கொல்லி புலிகளைக் கொன்ற ஜிம் கார்பெட்டின் எழுத்தின் மீது ஒரு மையம் உண்டு. அவர் மனிதர்களைக் கொல்லும் புலிகளை மட்டுமே கொன்றிருக்கிறார். அதையும் அவர் அந்த கிராமத்து மக்களிடம் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே வேட்டைக்குக் கிளம்புவாராம்.

இத்திரைப்படத்திலும் அதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் மனிதனை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க பெரிதாய் முயற்சிகள் இல்லை. இந்தியாவில் சரணாலயங்கள் வந்ததே 1936யில் தான். அதனால் அரசு இதைதான் செய்யமுடியும் என்பது அன்றைய களநிலவரம். 

இயற்கையின் மீது தீரா மதிப்பும் காதலும் கொண்டவராக இருந்த அவர், ஒரு முறை, மூன்று மிலிட்டரி அதிகாரிகளை வேட்டைக்கு அழைத்து சென்ற இடத்தில், அவர்கள் கிட்டத்தட்ட 300 நீர் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு பதறிப்போனவர், இனி எக்காரணம் கொண்டும் வேட்டை என்பதை விளையாட்டாய் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். அதனுடன் சூழலியலைக் காக்க முனைகிறார். 

அவருடைய 'முக்தேஸ்வர் ஆட்தின்னி' குறித்த எழுத்தில், ஆட்கொல்லி புலியைக் கொன்றபிறகு என்ன எழுதுகிறார் என்றால், 

"மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலிகளை சுட்டு பிடிப்பது பெரிய திருப்தியை கொடுக்கிறது.... 

..... இதையெல்லாம் விட, மிக உன்னதமான திருப்தியாக நான் நினைப்பது என்னவென்றால், ஒரு துணிவான சிறு பெண்ணுக்கு, இந்த பெரிய பூமியில் ஒரு சிறு பகுதியை பயமின்றி பாதுகாப்பாய் நடக்க வழி செய்தது."

ஆனால், இப்போதோ, தனி மனிதனே தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலியிட்டு, பூசணிக்குள் வெடி மருந்து வைத்து பெரிய யானையின் வாயை கிழித்துவிடுகிறான், பெட்ரோல் பாட்டில் வீசி காதை கிழிக்கிறான். முடிவில் அதன் இறப்பை உறுதி செய்கிறான். 

மிருகத்திற்கும் மனிதனுக்குமான இந்த நீண்ட கால போராட்டத்தில் மிருகமும் இவனிடமிருந்து வித்தைகளை கற்றுக்கொள்கிறது; மனிதனும் அதே போல தான். 

மக்களுக்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை நிறுத்த, புலிகளை அவற்றுக்கான சரணாலயங்களிலும் மக்களைக் காடுகளுக்கு சற்று தொலைவிலும் நிறுத்த முயற்சிப்பதே இன்றைய காலகட்டத்தின் செயலாக இருக்கமுடியும். 

இத்திரைக்கதையிலும் அதுவே தீர்வாகிறது. காடுகளுக்கு, அடர்ந்த வனங்களுக்கு, வனவிலங்குகளுக்கு, அங்கு வாழும் மக்களுக்கு நேரும் நியாயமற்ற நிலையைச் சுட்டும் கதைக்களம், ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நிலையை மாற்ற, பெரிதாய் புரட்சி செய்துவிடமுடியாத சங்கடங்களையும் இதில் காட்டப்படும் பின்புலங்கள் நமக்கு காட்டுகின்றன. இருந்தும், அந்த புலியின் குட்டிகளை காப்பாற்றி படம் முடிக்கப்பட்டது போல, சின்ன சின்னதாய் இயற்கையையும் நம்மையும் சமன் செய்துக்கொள்ளலாம் நாம்.                                    



Comments

  1. நல்ல விமர்சனம்...

    பார்க்க வேண்டும்...

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...