உன்னை பார்க்க வேண்டுமென்று நினைத்த கணத்தில் முந்திய மழைக்கு நீ நட்டுவைத்த பிட்டம் தடித்த அந்த சிறு வேப்பங்குச்சி நினைவுக்கு வருகிறது சிறு பருவத்தில் உன் விரலின் உவர்ப்புடன் உண்ட வேப்பம்பழத்தின் இனிப்பும், இரட்டை ஜடையுடன் இருவரும் விரல்கள் பிணைய சென்ற பள்ளியின் பாதையும், பேருந்தின் சிறு குலுங்கல்களில் தாவணியைப் பத்திரபடுத்தி புத்தகங்களைத் தவறவிட்டு சில்லறை சிரிப்புகளுடன் வாழ்ந்த கல்லூரி காலமும், பட்டுபுடவை சரசரக்க தெரியாத ஒருவனுடன், திருமணம் என்பதாய் சொல்லி, ஒட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும் முகம் கொள்ளா சிரிப்புடன் பட்டணத்திற்கு நீ போன நிமிடமும், நினைவுக்கு வருகிறது வேப்பந்தளிர்கள் துளிர்த்து இளம்பச்சையிலிருந்து அடர்பசுமைக்கு மாறிவிட்டன மெல்லிய காம்புகள் கிளைகளாகி பூக்கும் சாதுர்யம் காட்டுகின்றன உனக்கானதே எனக்குமென, பூத்துவிட்ட நானும், காத்திருக்கிறேன், தண்டவாளத்தில் தனியாய் பாண்டியாடி கொண்டு அந்த தெரியாத ஒருவனுக்காய்..