💢 கதை வாசிப்பு தினம் 💢
~ அகிலா.. 👧
நான் பேசும் பெரும்பாலான மேடைகளில் இலக்கியத்தை ஏதாவது ஒருவகையில் உள்ளே திணித்துவிடுவது வழக்கம். இலக்கியத்தில் இருக்கும் சிறுகதைகள், மேலாண்மை பொன்னுசாமி, சுந்தர ராமசாமி, அம்பை, வாஸந்தி முதல் எஸ் ரா, பவா செல்லத்துரை, கா சி தமிழ்க்குமரன், பாரதி கிருஷ்ணகுமார், கலைச்செல்வி, என்னுடையது மற்றும் பலருடையது வரை நான்கைந்து கதைகளைச் சொல்லிவிடுவதும் அதிலிருக்கும் சமூகப்பிரச்சனை குறித்து பேசுவதும் உண்டு.
பள்ளி, கல்லூரி கூட்டங்கள் என்றால், கல்லூரி நிர்வாகத்தால், ஆசிரியர்களால் பிடித்து இருத்தப்பட்டவர்கள் என்றாலும், பிள்ளைகள் தலையசைத்து ஆமோதித்தும் கண்விரித்தும் குறிப்பெடுத்தும் உள்வாங்குவது தெரியும். பேசி முடித்தும் சில பிள்ளைகள் தேடிவந்தும் பேசுவதும் உண்டு. சில நிகழ்வுகள் கருத்து பரிமாற்ற கூட்டமாய் மாறியதும் உண்டு.
இலக்கிய கூட்டங்கள் என்றால், கேட்கவே வேண்டாம். கவனிப்பும் ஆமோதிப்பும் உடன் சில சமயங்களில் எதிர்ப்பும் இருக்கும். அதுவும் நல்ல ஒரு விவாதக்களம் தானே.
பொதுவிழாக்கள் என்றால் இதற்கெல்லாம் நேரெதிர். படித்தவர்கள், பள்ளி படிப்பைத் தாண்டாதவர்கள், பள்ளி படிகளைத் தொடாதவர்கள் அங்கு இருப்பது உண்டு. நாம் பேசும்போது, கதை சொல்லும்போது ஒரு ஆமோதிப்போ எதிர்ப்போ இல்லாமல் பிடித்து வைத்த மாதிரி இருப்பார்கள். இத்தனைக்கும் பள்ளி கல்லூரி மாதிரி இல்லாமல் சுயமாய் அவர்களாகவே வந்திருப்பார்கள்.
ஒருமுறை என்னுடன் பேச அழைக்கப்பட்டிருந்த பெண்மணியொருவர், அவர் பேசி முடித்து வந்து அமரும்போது என்னிடம் கேட்டார், 'என்ன இப்படி ரெஸ்பான்ஸே இல்லாம இருக்காங்க..' என்று. நிஜம்தான் என்று தோன்றியது. இதற்காகவே நான் கதைகள் சொல்லும்போது, 'சரிதானே?' என்று கேட்டு ஒரு சில தலையாட்டல்களையாவது வாங்குவதுண்டு. அதற்காகவே கதைகளைச் சொல்வதுண்டு. இலக்கியம் என்றாலே என்ன விலை என்று கேட்கும் அனேகர் உண்டு இங்கு. அவர்களிடம் ஒரு சில எழுத்தாளர்களையும் அவர்களின் கதைகளையும் சொல்லி அவர்களை பொதுஜனத்திடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாய் இதை நினைக்கிறேன்.
சில கூட்டங்களில் பேசும்போது, 'நான் இன்னைக்கு நிறைய கவிஞர்களின் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்ல போகிறேன். கவனிச்சு குறிச்சுக்கோங்க..' என்று சொல்வதும் உண்டு. ஏனென்றால், நம்ம தமிழ் மக்களுக்கு தெரிந்த ஒரே கவிஞர் யார் தெரியுமா.. வைரமுத்து மட்டுமே. சினிமா அறிமுகப்படுத்துபவர்களும், செந்தமிழில் உரையாற்றுபவர்கள் மட்டுமே கவிஞர்கள் என்று அவங்க தலையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கு.
இலக்கியத்தை, அதை மட்டும் சுவாசித்து வாழும் அக்மார்க் இலக்கியவாதிகளை பொதுஜனத்துக்கிட்டே கொண்டு போகும் ஒரு முயற்சிதான் இது. இலக்கியமாவது புடலங்காவாவது என்னும் மக்களிடம் அறிமுகமாவோம் நம் கவிதைகள், கதைகள் வழியாக..
என் கதை வாசிப்பு சேனல்
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....