கூழாங்கற்கள்
ஆசிரியர் : கனவுப் பிரியன்
(27.11.2016 அன்று கோவை இலக்கிய சந்திப்பில் என்னால் மதிப்புரை செய்யப்பட்டது)
நூலும் ஆசிரியரும் :
கூழாங்கற்கள் என்னும் இந்த சிறுகதை தொகுப்பு 2015 டிசம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கனவுப்பிரியனின் இயற்பெயர் முஹம்மத் யூசுப் என்பதாகும்.
இந்த நூலுக்கு கி ராஜநாராயணன் அய்யா உட்பட ஆறு பேர் அணிந்துரை அளித்திருக்கிறார்கள். டில்லி தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு ஷாஜகான் அவர்கள், ஆசிரியர் கனவுப்பிரியன், கார்த்திக் புகழேந்தியுடன் சேர்ந்து கி ரா வின் 'கதைசொல்லி' இதழை மீண்டும் உயிர்ப்பித்ததாக தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆசிரியரும் தனது உரையில், தான் முகநூலில் எழுதிவந்த சுவாரசிய எழுத்துகளை இச்சிறுகதை தொகுப்பாய் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
கதைக்களம் :
கூழாங்கற்கள் தொகுப்பின் ஆசிரியர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். சவுதியில் வேலை செய்வதால் இந்த நூலும் புலம் பெயர்ந்த தமிழனின் கதை தொகுப்பாகத்தான் இருக்கும் என்ற நமது கணிப்பு தவறுவதில்லை.
திருமணம் செய்துக்கொண்டு மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு விமானம் ஏறும் அவர்கள் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் இடையிடையே வந்து செல்வதும் பாரமாய் நினைவுகளை சுமந்து செல்வதும் உண்டு. உழைக்கும் வயது முடிந்து அவர்கள் திரும்பி வரும்போது, பேரன் பேத்திகள் எல்லாம் பிறந்திருக்கும், ஒரு வீடு மற்றும் கொஞ்சம் நிலபுலன்கள் அமைந்திருக்கும். வாழ்நாளின் முக்கால் பகுதியை அங்கு செலவழித்துவிட்டு வயதான காலத்தைக் கழிக்க ஊர் வருகிறார்கள். இது அம்மக்களின் நிதர்சனம்.
அந்த வாழ்க்கையில் தனிமையின் வருத்தங்கள், அழுகைகள், ஊரின், உறவின் தேடல்களில் சந்தோஷங்கள், சோகங்கள், அதில் முக்கிய சாட்சியாய் விளங்கும் புகைப்படங்கள் இவற்றையெல்லாம் நாம் அவர்களின் கனமான எழுத்துகளில் படித்திருப்போம். இந்த தொகுப்பு அவ்வாறு இல்லை. வித்தியாசமாய் ஆசிரியர் பார்த்த அரபு உலகின் பரந்த பரப்பை நமக்கு சுற்றிக் காட்டுவதாய் இருக்கிறது. அதவே ஓர் அழகான முன்னெடுப்பாய் விளங்குகிறது.
ஆசிரியர் வேலை நிமித்தமாய் செய்யும் பயணங்கள், அங்கு நடக்கும் நிகழ்வுகள், அதனிடையில் தோன்றும் ஊர் நினைவுகள், அனுபவங்கள் இவைதான் இத்தொகுப்பின் கதைக்களம்.
ரியாத், துபாய், அரார், மொஹைல், லண்டன், பாரீஸ், ஆஸ்திரியா, ஸ்ரீலங்கா, துருக்கி என்று நாடுகளின் பட்டியல் கதைகள்தோறும் இருக்கிறது. பெரும்பாலான கதைகள் அவர் ஏதாவது ஒரு ஏர்போர்டில், இமிகிரேஷனில் நிற்பதில் இருந்தே தொடங்குகிறது. அதில் பார்க்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் இருந்து கதை தொடங்குகிறது. இதையெல்லாம் கொஞ்சம் சுவாரசியம் கலந்து எழுதியிருக்கிறார்.
கதைகள் :
மொத்தமாய் 21 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. சில முக்கிய கதைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.
மேட் இன் சைனா என்ற கதையில் துருக்கி, அதில் இஸ்தான்புல், அங்கு blue mosque, Shofia mosque, Sultan Ahmed square, என்று ஊர் முழுவதையும் இரண்டு பக்கத்துக்கு நமக்கு சுற்றி காண்பித்துவிட்டு, அதற்குள் என்டோஸ்கோபி, பைனல் இயர் ப்ராஜெக்ட் என்று போகிறது கதை. நம்மை நமது கல்லூரி காலத்துக்குள் அழைத்து சென்றுவிடுகிறது. கடைசி வருட ப்ராஜெக்ட்டை கடையில் வாங்கி அதை கொஞ்சமாய் நம் கைவண்ணம் கூட்டி அதை அந்த வருடத்திய சிறந்த ப்ராஜெக்ட் ஆக ஆக்குவது வரை கதை சுவாரசியமாக நகைச்சுவை கலந்து எழுதப்பட்டிருக்கிறது.
இவரு அணில் கும்ப்ளே மாதிரி என்னும் கதையும் நகைச்சுவை கலந்த ஒன்றே. கதையின் நாயகன் வேலை செய்யும் இடத்தில் உருவாகும் கிரிக்கெட் அணியில் இருக்கிறான். அதே தீவில் பாகிஸ்தானியர்களால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அணியுடன் ஆன கிரிக்கெட் பந்தயம் குறித்த கதை. வசன நடையில் அருமையாய் உள்ளது. பந்து போடத்தெரியாத கதையின் நாயகன் எவ்வாறு அந்த அணியின் நாயகன் ஆகிறான் என்பதையும் அவனைக் கண்டு எதிரணியினர் அஞ்சுவதையும் மிக சுவைப்பட எடுத்துரைக்கிறார்.
கடல் தாண்டிய உறவு என்னும் கதையில் இலங்கை பயணமும் அங்கு சந்திக்கும் தன் உறவுக்கார பெண்மணி குறித்த கதை இது. தன்னுடைய அப்பாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நடக்காமல் வேறு ஒருவருக்கு வாழ்க்கைபட்டுப் போன அந்த பெண்மணியை பற்றிய சிறுகதை.
பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா என்கிற கதை பெட்ரோமாஸ் விளக்கைக் கொண்டு ஒருவன் புது பணக்காரன் ஆகிறான் என்பதைப் பற்றிய கதை. வணிகத்துக்காக ஊருக்குள் நுழையும் அயல் தேசத்தவர் ஒருவர் போதை பொருள் கடத்துவதற்காக ஐம்பொன்னால் செய்யப்பட கோவில்களில் உள்ள பெட்ரோமாஸ் விளக்கை தேடி அலைவதும் அதை அவருக்கு பெற்றுத் தரும் கதையின் நாயகன் அதே முறையில் தொழில் செய்து ஊருக்குள் புது பணக்காரனாக பவனி வருவதும்தான் கதை. மனசுக்குள் பதியும்படியான எழுத்து இக்கதையில்.
பெண்களின் கதை ஏதாவது இருக்கிறதா என்னும் தேடலில் சிக்கியவை ரபீக் @ ஜிமெயில்.காம், ஜைனப் அல் பாக்கர் போன்ற அருமையான கதைகள்.
ரபீக் @ ஜிமெயில் .காம் கதையின் களத்தை திறம்பட கையாண்டிருக்கிறார். அயல் நாட்டில் இருக்கும் ஒருவன், தன் மனைவியின் ஒழுக்கம் குறித்த கவலையில் இருப்பதும் சந்தேகம் கொள்வதும் அதை தன உடனிருக்கும் நண்பனிடம் பகிர்ந்துக் கொள்வதும் காட்டப்படுகிறது. தன தாய் தகப்பனுடன் சேர்ந்திருக்காமல் குழந்தைகளுடன் தனித்து வாழ்வது இவனுக்கு சரியாய் படவில்லை. ஒரு முறை ஊருக்கு வருபவன் ஒரு விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் சூழல். ஊருக்கு விடுமுறையில் வரும் அவனின் நண்பன் நலம் விசாரிக்க வருகிறான். இவனின் சந்தேகங்களை அவன் முன்பாகவே அவனுடைய மனைவியிடம் பேசி அவனுக்குள் இருக்கும் அழுக்கை நீக்குவதாக கதை.
உன் மாமனார் மாமியாருடன் இல்லாமல், ஏன் தனியாய் இருக்கிறாய் என்ற கேள்விக்கு அந்த பெண்ணின் பதில் உளவியல் நோக்கு கொண்டது. தான் அங்கிருக்கும் போது, தன்னுடைய பிள்ளைகள், தன் கணவனின் சகோதரனை அப்பா என்று அழைப்பது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், அந்த சொல்லுக்கு தன் கணவன் மட்டுமே தகுதியானவன் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறுவது கணவன் உடனில்லாமல் வசிக்கும் பெண்ணின் தர்மசங்கடமான நிலையை எடுத்துரைப்பதாகும்.
தனித்து வாழாமல் தன் குடும்பத்தாரோடு இருந்தால் மட்டுமே அவளை கற்புடையவளாக நம்புவது, அவளின் மனநிலை அறியாமல் சந்தேகம் கொள்வது போன்ற தூரதேசத்தில் இருக்கும் ஓர் ஆண்மகனின் மனநிலையை நன்றாய் பிரதிபலிக்கிறது கதை.நேர்த்தியாய் எழுதப்பட்ட கதை எனலாம் இதை.
ஜைனப் அல் பாக்கர் என்னும் கதையில் அரபு நாடுகளிலும் வளர்ந்த நாடுகளைப் போலவே பெண்கள் படிக்கிறார்கள், பெரிய வேலை இருக்கிறார்கள், அழகாக ஒப்பனைகள் செய்துக்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் சிறுகதை. கணவர் வேறு ஊரில் இருப்பது விடுமுறைக்கு வந்து செல்வது அப்போது சமைப்பது சண்டையிடுவது கொஞ்சுவது என்ற அனைத்துமே எல்லா நாட்டு பெண்களுக்குமே ஒன்றுதான் என்பதை தெளிவாய் இந்த கதையில் சொல்கிறார். சமூகம் என்னும் தளம் மட்டுமே மாறுவதையும் ஆண் பெண் குணநலன்கள் மதம் கடந்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
களிமண் வீடு, உப்புக்காத்து நெற்றி தழும்பு போன்ற கதைகள் ஆசிரியரின் ஊர் சார்ந்த நினைவலைகளாய் இருக்கின்றன.
மதிப்புரை :
சிறுகதை என்பது ஒரு கட்டுக்குள் குறிப்பிட்ட சொற்களில் அதன் வீரியத்தை புரிய வைப்பது. அதற்கான புனைவு கலப்பு சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். புனைவு சற்று குறைவாக இருந்தால், வாசிக்கும் வாசகன் தொய்வுற சாத்தியங்கள் உண்டு. அந்த வகையில், ஆசிரியர் இத்தொகுப்பின் மூலம் புதுமையான எழுத்துகளோடும் வித்தியாசமான மொழிநடையிலும் எல்லோரையும் கவர்கிறார்.
வாசகனை கவரும் எழுத்து ஆதலால் சுவாரசியம் அதிகமாகவே இருக்கிறது. கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை புத்தகத்தை கீழே வைக்கமுடியாத அளவுக்கு விறுவிறுப்பும் இருக்கிறது.
இருந்தும் ஒரு சிலவற்றை விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். இவருடைய சிறுகதைகளைப் படித்ததில்,சிறுகதைகள் படித்தோம் என்னும் நிறைவைவிட ஒரு பயணக் கட்டுரை அல்லது அனுபவங்கள் சார்ந்த கதைகளைப் படித்தது போலவே இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் travelogue / travel blog with memories என்று எடுத்துக் கொள்ளலாம்.
அடைப்புக்குறிக்குள் எழுதுவது, ஆசிரியரின் ஆச்சரிய உணர்வுகளை எழுத்தாக்கியிருப்பது, நான் என்னும் தன்னிலைபடுத்தி கதைகள் செல்வது போன்றவற்றை சற்று தவிர்த்திருக்கலாம். கதாபாத்திரங்களின் மனம் சார்ந்த எண்ணங்கள், உணர்வுகள் பெரிதாய் வெளிப்படவில்லை. அதிகப்படியான தொழில்நுட்ப குறிப்புகள் (Technical data ) சிறுகதைக்கு தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்கப்படவேண்டும். இஸ்தான்புல்லுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள தூரம், மணி தூரம், ஒரு லிரா 32 ரூபாய் இவை போன்ற விஷயங்கள் கதையின் ஆழத்தை குறைத்துவிடும்.
அனைத்திலும் இயல்பான கரு அமைந்திருக்கிறது. அதை மையபடுத்தி கதை நகர்த்துதல் என்பதில் ஒரு பின்னடைவு தெரிகிறது. கி ரா அய்யா அணிந்துரையில் சொல்லியிருப்பது போல, நடக்க நடக்க நடை பழகும் எனக் கொள்ளலாம். வாசிக்க வாசிக்க இவரின் மொழி நடையும் சரியாகும் என்பதே என் கருத்து. நிறைய வாசிப்பு இருக்கவேண்டும். அது கவிதையோ கதையோ நாவலோ எதுவாகினும் வாசிப்பு மட்டுமே அதன் கட்டமைப்பை நமக்கு புரிய வைக்கும்.
எழுத்தாளர் அம்பை அவர்கள் பயணங்கள் சார்ந்த சிறுகதைகள் அதிகம் எழுதியிருக்கிறார்கள். அந்த கதையின் ஓட்டம் அம்பை அவர்களின் பார்வையில்தான் இயங்குவதாக இருக்கும். இருந்தும் நான் என்னும் தன்னிலைப்படுத்துதல் இருக்காது. யாரோ கதை சொல்வதாக சரளமான மொழிநடையில் கதை நகரும் என்பதே அருமை.
சமகால எழுத்தாளர்களில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தில் மனிதர்களின் நுண்ணிய மன உணர்வுகளுடன் மற்ற புற விஷயத்து துல்லியங்களையும் சேர்த்து ஒரு படர்க்கை நிலையிலேயே படிக்க கிடைக்கும்.
ஜெயகாந்தனின் எழுத்துகள் பெண்களைச் சுற்றி வந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு சூழலை சமூகத்தை எடுத்துக்காட்டும். பிராமண சமூகமாகவும் கிறித்துவ சமூகமாகவும் இருக்கும். அதனுள் இருக்கும் கலாசார வேறுபாடுகள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். இம்மாதிரியான எழுத்துகளின் வாசிப்பே எழுதும் எழுத்தாளனை பக்குவப்படுத்தும்.
சிறுகதைக்கான கட்டமைப்பு :
ஒரு நிகழ்வை முகநூலில் எழுதுவதற்கும் வலைபதிவில் எழுதுவதற்கும் சிறுகதை ஆக்குவதற்கும் கட்டுரையாய் அதை மாற்றுவதற்கும் தனி தனி கட்டமைப்புகள் இருக்கின்றன.
முகநூலில் அது படிப்பவர்களுக்கு சுவாரசியம் தட்டுமாறு எழுதவேண்டும்.
வலைபதிவில் அதற்கு முன்னும் பின்னுமாய் முன்னுரையும் முடிவுரையும் இணைக்கப்பட வேண்டும்.
கட்டுரைக்கு ஓர் ஒழுங்கான கட்டமைப்பு பொருளுரை விளக்கவுரை எல்லாம் சேர்ந்து தேவையாகிறது.
சிறுகதைக்கு அந்த நிகழ்வில் இருந்து கதைக்கான கருவை மட்டும் எடுத்து அதை சுற்றி சிறிதாய் புனைவு சேர்த்து அழகான மொழிநடையில் எழுத வேண்டும்.
இவற்றினுள் எழுத்து முகம்தான் வேறுபடுகிறது. ஒரே மாதிரியான கதை களம், எழுத்து நடை என்பது ஒரு தொகுப்பைப் படிக்கும் வாசகனுக்கு ஒரு பொது சலிப்பு உண்டு பண்ணிவிடும்.
கே வி ஜெயஸ்ரீ அவர்கள் நன்கு அறியப்பட்ட மொழிபெயர்ப்பாளர். மலையாளம் தமிழ் இரண்டிலும் எழுதிவருபவர்.
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘ஒற்றை கதவு’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அணிந்துரையில் இவ்வாறு சொல்லியிருப்பார் :
“பால்சக்கரியா, ஐயப்பன் போன்ற மலையாள இலக்கிய ஆளுமைகளை மீண்டும் மீண்டும் மொழிப்பெயர்த்தது போதுமென முடிவெடுத்தேன். நவீனமாக அங்கே எழுதிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறை கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களைத் தேடி அலைய நேர்ந்தது.
சந்தோஷின் கதைகளின் வழியாக நான் பார்த்த கேரளம் மிகவும் அபூர்வமானது. மலையாளிகளின் மேதமை, மேன்மை, சுத்தம், பாரம்பரியம் என்று போன தலைமுறை எழுத்தாளர்களால் கட்டி எழுப்பப்பட்ட பிம்பங்களைத் தன் படைப்பின் எளிய மனிதர்களைக் கொண்டே நொறுக்கி தூள் தூளாக்குகிறார் சந்தோஷ்.”
இந்த ஒரு தாக்கத்தைத்தான் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடம் எதிர்ப்பார்க்கிறோம். அந்த தாக்கம் இவரின் கதை தொகுப்பில், வடிவு, இந்த மடம் இல்லைன்னா சந்த மடம், ரபீக் @ ஜிமெயில் .காம் என்பது போன்ற கதைகளில் காணப்படுகிறது.
கூழாங்கற்கள் சிறுகதை தொகுப்பு அவரின் முதல் தொகுப்பு. ஆசிரியரின் எழுத்து கனவுகளை அச்சாக்கி மகிழ்வித்த ஓன்று. இதே புதுமை எழுத்துகளுடன், கனவுப்பிரியனிடம் இருந்து அடுத்த சிறுகதை தொகுப்பை இன்னும் கனமாய் எதிர்ப்பார்க்கிறோம்.
வாழ்த்துகளும் வணக்கமும்..
ஒரு அருமையான விமர்சனம் கனவுப்பிரியன் அண்ணாவின் கதைகளுக்கு...
ReplyDeleteஅடுத்த தொகுப்புக்கு தயாராயிட்டார் ஆசிரியர்....
வாழ்த்துக்கள் சகோதரி.
அற்புதமான, முழுமையான விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி அகிலா Ahila Puhal
ReplyDelete