Skip to main content

Posts

Showing posts from July 5, 2015

எப்படியோ சாத்தியப்படுத்திற்று

ஒரு பாட்டம் அழுது முடித்தாயிற்று ஓர் இரவு முழுவதும், நீ இறக்க சாபமும் கொடுத்தாயிற்று உன் பெயர் கொண்ட எதிர்வீட்டு பையனுக்கு, தெருமுக்கு கடைக்கு என்று எல்லாவற்றிற்கும் மனதிற்குள் வேறு பெயர் சூட்டியாயிற்று ஏதும் நடவாதது போல் காட்டிக்கொள்ள நடித்தும் பார்த்தாகிவிட்டது படுக்கையில் உதிர்ந்திருந்த உன் முடிகளைக் கூட காற்றுக்கு காவு கொடுத்தாயிற்று நீயும் நானும் மூடி திறந்து விளையாடிய திரைசீலையை, இரு இதழ் வரைந்த தேநீர் கோப்பையை, முத்தம் வேண்டி இழுத்ததில் முந்தானை கிழிந்த சேலையை என்று பார்த்து பார்த்து எல்லாம் ஒழித்தாயிற்று நிம்மதியின் கணங்கள் சுமந்து, அம்பையின் புத்தகத்துடன் அமர நேர்ந்த ஒரு தருணத்தில், ஈரம் உலராத நம் கைரேகைகளைச் சுமந்து சிலாகித்து, சிவப்பில் அடிக்கோடிட்டு வாசித்த வரிகள், மூடிய விழிகளின் ஓரமாய் எட்டிப்பார்க்க, கண்ணீரை மட்டும், எப்படியோ சாத்தியப்படுத்திற்று.