Skip to main content

படைப்பின் பிரம்மம் பெண்

 படைப்பின் பிரம்மம் பெண்

~ அகிலா

(2021, மார்ச் மாத பெண்கள் தின சிறப்பிதழாய் வெளிவந்த ஏவ் மரியா இணைய இதழில் வெளிவந்தது)





படைப்பின் துவக்கப்புள்ளி பெண். அவள்தான் உலக சந்ததியின் ஆதிப்புள்ளியை இடுகிறாள். புள்ளிகள் வளைவுகளாகவும் கோடுகளாகவும் விளைந்து விரிகிறது. உலகில் உருவான உயிரின் முதல் வித்து பெண்ணிலிருந்தே புறப்பட்டது. உலகின் படைப்பு பிரம்மமாய், சிறு வழிபாட்டு தெய்வங்களாய் ஊரெங்கும் நிற்கிறாள் அவள். 

பிரம்மத்தின் பெருவுருவாய் சக்தியை நோக்குகிறோம். அவளன்றி இயக்கங்கள் தோன்றாது இவ்வுலகில். சாந்தம், தெய்வீகம், தாய்மை, கோபம், உக்கிரம் என பெண்ணின் படிமங்களுக்கு அவளே உருக்கொடுத்து எழுகிறாள். நதியின் பிறப்பாய் பிரவாகம் எடுக்கிறாள். இயக்கம் அனைத்திலும் படைப்பவள் அவளாகிறாள்.

மொழி, பெண்ணின் மாபெரும் சக்தி. மொழிவன்மையை, ஆதிக்க சுருதியில் எவ்வமயமும் வைத்துக்கொள்கிறது பெண்ணின் மூளை. நித்தம் அதன்மேல் சொற்களாய் புனைந்து புத்துயிர் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதை எழுத்து மொழியாய், பேச்சு மொழியாய் வழக்காட வைக்கிறது அவள் நாவில்.

பெண்ணானவள் மொழிவன்மையால், சமூக கட்டமைப்பை மாற்றும் வல்லமை கொண்டவள். இலக்கிய படைப்புலகம் ஒவ்வொரு காலகட்டங்களிலும் பெண்ணைக் கொண்டாடுகிறது. ஆண் எழுதும் படைப்புலகிலும் பெண்ணின்றி பிரதான மூலம் இல்லை. படைப்பாளியானவன் தாயாய், சகோதரியாய், காதலியாய், மனைவியாய், மகளாய் என்று பெண்ணை கொண்டாடுகிறான். அவன் எழுதும் கதையின் மூலக்கூற்றை உரைப்பவளாக பெண் இருக்கக்காணலாம். 

அந்த படைப்புலகின் பிரம்மாக்களாய் இருக்கும் பெண்ணானவள், அவளே எழுதுகோல் பிடித்தால்.. அப்படிதான் தொடங்கியது பதினேழாம் நூற்றாண்டுகளில். வீட்டிலிருக்கும் பெண்கள் வாசிக்கவென்றே நாவல்கள் பல, பெண்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்ரா பென் (Aphra Behn) என்னும் எழுத்தாளர் நாடக ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் இருந்து தன் வாழ்வுக்கான வருவாயை ஈட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் ஃப்ன்னி பர்னி (Fanny Burney) என்னும் பெண் எழுத்தாளர் பெண்களின் வாசிப்புக்கான நாவல்களை எழுதுவதில் மிக பிரபலமானவராக இருந்திருக்கிறார். எலிசபெத் கார்டர் (Elizabeth Carter), சாரா பெனிங்ட்டான் (Sarah Pennington) போன்றோரின் பெண் சார்ந்த பெருங்கதைகள் பிரபலம். இந்திய பெண் எழுத்தாளர்களில் அருந்ததி ராய், அனிதா தேசாய், ஜூம்பா லகிரி, கிரன் தேசாய் போன்ற பலர் இன்றைய எழுத்துலகை ஆளுகின்றனர். 




பெண்ணுலகத்தை பெண்களே படைத்தல் என்பது நுணுக்கம் மிகுந்தது. ஆண்கள் படைக்கும் படைப்புகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பெரும்பான்மை ஆண் இனத்தின் பார்வையிலேயே படைக்கப்பட்டிருக்கும். பெண் நுணுக்கம் அறிந்த ஆண் படைப்பாளிகளால் கொடுக்கப்படும் படைப்புகளில், பெண்ணின் இயல்புகள், பெண்களை ஆச்சரியபடுத்தியதும் உண்டு. அப்படைப்புகள் பெண் குறித்த புரிதல் அவர்களுக்குள் ஆழ்ந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன.

பெண்ணெழுதும் படைப்புகள், பெண் சார்ந்த ஆழ்ந்த வண்ணம் கொண்டவை. பெண்ணுடலின் உணர்வுகளை, வலிகளை, உபாதைகளை, பெண் மனதின் மகிழ்வுகளை, வாதனைகளை மிகத் துல்லியமாக எடுத்தியம்ப வல்லவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழில் இயங்கிய பெண் படைப்பாளிகளின் படைப்புகளில், பெண்ணின் சமூக நிலைப்பாடுகளான பெண்கல்வி, விதவையின் வாழ்க்கை, மறுமணம், சிறுவயது திருமணம், வரதட்சணை, குடும்பவன்முறை போன்றவையே முக்கிய இடம்பிடித்தன.

 

தமிழில் பெண் எழுத்தாளர்கள் : 

வை மு கோதைநாயகி அம்மாள், பண்டிதை விசாலாட்சி, கிருபாபாய், மீனாட்சி சுந்தரம்மாள், பாலாம்பாள், குமுதினி ரங்கநாயகி போன்றோரின் படைப்புகள் பெண்ணின் பெருங்கதைகளைப் பேசின. கிரிஜா தேவி அவர்களின் படைப்பான, ‘மோகனரஞ்சனி’ சாதிக்கொடுமையை எதிர்த்து நின்றது. ஆச்சிக்கண்ணு ராமாமிர்த அம்மையாரின் ‘தாசிகளின் மோசவலை’ என்னும் நாவல் தேவரடியார்களின் வாழ்க்கைமுறையை உரக்க பேசியது.

அக்காலத்து பெண் படைப்பாளிகள் பலர், வை மு கோதைநாயகியம்மாள் (ஜெகன் மோகினி), பாலாம்மாள் (சிந்தாமணி), பண்டிதை விசாலாட்சி (பத்திரகாளி) இதழாசிரியர்களாகவும் இருந்துள்ளனர். சமூக தொண்டாற்றியும் உள்ளனர். சாவித்திரியம்மாள், சரஸ்வதியம்மாள், குமுதினி ரங்கநாயகி போன்றோர் மொழிபெயர்ப்பிலும் இருந்துள்ளனர். காஷ்மீரின் போர் குறித்து எழுதிய வசுமதி ராமசாமி அம்மையார் போல களம் கண்ட எழுத்தாளர்களும் உண்டு.

இருபதாம் நூற்றாண்டில் எழுதவந்த பெண் படைப்பாளிகளான லக்ஷ்மி, அனுத்தமா, சிவசங்கரி, விமலா ராணி, ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி போன்றோர், அந்நூற்றாண்டில் எழுச்சியுற்றிருந்த பெண்கல்வியினாலும் பொருளாதார தற்சார்பினாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் மாற்றத்திற்கு வித்திட்ட விடயங்களான, சாதி மற்றும் வரதட்சணை மறுப்பு, குடும்ப வன்முறைகளை எதிர்த்து நிற்றல், பெண்ணின் பேச்சுச்சுதந்திரம், திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பெண்ணின் பார்வை, விவாகரத்து, மறுமணம் போன்றவை குறித்தெல்லாம் அதிகம் எழுதினர். இவர்களின் படைப்புகளில் குடும்பம் என்பதில் பெண்களின் நிலைப்பாடுதான் முக்கியபுள்ளியாக மையப்படுத்தபட்டது எனலாம். இரா மீனாட்சி, பூரணி, திரிசடை, கிரிஷாங்கினி போன்ற கவிஞர்களின் ஆணாதிக்க எதிர்ப்பு மற்றும் பெண்ணுயர்வு குறித்த கவிதைகளின் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்.

 

இன்றைய பெண்ணுலகம் : 

தற்கால எழுத்துலகில், பெண்ணின் ஆளுமை அனைத்து துறைகளிலும் தனித்துவத்தை அடைந்திருக்கும் நிலையில், பெண்ணின் அகவுணர்வுகளை வெளிபடுத்தும் எழுத்துகள், ஆணின் நிகராய் பெண்ணை நிறுத்துதல், உடலரசியலை ஓங்கி பேசும் எழுத்துகள், சாதி சார்ந்த பெண்ணுடல் சிதைப்பு, பாலியல் சார்ந்த உரிமைகள் போன்றவை குறித்தெல்லாம் அதிகமாய் பேசப்படுகின்றன.

உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஓங்கியிருக்கும் ஆணின் அதிகாரத்தன்மை பல துறைகளிலும் பெண்ணின் உயர்வை அசைத்துப்பார்க்கத் தவறவில்லை. அதுவே இலக்கிய உலகத்துக்கும் ஆனது. பெண்ணின் எழுத்துமுறையை ஆணின் படைப்பிற்கு சரிநிகராய் நிறுத்த பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ளது. பெண்ணின் எழுத்துலகை பெருமதிப்புடன் நோக்கும் பார்வைக்காகக் காத்திருத்தல் நேருகிறது.

படைப்புலகத்தில் ஆண்மொழி, பெண்மொழி என்ற தளங்களில் அந்தந்த இனத்துக்கான நகர்வை, அந்தந்த காலத்தின் குரலாக அவர்களே சரியாக சொல்லமுடியும் என்பதை மறுக்கவியலாது.

பெண்ணானவள் அலுவலகம், குடும்பம் என்று இரட்டை சவாரி செய்யும் நிலை இன்றைய சமூகத்திலும் பெரிதாய் மாறிவிடவில்லை. குடும்பம் என்னும் கட்டமைப்பை உடையாமல் இழுத்துச்செல்லும் கட்டாயம் இன்னும் பெண்ணிடமே இருக்கிறது. அதனால் அவளின் தனிமனித சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாவதை தவிர்க்க இயலவில்லை. 

ஒரு படைப்பை எழுத அவள் எடுத்துக்கொள்ளும் நேரம், குடும்பச்சூழல், படைப்புலகத்துள் இயங்க, வேண்டி நிற்கும் குடும்பத்தினரின் சம்மதம், தன்விருப்பம் சார்ந்து இயங்க இன்னமும் அவளுக்கு அனுமதிகள் மறுக்கப்படும் நிலை, படைப்புகளை அச்சாக்க இயலாத அவளின் பொருளாதார சிக்கல்கள் போன்றவை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. பெண்ணெழுத்தின் தேவை இக்காரணங்களினாலேயே அவசியமாக படுகிறது. 

பெண் குறித்த பார்வை, ஆண் பெண் படைப்பாளிகளின் எழுத்துமுறைகளில் வேறுபாடு காட்டுகிறது. பெண்ணை வருணிக்கும் ஆணின் நளினமான எழுத்துக்கும், பெண் நளினத்துடன் உக்கிரமும் சேர்த்து தன்னை வெளிப்படுத்தும் எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கின்றது. பெண்ணின் எழுத்து, ஆண் படைப்பாளிகள் எழுதும் எழுத்துமுறை போன்று ‘பெண் கொண்டாட்ட எழுத்துமுறை’ அல்ல.

 

ஒவ்வொரு மாதத்தின் கரு இழப்பின் இரத்தச்சுழற்சியை, அவள் திடுக்கிட்டு உள்வாங்குவதை,

தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம்
விபத்தொன்றை
 
சந்தித்தாற் போல
அதிர்கிறது மனசு

அ. வெண்ணிலாவின் இக்கவிதை போல் கொடுக்க இயலும்.  

 

படைப்பின் பிரம்மம் : 

"I'm a woman Phenomenally. Phenomenal woman. That's me."

என்ற பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோவின் (Maya Angelou) ‘நான் தனித்துவமான பெண்’ என்பதில் இழையும் தன்னதிகாரம், பெண்ணுலகின் படைப்புகளில் மிளிர்வதை உணரலாம்.  

பெண்ணை, பெண்ணே படைத்தெடுத்தல் என்பது கவிதை மட்டுமல்லாது, சிறுகதைகள், புதினங்கள் போன்ற எல்லாவிதமான புனைவுகளிலும், அபுனைவுகளிலும் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து, பணியில் பெண்களுக்கான பாலியல் இடையூறுகள் குறித்து, குடும்பங்களில் நடந்தேறும் ஆண் பெண் பாகுபாடுகள் குறித்து, திருமணத்திற்கு பிறகான பெண்ணின் மனம் மற்றும் உடல்மாற்றங்கள் குறித்து, இன்னும் பலவற்றைக் குறித்தும் அதிகம் பேசவேண்டியுள்ளது. இவற்றை பேச பெண்ணின் எழுதுகோலே சிறந்தது.  

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சதுரங்க குதிரை’ சுட்டிய ஆண் ஒருவனின் வாழ்வியல் மனநிலையை போல், கமலா சுரையாவின் ‘எண்ட கதா’ எடுத்தியம்பிய பெண்ணின் உளப்பிரச்சனைப் போல, ஆணோ பெண்ணோ அவரவர்களின் இனம் பேசும் மொழியில், உணர்வுகளில் வெளிவரும் படைப்பிலக்கியங்களின் கனம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

 

I raise up my voice.. not so that I can shout, but so that those without a voice can be heard.

‘எனக்காக மட்டுமல்ல, குரல் கொடுக்கமுடியாத பெண்களின் குரலுக்காகவும் பேசுகிறேன்’ என்ற பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மலாலா யூசஃப்ஸாய் (Malala Yousafzai) அவர்களின் கூற்றில் இருக்கும் உண்மையை கண்டடைவோம். ஒற்றை பெண் படைப்பாளியின் எழுதுகோல் உரைக்கும் சத்தம், மற்ற பெண்களின் மௌனத்தின் வெளிபாடாக இருக்கக்கூடும்.

பெண்ணின் கருத்துச்சுதந்திரமும் படைப்பு சுதந்திரமும் முழுமையடையாத இக்காலகட்டத்தில், பெண்ணெழுத்தின் அவசியம் தீராமல் இருக்கிறது. அவளின் மை தொட்ட பேனா முனையின் தீர்க்கம், மலர்ந்த பூவின் வசீகரம் கொண்டதாய் மட்டுமல்லாமல் தீக்கனலையே சுட்டுவிடுவதாகவும் இருக்கும். இருவேறு ஆழ்ந்த வண்ணங்களைக் கொண்ட பெண்ணெழுத்தானது, இவ்வண்ணமே படைப்பின் பிரம்மமும் ஆகிறது. 

 

கட்டுரை : எழுத்தாளர் அகிலா 


 

 

  

 

 

 

 

 

Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...