Skip to main content

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2017 - ஜெயமோகனுக்கு விருது

கோவை புத்தகக் கண்காட்சி 2017 
தொடக்கவிழாவும் ஜெயமோகன் விருது விழாவும்..
~ அகிலா  




கொஞ்சம் மிதமான மற்றும் பலத்த காற்றுடன் என்ற வானிலை அறிக்கை போல் இருந்தது ஜூலை மாதத்து இந்த மாலைபொழுது. கோவையின் மிகப்பெரிய வணிக அமைப்பான கொடிசியா நடத்தும் 'கோயம்பத்தூர் புத்தகத் திருவிழா' ஆரம்பவிழாவிற்கான அனைத்து முன்னெடுப்புகளும் களை கட்டியிருந்தன. 'வாழ்நாள் சாதனையாளர் விருது' எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது கொடிசியா நிர்வாகத்தால்.

ஜூலை 21 புத்தகக் கண்காட்சி, மொத்தமாய் 175 பதிப்பகத்தார், 265 அரங்குகள் என்று கொடிசியா வணிக வளாகம் முழுமையும் நிறைந்திருந்தது. தேசிய புத்தக அமைப்பின் (NBT) தலைவர், திரு பல்தேவ் பாய் சர்மா கண்காட்சியைத் கத்தரி வெட்டித் திறந்துவைத்தபோது, அரங்கு நிறைந்திருந்த புத்தகங்களின் மணம் நாசி தொட்டது. வாங்க நேரமில்லை.

விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவிடம் குழந்தை இலக்கியம் குறித்த பேச்சுடனும், எழுத்தாளரும் நண்பருமான சு வேணுகோபால் அவர்களின் பரிந்துரையில் நவீன சிறுகதைகளின் பக்கம், காலசுவடில் ஒரு புத்தகப்புரட்டலும், இன்னும் சில தோழர்களின் விசாரிப்புக்குப்பின் தொடக்கவிழா நிகழ்வுக்கு வந்தமர்ந்தேன்.  

திறந்துவெளி அரங்கு அமைத்திருந்தார்கள், காற்றும் வந்து கதை பேசட்டும், கேட்கட்டுமென்று. கூட்டம் மிதமாயிருந்தது. மேடையை அலங்கரித்த அனைவருக்கும் பொன்னாடைகளும் பூங்கொத்துகளும் வழங்கப்பட்டன. என்னையும் அழைத்தார்கள். கொடுத்து வந்தேன். 

கொடிசியா அமைப்பின் துணை தலைவர் ராமமூர்த்தி, தலைவர் சௌந்தரராஜன், நிர்வாக இயக்குனர் வரதராஜன், இலக்கியக்கூடலின் தலைவர் பாலசுந்தரம் என்று அனைவரும் பேசிய பின் என் பி டி யின் தலைவர், சர்மா அவர்கள் இந்தியில் உரையாற்றினார். 

அதன் உடனடி தமிழ் மொழிபெயர்ப்பும் கொடிசியாவின் ராம்பிரசாத் அவர்களால் கொடுக்கப்பட்டது தமிழறிந்த, தமிழ் மட்டுமே அறிந்த நமது மக்களுக்கு. இந்தி மொழியை ஏன் கற்கவில்லை என்கிற சிறு வருத்தமும் இவ்வாறான பேச்சுகளை கேட்கும்போது தோன்றாமல் இருப்பதில்லை. அதை பின்னர் பேசிய பபாசி (BAPASI) தலைவர் காந்தி கண்ணதாசன் அவர்களும் குறிப்பிட்டார். இந்தி கற்றுக்கொள்ள, திருவல்லிக்கேணியின் ஏதோ ஒரு குறுகிய சந்தில் இருந்த இந்தி சபா ஒன்றில் வெள்ளையாகவும் ஒல்லியாகவும் இருந்த இந்தி மிஸ்ஸிடம் படித்து ராஷ்டிராவைத் தாண்டியது எனக்கும் நினைவில் வந்தது. 

சர்மா அவர்கள் பேசிய இந்தி சொற்பொழிவு கவிதை சந்தம் பாடியது. புரியாமலேயே கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. எதற்கு புரியவேண்டும்? புரிந்து என்ன செய்யப்போகிறோம். புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் குறித்துப் பேசுவார், எழுத்தாளர்கள் குறித்துப் பேசுவார், இதை இரண்டு வருடங்களாய் சிறப்பாய் நடத்தும் கொடிசியா குறித்துப் பேசுவார் என்றும் தோன்றியது. அவரை இன்னும் சற்று நேரம் பேசவிட்டிருக்கலாமோ. அவரின் குரல் இனிமை கூடுதல் அழகு. சும்மாவாச்சும் கேட்கும் பண்பு நமக்கு மட்டுமே சொந்தம்.

கோவையின் கொந்தல் காற்று உட்கார்ந்திருந்த மிக குறைவான பெண்களையும் சேலை கொண்டு போர்த்தவைத்தது. ஆண்களுக்கு குளிர்வதில்லையோ அல்லது அவர்களை விட்டுவைக்கிறதோ இந்த காற்று என்பது ஒரு புதிர்தான். 

சரி, அடுத்ததாய், காந்தி கண்ணதாசனும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' க்கான பட்டயம் வாசிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த இயற்கை ஆர்வலர் சுப்பிரமணியம் அவர்களும் பேசினார்கள், இல்லை, முன்னவர் பேசினார், அடுத்தவர் உணர்வு உந்த வாசித்தார். வாசித்தப்பின் ஜெயமோகன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

விருது பெற்று, மாலையும் கழுத்தில் ஏந்தி, ஜெயமோகன் நெஞ்சு நிமிர்த்தி நின்ற காட்சி மிக அற்புதமானது. என்னருகில் அமர்ந்திருந்த எழுத்தாளர் வேணுகோபால் அவர்கள், 'ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இம்மாதிரியான விருது அவன் வாழும் நாட்களிலேயே கிடைத்தால் எத்தனை உவகை அடைவான். இறந்தப்பின் துதி பெற்று என்ன பயன்..' என்றும் கேள்வி எழுப்பினார். உண்மைதான். இது ஒரு அங்கீகாரம்.

தினமும் இணையத்தில், வலைபதிவில், இதழ்களில் என்று எழுத்தும் கையுமாக இருப்பவருக்கு கிடைக்கும் அழகான அங்கீகாரம். அவற்றை வாசிக்கும் அனைத்து அபிமானிகளுக்கும் அவரின் அந்த நேரத்து முகவசீகரம் சொந்தமாகிறது.  

'தமிழரும் புத்தகங்களும்' என்னும் தலைப்பில் தனக்கு தெரிந்த அறிந்த தமிழரின் வாழ்வியலை மாற்றிய சற்றேனும் அசைத்துப்பார்த்த பத்து புத்தகங்ளைப் பட்டியலிட்டார் தனது ஏற்புரையில் ஜெயமோகன் அவர்கள். அதற்குமுன் மறைந்த எழுத்தாளர் தூரன் குறித்து சிறு அறிமுகமும் கொடுத்தார். புத்தகத் திருவிழாவில் எட்டு நாட்களும் மறைந்த எட்டு எழுத்தாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருந்தனர் கொடிசியா நிரவாகத்தினர். முதல் நாளாய் தூரன். ஏற்கனவே பதிவும் இட்டிருந்தார் ஜெயமோகன். கலைகளஞ்சியத்தை உருவாக்கிய பெருமை தூரன் அவர்களுடையது என்றும், இன்றளவும் இன்னொன்று உருவாகாத நிலைமை குறித்து வருத்தமும் அவர் உரையில் இருந்தது.  

அவர் பட்டியலிட்ட பத்திற்கு வருவோம். 
1. குஜிலி பதிப்பகங்களின் 'பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை'
2. குஜிலி பதிப்பகங்களின் 'பதினெட்டு சித்தர் பாடல்கள்' 
3. பாரதியார் கவிதைகள்
4. கல்கியின்  'பொன்னியின் செல்வன்' 
5. மு வரதராசனார் திருக்குறள் உரை 
6. சிற்பானந்தாவின் பகவத் கீதை உரை 
7. கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' 
8. வெங்கடராஜுலு மொழிப்பெயர்த்த 'சத்திய சோதனை'  
9. கனா முத்தையா மொழிபெயர்த்த 'வால்காவிலிருந்து கங்கை வரை' 
10. மாக்சிம் கார்க்கியின் 'தாய்' 

ஒவ்வொன்றுக்கும் அனுபவம் சார்ந்த விளக்கம் வைத்திருக்கிறார். கேட்கிறவர்களின் மனதுக்குள் அவரவர் அனுபவங்களையும் பகிர்ந்துக்கொள்ள ஒரு மூலையும் ஒதுக்கிக்கொடுக்கிறார். சிறப்பு. தலைப்பு குறித்து மட்டும் விரிவாய் பேசிமுடித்து, நன்றி அட்டை போட்டுவிட்டார். 

அதன்பிறகு, சாப்பாட்டு விருந்து. அவரவர் தட்டுகளை அவரவரே சுமக்கும் சமதர்மம். ஜெயமோகனிடம் சிறிது சிறிதாய் சென்று பேசிவந்தார்கள். அவரிடம் பேசாமல் போவதா என்னும் பெரிய உந்துதலில், அவரை நோக்கி நடந்தேன். உயரத்தில் இருப்பவர்களைச் சந்திக்கும் தருணத்தில் முதன்முறையாக எல்லோருக்கும் நிகழ்வதுபோல, சொல்ல வந்த வாழ்த்தை இன்னும் சிலபல குறித்துவைத்திருந்த சொற்களுடன் சேர்த்து முழுங்கிவிட்டு, மிச்சமிருந்தவற்றைப் பேசிவிட்டு வந்தேன். 

எல்லாம் கலைந்து வெளியே வந்தபோது, நினைவில் நின்ற ஒன்று, நாளையாவது புத்தகம் வாங்கவேண்டுமென்பதுதான். 

Comments

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...