Skip to main content

மண்சட்டி

மண்சட்டி




அம்மா கிளம்புனியா..ராகவியின் பெரிய குரலுக்குவரேன்டி, டீ போட்ட பாத்திரத்த கழுவி வச்சுட்டு வரேன்.. நான்தான செய்யணும்..என்று  அடுக்களையிலிருந்து முணுமுணுப்பு கேட்டு நின்றுவிட்டது.

 

அம்மா எப்போவுமே இப்படிதான். எல்லா வேலையும் தானே இழுத்துப்போட்டு செய்வாள். கொஞ்சம் எங்க கூட உட்கார்ந்து பேசும்மா. அட்லீஸ்ட் டிவியாவது பாரும்மா என்றால், முறைத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். அப்பா இறந்த இந்த ஆறு வருடமாய் அடுக்களை, அவளுக்கும் தம்பிக்குமான ஸ்கூல், காலேஜ், அப்பா விட்டுட்டு போன மாட்டுப்பண்ணை இதை தவிர வேறு எங்கும் போவதில்லை. யாராவது விசேஷத்துக்கு என்று ஊரில் கூப்பிட்டால்நிச்சயம் வரேன் மைனி..என்பாள். அதோடு சரி, போவதெல்லாம் இல்லை. நெருங்கிய சொந்தம் என்றால் மட்டும் வெளிறிய பட்டு ஒன்னை கட்டி, எப்போவும்போல சின்னதா ஒரு பொட்டு வைத்துக்கொண்டு கிளம்புவாள். ஆனால் ராகவிக்கு மட்டும் இருக்கிற நகையெல்லாம் மாட்டிவிட்டு கூட அழைத்துச் செல்வாள்.

 

எனக்கு பிடிக்கலம்மா..என்ற இவளின் எந்த ஈனக் குரலும் கனகாவின் காதில் ஏறுவதில்லை.போட்டுக்கடி..என்று ஒற்றை சொல்லில் முடிப்பாள். ராகவிக்கும் கல்யாணம் முடிந்தபிறகுதான் இவளுமே கனகாவ எதிர்த்து, ‘அவருக்கு பிடிக்காதும்மா..என்கிறாள்.

உனக்கு முன்னக்கட்டியே எனக்கு சீனுவ தெரியும்டி..என்று சொல்லி ராகவியின் வாயடைப்பது கனகாவின் வழக்கம். அவளின் பெரியம்மா மகன் சுந்தரம் அண்ணாரு பையன்தான் ராகவியின் வீட்டுக்காரன்.   

 

புவியரசன் இறந்தபிறகு பூவை மட்டும் கையால் தொடுவதில்லை என்று வைராக்கியமாய் இருந்தாள். ராகவிக்கு பூ வேணும் என்றால் கூட, நம்ம செராக்ஸ் கட பையன் ராசாவ பூ வாங்கிட்டு வரசொன்னேன்.. பாருட்டி வாசல்ல போயி..என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வாள். அத்தை மட்டும் இல்லேன்னா இந்த சின்ன பொட்டுக்கூட அவ நெத்தியில இருந்திருக்காது.

 

அப்பா இறந்த வீட்டுல, ஊரில இருக்கிற பொம்பளைங்களுக்கு எல்லாம் எங்கிட்டு இருந்துதான் வேர்க்குமோ தெரியல, தெனமும் பத்து பேரா சாயந்திரம் வந்து விளக்கு போடுறதும் ஒருத்தரு கழுத்த ஒருத்தரு கட்டிக்கிட்டு ஒப்பாரி வைக்கிறதும் செய்தப்போ, அத்தைதான் ‘இந்த கட்டிக்கிட்டு அழுறது, கனகாவ அழவைக்கிறது எல்லாம் வேண்டாம்னு’ சத்தம் போட்டு, காரியத்த சீக்கிரம் முடிச்சதும் நடந்தது.

 

அதன்பிறகு அத்தை ஊருக்கு கிளம்பிப்போனதும், பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் போனபிறகு, இவர்கள் ஒவ்வொருவராய் இவளை பேசியே சரிசெய்வதுமாய் இருந்தார்கள்.

 

ஒருமுறை புவியரசனின் பெரிய அத்தை இவளிடம் வந்து, ‘பாருட்டி கனகு. செம்பராம்புதூர்காரி வள்ளிய உனக்கு தெரியுமில்ல. ஒனக்கும் சின்னாத்தா மவ முறைதானட்டி வருது. அவ பொண்ணு நிச்சயத்த ஒன்ன கூப்பிடாம சத்தமில்லாம முடிச்சுட்டா பாரு. நீ கூப்பிட்டாலும் போமாட்டேன்னு எனக்குத் தெரியும். மூளியா போய் விசேஷத்துல நிக்கமுடியாதுன்னு ஒனக்கும் வெவரம் இருக்கும்ல்ல..என்று நீட்டி முழக்கி பேசியே அவள அழவைத்துவிட்டு சென்றாள்.

 

இதே ரீதியில் அவளின் அக்காகாரி ஒருத்தி, ‘வியாவாரத்துக்கு போனவன் எப்படி செத்தான்னு அவன் கூட்டாளியெல்லாம் விசாரிச்சியா. எல்லாம் தெசயன்வெள காரனுவ. கயவாணிபயலுவ.. எப்படி செத்தாலும் எங் கொழுந்தன், ஒன் வாக்கைய மண்ணுச்சட்டி கணக்கா ஒடச்சு போட்டுட்டு போயிட்டானே..என்ற முறையில் பேசிக்கொண்டே போக, தாங்கமாட்டாமல் கனகு நாத்தனாரிடம் சொன்னாள். நாத்தனார்காரி தங்கமாதான் தாங்கினாங்க அவள. அதுவும் பக்கத்துல வள்ளியூருல தான் வாக்கப்பட்டு போயிருக்கா அவ நாத்தனார். வாரத்து ஒருமட்டமாவது வந்து பாக்காம இருக்கமாட்டாள். அவதான் சித்திக்காரி வீட்டுக்கு போய், சத்தம் போட்டதும் அதன்பிறகு இவள அதிகம் சீண்டாமலிருந்தார்கள். அதற்குள் வருடம் ஒன்று ஓடியிருந்தது.

 

கனகுவும் ஒடுங்கி யாருடனும் பேசாதிருக்கப் பார்த்தாள். அவளுக்கென ஒரு சட்டமிட்டுக் கொண்டாள். புவியரசனப் பத்தி புள்ளைங்க கூடவும் பேசவே மாட்டா. சில நேரம் மட்டும் அவன் போட்டோவுக்கு முன்னாடி போய் நின்னு தேமேன்னு பார்த்துக்கிட்டே இருப்பாள். மகன் ஏதாவது வெடுக்குன்னு அக்காகாரிய பேசினா மட்டும் சொல்லுவா, ‘அவர போல அவசரப்படாத..என்று கண்ணு கலங்க சொல்லிட்டு நகருவாள். அப்போதே செல்வம் பேசாம ஆகியிருப்பான்.

 

ராகவி கல்யாணத்துக்கும் சாதாரணமா இருக்கிற ஒரு பட்ட கட்டி, அத அப்படியே வாரி சுருட்டி சொருகிதான் வந்தாள். அவளுக்கு அப்படி ஒன்றும் வயசு ஆகவில்லை. நாற்பத்தினாலுதான் ஆகுது. இந்த வயசுல தான் தனக்கூட படிச்ச பிரண்ட்சோட அம்மாக்கள் எல்லாம் டிசைனர் பிளவுஸ் தச்சு போடுதாங்க என்று குறைபட்டுக் கொள்வாள் ராகவி. ஆனால் கனகுவிடம் எந்த மாற்றமும் இல்லை. 

 

~~~


II

 

பள்ளி வேலை முடிந்து, ராகவி வீட்டுக்கு வந்து காப்பி போட்டுக் கொண்டிருக்கும்போது, சீனுவும் வேலை முடித்து வந்தான்.

எனக்கும் ஒரு காப்பி போடேன்பா..என்று சொல்லிவிட்டு முகம் கழுவ சென்றான்.

 

அவனுக்கான காப்பியை பிளாஸ்க்கில் ஊற்றிவிட்டு, தனக்கான காப்பி எடுத்துக்கொண்டு தாழ்வாரம் வந்து அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலி விடுத்து, பின்கட்டுக்கு இறங்கும் படியில் அமர்ந்தாள். சீனுதான், அவர்கள் வீட்டில் கடைசி பையன். அவனுக்கு திருமணம் செய்துவைத்த கையோடு அவளின் மாமனார் சொத்தைப் பிரித்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டார். மூத்தவருக்கு, நடு அத்தானுக்கு எல்லாம் திருநெல்வேலி டவுனுக்குள்ளேயே வீடு. இருவரும் சென்னையில் செட்டிலாகிவிட்டதால் டவுனில்தான் வாடகை கிடைக்கும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.

 

சீனுவுக்கு கிடைத்தது இந்த பழைய வீடு. இது தச்சநல்லூர் போகிற வழியில் இருந்தது. வீட்டில் கார் இருந்ததால், காலையில் மட்டும் சீனு இவளை பள்ளியில் விட்டுவிட்டு பேங்க் போவது வழக்கம். வேலை செய்யும் பள்ளி பக்கமென்பதால், மாலையில் நடந்தே வந்துவிடுவாள். இப்பொல்லாம் வீடு வாங்கணும்னா பெரிய லச்சம் வேணுமே. அதுக்கு டவுனில் இருந்து போய்வரும் தூரம் பரவாயில்லைன்னு நினைப்பாள் ராகவிக்கு.

 

காரை வீடுதான் என்றாலும் வீட்டில் ஒழுகு, காக்காவெடிப்பு ஒன்றுமில்லை. ஆறு அறைகளைக் கொண்டது. சிறு மச்சு ஒன்றும் இருந்தது. தாழ்வாரம் அடுத்து தட்டுமுட்டு சாமான்கள் போட்டுவைக்க ஒரு சிறு அறையும் அதற்கடுத்தாற்போல் பின்கட்டில் சிறு தோட்டமும் இருந்தது. இரண்டு தென்னைகளும் ஒரு வேப்பமரமும் கொய்யா, சீதா மரங்களும் கொண்ட தோட்டம் அது. திருமணமான இந்த இரண்டு வருடத்தில் என்றாவது மனசுக்கு சங்கடமாக இருந்தால் இங்குதான் வந்தமர்வாள். தாழ்வார படிக்கட்டில் இருந்து தோட்டத்து மரங்களையும் குருவிகளையும் பார்த்துக்கிட்டே இருந்தாலே மனது இலேசாகி விடுவது உண்டு. சீனுவை குறித்தோ அவன் வீட்டு ஆளுங்களைக் குறித்தோ அவளுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் எல்லாம் இவளைவிட மிகவும் மூத்தவர்கள். இவளை ஒரு மகா மாதிரியே பாத்துக்கிட்டாங்க. அவளுக்கான ஒரே கவலை அவ அம்மாதான்.  

 

அவளின் யோசனைக்கு இடையில், சீனு காப்பி ஊற்றிக்கொண்டு வந்தான்.என்னடா, டல்லா இருக்கே..புருவத்தை உயர்த்தினான்.ப்ச்.. ஒன்னுமில்லப்பா..என்று உதடு பிதுக்கினாள்.

என்னமோ அம்மாவ நெனைச்சுக்கிட்டேன். நாளைக்கி அவள பாத்துட்டு வரவா..என்று ராகவி கேட்க, ‘இதென்ன கேள்வி.. நானே வந்து ஸ்கூலில் பிக்கப் பண்ணிக்கவா..

வேண்டாம்பா. நாளக்கி மதியம் வரத்தானே. அப்படியே போய் அம்மாவ பாத்துட்டு வரேன். ஆத்தா வள்ளியூர் போச்சு. வந்துச்சான்னு தெரியல. அதுவர அம்மா தனியா இருப்பாளேன்னு தோணுச்சு..

சரி. போயிட்டு வா. நீ இப்படி மாஞ்சுகிட்டு இருக்கே. ஆனா என் அத்தகாரி என்னமோ உன்ன தேடாத மாதிரி, நீ போனாலும் பேசாம, டீ போடவான்னு கேட்டுட்டு அடுக்களக்குள்ள போயிரும். என்ன அம்மா பொண்ணு காம்பினேஷனோ இது.என்று சலித்துக் கொண்டான் சீனு.

 

அப்படியில்லப்பா. முன்னாடி எல்லாம் அம்மா எப்படியிருந்தான்னு உனக்குதான் தெரியுமே. அப்பா மேல ஈஷிகிட்டே இருப்பா. அப்பான்னா உசுரு அவளுக்கு. நாங்க கூட ரெண்டாம்பட்சம்தான். வாய் ஓயாம பக்கத்து வீட்டு எதிர்வீட்டு நியாயம் பேசுவா. நான் அப்பாகிட்டே பேசினா கூட அவளுக்கு கடுப்பாயிரும். தலையில எப்போவும் பூ இருக்கும். நாலு ஹேர்பின் குத்தி ரெண்டு பக்கமும் தொங்கும். பெரிய பொட்டோட இருப்பா. இந்த காலத்துல எந்த அம்மாவாவது மஞ்ச பூசுறத பாத்திருக்கோமா? அவ முகம் பூரா மஞ்சதான். அப்பா போனபிறகு ஏன் இப்படி ஒடுங்கினான்னு தெரியல. நானும் அப்போ ஸ்கூல்தானே போயிட்டு இருந்தேன். விவரமில்ல.

 

ஆனா இப்போ  நானும் வேலைக்கு சேந்து கல்யாணம் முடிச்சு செட்டிலாயாச்சு, தம்பியும் படிப்ப முடிச்சு அடுத்த வருசம் வேலைக்குப் போயிருவான். இன்னும் எதுக்கு இப்படி இறுக்கம் அவளுக்கு. அப்பா போனதிலிருந்து நமக்கு திருமணம் ஆகும்வரை அவ பேசியதை எண்ணிறலாம். அதுவும் முறைப்பாய் திட்டுற மாதிரியே பேசுவா.  இத்தனை வருஷத்துக்கு பொறவாவது அவ தளரனும். என்னமோ கவலையா இருக்குப்பா..என்றவளின் கண்ணில் ஈரம். சீனுவின் கண்களும் ஈரமானது. மரத்தில் அமர்ந்திருந்த கருங்குயில் ஒன்று சுவரம் மாற்றி பாட கற்றுக்கொண்டிருந்தது.

 

~~~

III

 

கேட்டை திறக்கும்போதே வீட்டில் இருந்து பேச்சு சத்தம் தெருவை எட்டிப்பிடித்தது. அம்மாவின் சத்தம்தான் அது. இத்தன சத்தமாவெல்லாம் பேசமாட்டாள என்று யோசித்துக்கொண்டே படியேறினாள் ராகவி.

 

வராந்தா தாண்டி ஹாலுக்குள் போனால், ஆத்தா சுவருல சாய்ஞ்சு உக்காந்து, எதிரில நின்னு பேசும் அம்மாவ ஆன்னு வாய பிளந்து பாத்துக்கிட்டு இருக்கு. அம்மாவின் முகம் ஒரு ஜொலிப்புடன் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அடர்சிவப்பு சேலையுடன் பிரளயமாய் கதை சொல்வதுபோல் நின்றிருந்தாள்.

 

நீ பாக்கனுமேம்மா. அந்த உடையார்பட்டிகாரி இருக்காளே சத்தம் போட்டு ஒப்பாரி வச்சுக்கிட்டு இந்த புள்ளய அழச்சொல்லுதா. இன்னொருத்தி தல நிறைய பூவ திணிக்கா. இந்த கஸ்தூரிபுள்ள அழுதுக்கிட்டு இருக்கு. அவ பொடிசுங்க ரெண்டும் தூணுக்கு பின்னாடி ஒளிஞ்சு நிக்குக. அவள மூளியாக்க அத்தன பேரு சுத்தி நிக்காக. நம்ம சுப்பையா மச்சான் மவ இருக்கால்ல, அவ சொல்லுதா..என்று பேசிக்கிட்டே திரும்பியவள் ஹால் வாசலில் ராகவியைப் பார்த்துவிட்டாள்.

 

உடனே, ‘நீ எப்போ வந்த.. வா, வா.. உக்காரு. செவந்தி மவ கஸ்தூரி இருக்கால்ல அவ புருஷன் இறந்துட்டான். மூணானாத்து காரியம் இன்னைக்கு. அதுக்குதான் போயிட்டு வந்தேன்..என்று சொல்லிவிட்டு, மறுபடியும் ஆத்தாவைப் பார்த்து திரும்பி, ’எதுல விட்டேன்? சுப்பையா பொண்ணு சொன்னதுலதான..என்று சொல்ல, ராகவி மெதுவாய் நகர்ந்து ஆத்தாவின் அருகில் அமர்ந்தாள். அம்மாவா இது. ஒரு சாவு வீட்டு விஷேசத்த இப்படி பேசுறது அம்மாவா என்று நம்பாமல் பார்த்தாள்.

 

அவ என்ன சொல்லுதா தெரியுமாம்மா, ‘ஏட்டி கஸ்தூரி, உன் வாக்க முடிஞ்சு போச்சுடி. புருஷன் இல்லாத வாக்க, உடஞ்ச மண்சட்டி மாதிரிடி. உடஞ்சு போச்சேடி'ன்னு சொல்லி மாஞ்சு மாஞ்சு அழுதுகிட்டே அவ தலயில வச்ச பூவ தாறுமாறா பிய்க்கான்னா பாத்துக்கோயேன். அந்த புள்ள தலயில கைய வச்சுக்கிட்டு பூவ பிய்ச்சி எடுக்கவிடாம பிடிக்கா. எனக்கு வந்து கோவம். நேர போயி சுப்பையா மச்சான் பொண்ண தள்ளிவிட்டேன். அவள பாத்து என்ன சொன்னேன் தெரியுமா..என்று கண்ணை உருட்டி காட்டினாள் அம்மா.

 

‘’இங்க பாருங்கடி, இவ வாக்க ஒண்ணும் மண்சட்டியில்ல. அப்படியே நீங்க சொல்றமாதிரி உடஞ்ச மண்சட்டியா போனாலும், அவ ஒரு குயவனா பாத்து இன்னொரு கல்யாணம் கட்டிக்குவா. அவென் இவளுக்கு இன்னும் பத்து பானை செய்ஞ்சுக் குடுப்பான்..ன்னு சத்தம் போட்டுவிட்டு, அந்த புள்ள தலையில இருந்து பூவ புடுங்கவுடாம காப்பாத்திட்டேன்என்று கண்கள் மினுமினுக்க அம்மா பேசினாள்.

 

இவளுக்கு என்னடி ஆச்சு.. என்கிற மாதிரி ஆத்தா தாடையில் கைவைத்து ராகவியைப் பார்க்க, ராகவி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தாள். இத்தனை பெருசாய் அம்மா பேசி இப்போதான் பார்க்கிறாள்.

ரெண்டு பேருக்குமா டீ போடவா..என்று அம்மா கேட்டுக்கிட்டே அடுக்களைக்குள் போக, ‘சக்கரையை இன்னைக்கு கொட்டிருவா..என்று ஆத்தா வெகு நாளைக்கு பிறகு சிரிப்புடன் சொன்னாள். ராகவிக்கும் அப்படிதான் தோன்றியது.


~~~~~

  

 


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி