Skip to main content

பெண்ணீயமும் பெண் சுதந்திரமும்

வகை (3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் 

பெண்ணீயமும் பெண் சுதந்திரமும்  



பெண்ணீயம் :

பெண்ணீயம் என்பது குடும்பம், சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்து தளங்களிலும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கப் பாடுபடுவது. பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அடிப்படை வாதங்களில் ஓன்றுமாகும்.

சமூக விழிப்புணர்வும் பெண் சார்ந்த நிலைப்பாடுகளும் சரியான புரிதலில் ஆண், பெண் இருவருக்குமே இருந்தால், பெண் முன்னேற்றம் என்பது எளிதாய் சாத்தியமே.

இப்போது இருக்கும் சமூகத்தில், பெண்ணீயம் என்பதை தவறாக புரிந்துக் கொள்ளும் நிலைதான் இருக்கிறது. சமூகத்தில் பெண்ணின் உரிமைகளை எடுத்துரைக்கவும் தந்தைவழி சமூகத்தின் அடிமைத்தனத்தை ஒழிப்பதும்தான் அதன் அடையாளம்.. ஆணை வெறுப்பது அல்ல அதன் நோக்கம்.

என் கணவர் சினிமாவுக்கு தனியாகவோ, நண்பர்களுடனோ போக அனுமதிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை ஒரு பெண்மணி என்னிடம் வைத்தார். இதை ஆணாதிக்கம் என்று என்னிடம் இரைந்து கத்தினார். அது தவறு என்கிறது பெண்ணீயம். சினிமாவிற்கு போவதற்கு பெண்ணீயம் தேவையில்லை.  சின்ன சின்ன ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் அதை இழுக்கவேண்டிய அவசியமும் இல்லை.

பெண்ணீயம் என்கிற அந்த வார்த்தையை ஒரு ஆர்வ உந்துதலுக்காக உபயோகிப்பதை யாராலும் ஒத்துக்கொள்ளவே முடியாது. இப்படி தேவையற்ற இடங்களில் ஒரு அழகியலுக்காக சிலரால் பயன்படுத்தப்படும் நிலைதான் அதை உண்மையில் சமூக அக்கறையுடன் பிரயோகிக்கும் இடங்களில் மற்றவர்களால் அவமதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

பெண்ணீயம் என்பது தவறாகவே பல பெண்களாலேயே நினைக்கப்பட்டுவருகிறது. தன்னை அழகுப்படுத்திக் கொண்டு, நமது உடை மற்றும் ஒழுக்கம் சார்ந்த கலாசாரம் மறந்து, மேலைநாட்டு நாகரீகங்களைத் தானும் கடைபிடித்து தன் பெண் பிள்ளைகளுக்கும் அதையே கற்றுக்கொடுத்து வாழும் தாய்மார்கள் அதிகமாய் இவ்வமயம் உருவாகி வருகிறார்கள் என்பதை நினைக்கவே சற்று வருத்தமாக இருக்கிறது. புரிதலில்தான் இதற்கான வழிமுறைகள் உள்ளன.

பெண் சுதந்திரம் :

பெண் சுதந்திரமும் அதுபோலவேதான். ஆண்டாண்டாய் அடிமைப்பட்டுப் போன பெண் இனத்தை மீட்பது குறித்தானது அது. இன்றைய சூழலில் பெண் அடிமை என்பது சற்று குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு காலத்தில் கொத்தடிமை போல், பெண் தன் முகம் மறைத்தும், பூப்படைந்ததும் கல்வி மறுக்கப்பட்டும், இளவயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்டும், விதவையானால் உணர்வுகள் மழுங்கடிப்பட்டும் வாழும் துர்பாக்கியநிலை இருந்தது.

அந்த நிலைப்பாடு சமூகத்தில் சற்று மாறி, வரதட்சணையாக உருவெடுத்து, அதில் மருமகள் எரிப்பு போன்ற நிகழ்வுகளும் அடுத்தடுத்த காலகட்டங்களில் நடந்தேறியது. இப்போது இருக்கும் சூழலில் அவை சிறிது சதவீதம் நடக்கிறது என்றாலும், பெரும்பாலான பெண்கள் அதை வெளிக்கொண்டுவந்து போராடி வெற்றியும் காண்கிறார்கள். அதனால்தான் பெண்ணுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் சற்று குறைந்திருக்கின்றன.

ஆனாலும் பெண் சுதந்திரம் முழுமை பெறவில்லை. உயர்கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் இன்னும் பல குடும்பங்களில் பெண்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் மாநிலம் தாண்டி வேலையின் நிமித்தமாய் செல்ல பெண்பிள்ளைகளுக்கு அனுமதி சற்று சிரமத்துடனே கிடைக்கிறது.

அதற்கான காரணம் தெளிவாய் தெரிகிறது. நமது சமூகம் பெண்களை வீட்டுக்குள் வைத்து பத்திரபடுத்தியே பழக்கப்பட்டுவிட்டது. வெளியே அனுப்பும்போது அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையே இதற்கெல்லாம் மூலமாய் அமைகிறது. ஏனென்றால், பெண்களுக்கான பாதுகாப்பு இந்த சமூகத்தில் மேம்படவில்லை.

ஆணின் பார்வையில் பெண் இன்னும் ஒரு வசீகரப் பொருளாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறாள். ஆணும் பெண்ணும் சரிசமமாய் நெடுங்காலமாய் பழகியிருந்தால், சமூக பார்வை இவ்வாறு இல்லாமல் சகஜமாகியிருக்கும். ஆண் இனத்தைப் போலவே பெண்ணினமும் இந்த புவியில் ஒரு பிறவிதான் என்பது உறுதிபட்டிருக்கும்.

பெண்ணின் சுதந்திரம் இந்த பாதுகாப்பு குறித்த நோக்கிலேயே இன்னும் சென்றுக் கொண்டிருக்கிறது. சமூகம் பெண்ணிற்கு கேடயமாய் அமைந்தால், அவளின் முன்னேற்றம் தடைபடாமல் செல்லும் என்பதில் ஐயமில்லை.

2012 ஆம் ஆண்டு இந்திய தலைநகரில் ஓடும் பேருந்தில் நடந்த மருத்துவ கல்லூரி மாணவியின் மீது ஆறு பேரால் நடத்தப்பட்ட வன்முறையின் கூறுகள் இன்னும் நம் மனதில் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை, அதே போன்றதொரு நிகழ்வுகள் நடந்துக் கொண்டேயிருக்கின்றன நம் சமூகத்தில்.  

வாழ்வியல் மாற்றங்கள் :

பெண்ணைச் சூழ்ந்திருக்கும் இந்த அச்சம் நீங்கினால்தான், ஒரு குடும்பத்தில் உள்ள அவளின் தகப்பன், தனையன், கணவன், மகன் போன்ற அவளின் ஆண் சொந்தங்களுக்கு அவளை ஊக்கப்படுத்தும் உத்வேகம் வரும்.

அதுவும் கூட நம் வீடுகளில் இருந்துதான் வரவேண்டும். நம் குடும்பங்களில் இருக்கும் ஆண்கள்தானே, சமூகத்தில் உலவும் ஆண்களும். அதனால், ஒரு ஆண்பிள்ளை வீட்டில் இருந்தால், அதற்கு பெண் சார்ந்த ஒழுக்கமுறைகள் கற்றுக் கொடுக்கவேண்டும்.

சிறு வயதில் இருந்தே முறையான உடற்கல்வியும் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் பெண் உடல் சார்ந்த தகாத எண்ணங்கள் ஆணுக்கும் ஆண் உடல் சார்ந்த தெரியாத விஷயங்களுக்கு பெண்ணுக்கும் தெளிவாகும். அதன் மூலமும் நாம் சமூகத்தில் பெண்ணின் மீதான வன்முறைகளைச் சற்று குறைக்கமுயலலாம்.


சட்டங்களும் திட்டங்களும் கடுமையான தண்டனைகளும் அந்த நேரத்து வன்முறைகளைக் குறைக்கவும் அதை செய்பவர்களை அச்சப்படுத்துமே தவிர அது நிரந்தர தீர்வு அல்ல. ஒவ்வொரு வீடும் ஒரு சமூகத்தின் சிறு புள்ளிதான். ஆனால் அதுவே சமூக ஒழுக்கத்தின் தொடக்கப் புள்ளியாகும். அதை நாம் அனைவரும் புரிந்து நடைமுறைப்படுத்தும் போது, பெண்ணீயமும் அதன் வழி பெண்முன்னேற்றமும் எளிதாய் சாத்தியப்படும்.   


படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

உறுதி மொழிகள்:
(1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன்.

(2) 
இந்த எனது படைப்பு  வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் -2015 க்காகவே எழுதப்பட்டது. 

(3)
இந்தப் படைப்பு இதற்கு முன் எதிலும் வெளியானதல்ல. இப்போட்டியின் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி கூறுகிறேன்.

பெயர் : அகிலா
வலைத்தளம் : http://www.ahilas.com
அலைப்பேசி : 9443195561
மெயில் : artahila@gmail.com



Comments

  1. மிக்க நன்றி தனபாலன்

    ReplyDelete
  2. பெண்ணீயத்திற்கு அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அருமையான பதிவு. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். நண்பரே..

      Delete
  3. பெண்ணியம் பற்றிய மிகவும் ஆழமான அலசல். பெண்களின் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பு முயற்சிகள் யாவும் மிகவும் பயனுள்ளவை. பாராட்டுகள் அகிலா. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் கீதா..சிறு விதைகள் தானே வளர்ந்து விருட்சமாகின்றன. நாம் விதைத்துக் கொண்டிருக்கிறோம், நாளைய பெண் பிள்ளைகளின் அறுவடைக்காக..

      Delete
  4. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா தங்களின் பாராட்டுக்கு

      Delete
  5. உங்களிடமிருந்து இப்படி ஒரு
    அருமையான கட்டுரை வரும் என எதிர்பார்த்திருந்தேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பும் அக்கறையும்தான் எழுதத் தூண்டும் பலம். மிக்க மகிழ்ச்சி அய்யா

      Delete
  6. மிகச்சிறந்த பதிவு. அழகியலுக்காக மிகச்சிலரால் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதும் உண்மைதான்.

    ReplyDelete
  7. பெண்ணீயம் என்றால் என்ன புரிந்து கொள்ளப்படுகிறது என்று
    சொல்லப்படுவதை விட்டு விலகி,
    என்ன புரிந்து கொள்ளப்படவேண்டும் என விளக்கமாக
    சொல்லி இருப்பது,
    ஒரு முன் உதாரணமாக இருக்கட்டும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி உங்களின் கருத்துக்கு

      Delete
  8. வணக்கம்! அருமையான கருத்துகள்
    சரியான புரிதல்கள் இருந்தால் மட்டுமே நல்ல பயன்கள் எ.ஏற்படும்
    அழகாக உள்ளது! வாழ்த்துக்கள் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும்

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...