Skip to main content

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள்



தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு.

ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை.

முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து, நொடிபொழுதில் நான்கு கவிதைகள் எழுதி, நிஜ வாழ்வில் ஆயிரம் கவிதைகள் எழுதியவன், பத்து கவிதை புத்தகங்கள் போட்டவன், இலக்கியத்துக்குள்ளே டீ ஊற்றிக்கொடுத்து, கதைத்து, வதைப்பட்டு வாங்கமுடியாத இலக்கிய பட்டங்களை இவர்கள் வாங்கி, கவி சக்ரவர்த்திகளாகவும், உலக மகா கவிகளாகவும் வலம் வருகிறார்கள்.

இதையெல்லாம் நெறிபடுத்த வேண்டிய கட்டாயங்கள் ஒருபுறமிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு சாரார், களத்தில் இயங்கி இலக்கிய கூட்டங்கள் நடத்தி, சிற்றிதழ்களும் இதழ்களும் வெளியிட்டு அவற்றுக்கான செலவுகளுக்காக கையேந்தி கஷ்டப்பட்டு ஏச்சும் பேச்சும் வாங்கி இலக்கியத்தை மட்டுமே உண்டு, குடித்து பசியாறி வாழுந்து சாகும் இலக்கியவாதிகளை ஏளனம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் பெண்கள் எழுதும் படைப்புகளுக்கு தனியான பேனல் வைத்து தரம் தாழ்த்தும் நிலை ஒருபுறம் இந்த மாபெரும் இலக்கிய உலகத்தில் நடந்துவருவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். புலம்பல்களை எழுதுபவள் தான் பெண் என்றும் சராசரி எழுத்துக்கு கீழே வைத்து பெண்ணின் எழுத்தை மதிப்பிடுவது என்னும் ஆண் மனப்போக்கை மாற்றவேண்டிய அவசியங்கள் நம்முள் எழுகின்றன.

இவர்களுக்கு புரியாத விவரம் ஒன்றுதான். ஆணின் சமூகப்பார்வையும் பெண்ணின் சமூகப்பார்வையும் ஒன்றல்ல. இருவரின் மூளை செயல்பாடுகள் வேறுவேறானவை. மொழித்திறன் சொல் பயன்பாடுகள் அதிகம் உடையவள் பெண்தான் என்கிறது அறிவியல். அதை செயலாக்கம் கொடுக்க முடியாத, குடும்பம், அலுவலகம், குழந்தைகள் என்ற காலகட்டாயங்களால் அவள் இயக்கப்படுகிறாள் என்பது பெரும் பரிதாபம்.

கிடைக்கும் நேர இடைவெளியில் எழுதும் பெண், பெருங்கதைகளோ சிறுகதைகளோ எழுத வழியில்லாமல் கவிதைகளுடன் நின்றுவிடுகிறாள். அவற்றை அங்கீகரித்து நூலாக்கம் செய்யும் மனநிலை உடனிருக்கும் குடும்பத்தினருக்கு இருக்கவேண்டும். அக்கவிதைகளில் வேறு ஆண் குறித்த குறிப்பிடல்கள் இருந்தால் அதற்கான சரியான விளக்கமும் கொடுக்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு இருக்கிறது. இது அவளுக்கு பொருளாதார சுதந்திரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருந்தும். இந்த அதிகார சாட்டை சமூகவெளியில் இயங்கும் இந்த ஆண் இலக்கியவாதிகளைப் போல, வீட்டில் இருக்கும் ஆண் தலைவர்களிடமும் ஆண்களால் ஆட்டுவிக்கப்படும் அடிமைப்பட்ட பெண் தலைவிகளிடமும் இருக்கின்றது.

இந்த படிகளைக் கடந்து பெண் வெளிவந்து, தன்னுடைய கவிதைகளை புத்தகமாக்குதல் என்பது பெரிய விஷயம்தான். திருப்பூரில் நடைபெற்ற 'பெண்ணென' நூல் வெளியீட்டு விழாவில் 35 பெண் கவிஞர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் திருப்பூர் பதியம் இலக்கிய அமைப்பின் தோழர் பாரதிவாசன் மற்றும் நொய்யல் இலக்கிய அமைப்பின் இளஞாயிறு போன்றோரின் முயற்சியால் கடந்த மகளிர் தினத்துக்காக முடிவு செய்யப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இதிலும் இக்கருத்து எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் மற்றும் என்னால் பேசப்பட்டது.

இருந்தும், இந்த படைப்புகள், தொகுப்புகள், தமிழில் இயங்கும், எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளின் கவனத்துக்குள் வருமா என்பது பெரிய கேள்விக்குறியாய். கவனத்துக்கு போனாலும் 'பெண்களின் நூலா' என்னும் கேள்வியுடன் புறங்கையால் தள்ளப்பட்டு வாசிக்காமல் போய்விடுமா என்பதும் அடுத்த கேள்வி.

பெண்ணின் எழுத்துகளும் சேர்ந்தால்தான் படைப்புலகம் முழுமை பெறும் என்பது பலருக்கு புரிவதில்லை. இந்த படைப்புலக அரசியலை எங்கு பேச? பெண் வெளியிடும் புத்தகங்களின் மதிப்பீடுகள் எங்கு பேசப்படுகின்றன? அதற்காக யார் இருக்கிறார்கள்? சரியான அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் சிறுகதை, கவிதை என இலக்கியமே கதி என்று இயங்கிவரும் எங்களைப் போன்ற சமகாலத்து பெண் படைப்பாளிகளின் நிலையென்ன? எந்த அதிகார தராசில் ஆண்கள் இங்கு உயர்த்திக் காட்டப்படுகிறார்கள்?

பெண் எழுத்துகள் ஆண் எழுத்துகள் என்ற பாகுபாட்டில் எனக்கு உடன்பாடில்லை. படைப்பை வைத்து முடிவு செய்யும் நிலை என்று வரும்? பெண் படைப்புகளைப் படிக்காமலே ஒதுக்கிவிடும் நிலை என்று மாறும்? ஆண்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுவதும், பெண்களுக்கு அவை மறுக்கப்படுவதும், இதன் பின்னணியில் இயங்கும் மாபெரும் ரகசியம் என்ன? அத்தனை இலகுவானதும் முற்போக்கு கருத்துகள் இல்லாததும் சமூக பிரச்சனைகளைப் பேசாததுமாய் இல்லையே பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்? இம்மாதிரியான பெண் படைப்பாளிகளின் கேள்விகளுக்கு முடிவேது.

இதற்கான தீர்வுகள் எப்போது எங்கு பிறக்கும்?

~ அகிலா..

Comments

  1. உலக அளவிலேயே ஆண் - பெண் எழுத்தாளர்களின் விகிதாச்சாரத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எழுத்தில் ஆணெழுத்து, பெண்ணெழுத்து என்ற பிரிவினை தேவையில்லை என்றாலும் ஒரு நூலின் ஆசிரியர் பெயர் பெண் பெயராக இருந்தால் அது பெண்ணெழுத்து என்றே கருதப்படுகிறது. தாய்வழி சமூகமாக இருந்து ஆண் மைய சமூகமாக மாறியதிலிருந்து இச்சமூகம் பெண்களை அடிமை மனநிலையில் (ஆணாதிக்கம்) வைத்திருந்தது அவர்களுக்கு கல்வி உரிமை உருவான 20-ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. பல்லாயிரமாண்டு ஆணாதிக்க மனப்பான்மை அவ்வளவு எளிதில் மாறாது. எது ஒன்று தேவையோ அதனை தேவையானவர் போராடியே பெற வேண்டும் என்ற சூழலே எங்கெங்குமுள்ளது. தமிழில் மொத்தமாக நூல்களை வாசிப்பவர்கள் சதவீதம் 1%-த்திற்கும் குறைவு. உலகமயமாக்கலுக்குப் பின் அனைத்துக்குமே பிராண்டிங் தேவைப்படுகிறது. எழுத்துக்களுக்கு ஆண் - பெண் கிடையாது என்றாலும் ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணெழுத்து என்ற ஒன்று உருவாகித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆணும் - பெண்ணும் சமம் என்ற கிளிஷேக்களும் ஆண்களாலேயே உருவாக்கப்படுகிறது. உடலியல் மற்றும் மனோவியல் படி ஆண்-பெண் பெண் இருவருக்குமே குறிப்பிட்ட நலங்களும், பலவீனங்களும் இருக்கின்றன. அதில் உடல்ரீதியான பலத்தை வைத்தும், அரசாங்கங்களைக் கைப்பற்றியதை வைத்தும் ஆணாதிக்கம் உருவானது. பெண்ணெழுத்துக்களை படிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களும் பெண்களை விட அதிகமாகவேயிருக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் சரிபாதி பெண்கள் இருக்கிறார்கள். ஆண்மைய சமூகம் பெண்களை அப்படித்தான் நடத்தும். அதேநேரம் ஆணும், பெண்ணும் சமமென நாடகமுமாடும். அதனால் பெண்கள் தங்கள் படைப்புக்களை தொடர்ந்து எழுதி, அறிமுகம் செய்து, அவற்றுக்கான விருதுகளை தகுதியான அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கி வழங்க வேண்டும். பெண்களுக்கு விருது வழங்காத ஆண்மைய சமூகத்திற்கு அவர்கள் வழங்கிக் கொள்ளட்டும். இவ்விருதுகள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆண்மையும் - பெண் விளிம்பு என்பதை மாற்ற வலுவான தனி அமைப்பாக பெண் அமைப்பு உருவாக வேண்டும். அவற்றில் பெண்கள் எழுதிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன வேண்டும். மற்ற பொது மேடைகளில் ஆண் மற்றும் பெண் எழுத்துகள் முன் வைக்கப்படும் மேடைகளை தவிர்க்கத் தேவையில்லை. உண்மையாகவே பெண் எழுத்தாளர்களை மதிக்கும் ஆண்களை, அமைப்புக்களை வைத்து பெண்களுக்கான விருதுகளை உருவாக்குவது பெண்களின் எழுத்துக்களை பரவலாக்க துணை புரியும்.

    ReplyDelete
  2. தங்களின் கருத்துக்கு நன்றி.
    //ஒரு நூலின் ஆசிரியர் பெயர் பெண் பெயராக இருந்தால் அது பெண்ணெழுத்து என்றே கருதப்படுகிறது.// உண்மைதான். அதற்குதானே பெண் புனைப்பெயர் வைக்கிறார்கள். ஒரு ஈர்ப்புக்காகத்தான் செய்கிறார்கள்.

    படைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதும், அதில் ஆண் பெண் பேதம் தேவையில்லை என்பதும் என் கருத்து. ஆனால் படைப்புகளைக் கையில் எடுப்பவர்கள், பெண் எழுதியது என்று காணும்போதே ஒரு முன் உணர்வுடன் வாசிக்கத் தொடங்குகிறார்கள். அங்கேதான் படைப்பு தோற்று போகிறது. அதுதான் என் வருத்தமும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஆனாலும் இதற்கு முன் எழுதிய ரமணிச்சந்திரன் வகையறா எழுத்தாளர்கள் எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதி பெண் எழுத்து என்பதை "கிளிஷே" தனமாக போலியான எழுத்தாக மாற்றி வைத்ததும் பெரும்பாலானோர் பெண் எழுத்துக்களை இப்படித்தான் இருக்குமோ என்ற முன் உணர்வுடன் வாசிக்கக் காரணமாகும். பல நூற்றாண்டுகளாக ஆண்கள் வெளியே சென்று பொருளீட்டுவது, பெண்கள் வீட்டை கவனித்துக் கொள்வது என்றிருந்ததால் ஆண்கள் வெளியுலகில் நிகழ்வதைப் பற்றி அதிகமாகவும், பெண்கள் வீடு, குடும்பம் பற்றி மட்டுமே அதிகமாகவும் எழுதினார்கள். இப்பொழுது நிலைமை மாறி இரு சாராரும் வெளியுலகிற்கு வந்துள்ளார்கள். இங்கு பெண் எழுத்து பற்றி பேசப்படுவதால் பெண்கள் வீடு, குடும்பம் பற்றி மட்டும் எழுதாமல் வெளியுலகில் நிகழும் அனைத்தையும் எழுத வேண்டும். வரலாறு, அறிவியல், அரசியல், சுற்றுச் சூழல், மருத்துவம், குற்றங்கள் என அனைத்து பகுதிகளையும் பற்றி எழுத வேண்டும். பெண்கள் என்று அல்ல யாராயிருந்தாலும் நிறைய படித்தலே அதற்கான உந்துதலை வழங்கும். ஆனால் இன்றும் பெரும்பான்மை பெண்கள் வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது அவர்களது படிப்பதற்கான நேரம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுத்துகின்றது. அதனாலேயே பெரும்பான்மை பெண்களால் 20 வயதிலிருந்து 40 வயதுக்கு முன் எழுத வருவதில் சிரமம் ஏற்படுத்துகின்றது. அவ்வாறு வந்தாலும் அவர்களது முழு அனுபவமும் வீடு மற்றும் குடும்பம் சார்ந்தே இருப்பதால் அவைகளை விட்டு பல்வேறு விஷயங்களை தங்கள் படைப்புகளில் கொண்டுவருவது குறைவாக இருக்கிறது. இதுவரை எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஒன்று திரட்டி ஆண்டு வரிசைப்படி வகைப்படுத்தி நூல் பட்டியல் ஒன்று தயாரித்து பெண் எழுத்துக்களுக்கான தனி நூலகம் ஒன்று மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும். ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் பத்து வயதிலிருந்தே பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நூலகம் மூலம் தீவிர இலக்கியங்களே அறிமுகப்படுத்தப்பட்டு விடுகின்றன. இங்கு பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்களே கிடையாது. பள்ளிக்குழந்தைகளை பாடப்புத்தகம் தவிர்த்து வேறு நூல்கள் வாசிக்க அனுமதிக்காதவரை இப்பொழுதுள்ள நிலையே தொடரும்.

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...