அம்மா நடைவண்டி பிடித்து என்னுடன் நீயும் நடைபயின்றாய், புகைபடிந்த அந்த புகைப்படம் சாட்சி நடனமிட செல்லும்போது என் ஆடை சீர்செய்து நின்றாய், கருப்பு வெள்ளையாய் ஒரு புகைப்படம் சாட்சி தூண் சாய்ந்தமர்ந்து என்னை உடனிருத்தி புத்தகம் படித்துக்காட்டினாய், வண்ணத்தில் ஓரு புகைப்படம் சாட்சி உன் கைவண்ணத்தில், என் தாவணியில், பட்டாம்பூச்சிகள் பூத்திருக்க, என்னை தோள் சாய்த்து நின்றாய், அழகாய் ஒரு புகைப்படம் சாட்சி அறியா பருவத்தின் சிரிப்பில் என்னை உறைய வைத்துவிட்டு இதே நாளில் விட்டுச்சென்றாய் நீ மட்டுமே நிற்கும் ஒரு புகைப்படம் சாட்சி என் வயது ஏறி நின்றுவிட்ட உன் வயதைத் தொட்டுவிட, இனி உன் முகம் காண, நீயாகி நானிருக்கும் புகைப்படம் மட்டுமே சாட்சி.