Skip to main content

மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்

மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன்

ஆசிரியர் செந்தில் பாலா





பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவனவாய் இருக்கும் செந்தில் பாலாவின் கவிதைப்பூக்கள் நூல்.



ஆசிரியர் அறிமுகம் 



ஆசிரியர் செந்தில்பாலா, கதை, கவிதை, நாடகம், சிறார் கதைகள் என்னும் தளங்களில் எழுதிக் கொண்டிருப்பவர்.

செஞ்சியை சேர்ந்தவர். அரசு பள்ளியொன்றில் கணித ஆசிரியர்.



என்னுரை 

நூல் அறிமுகம் 


மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் என்னும் தலைப்பின் வசமே ஓர் ஈர்ப்பு உள்ளது.
செந்தில்பாலாவின் கற்றுக்கொண்டு போகிறவன் போய்விடுகிறான்.
அதை வாசிக்கிறவன் வசப்படுத்தப்படுகிறான். அப்படிதான் நானும் வசப்படுத்தப்பட்டேன்.


கவிதைகளைக் கடக்கும் சமயம், இதை நானும் கடந்திருக்கிறேனே என ஒவ்வொன்றும் எனக்கு ஒரு நிறுத்தத்தைக் காட்டுகிறது.


செந்தில்பாலாவின் கோட்டோவியங்களில் அந்த செதுக்கிய எழுத்துக்களில் தங்கி அசைபோடும் நிலை வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாகிறது.

ஆசிரியர் செந்தில்பாலா 



ஒரு மாலைநேரத்து கோப்பை தேநீருடன் கடந்துவிட அமர்ந்தேன். அவ்வளவு எளிதாய் கடந்துவிட முடியவில்லை என்பதுதான் உண்மையாயிற்று.


பாலற்ற தேநீரின் சூடு நுனிநாக்கை பதம் செய்துவிடுவது வழக்கம். அது ஒருநாள் பொழுதின் உணவின் சுவையை, மாற்றிக் காட்டவும் கூடும். அது போன்றுதான் நினைவுகளில் அலைகளை அதிர்வுப்படுத்தி விடுகிறான் மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவனும்.


தோலுரித்து காட்டப்படும் விஷயங்கள் இதில் ஏராளமாய் இருக்கிறது.
வேகவைத்த சோறு முதல் கழிப்பிடம் வரை


அதில் ஒன்றை உங்களுடன் பகிரதான் வேண்டும் நான்.


இதுகள் பற்றி யோசித்திருக்கக் கூடாது
இதுகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தபோதே
கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்க வேண்டும்

சிந்திப்பவைகளை சிந்தனைகளாகவே 
நிறுத்திக்கொள்ள கற்றிருக்க வேண்டும்

குடியழிப்பது குறித்தும்
தலைமுறை அழிவது குறித்தும்
கவலைபடாதிருந்திருக்க வேண்டும்

எல்லாவற்றோடும் எல்லாவற்றையும்
பொருத்திப் பார்க்கும் பழக்கத்தை தவிர்த்திருக்க வேண்டும்

ஏதுகள் பற்றியும்
அதிகம் சிந்திக்காதிருப்பது நல்லது

பரிமாறுகையில் சிந்திய பருக்கையோன்று  
எத்தனை கதிர்களைப் பெற்றேடுத்திருந்திருக்கும்

அன்றிலிருந்து
பினக்குவியலாகவே தோன்றுகிறது
தோலுரித்து வேகவைத்த சோறு


இதை படித்தபிறகு எனக்கும் கூட வேகவைத்த சோற்றின் மீது இந்த பிரமை தட்டத்தொடங்கிவிட்டது.


நம் வீட்டு வாயிலைக் கடக்கும் போது சிரிக்கும் ஊதா பூக்களைத் தாண்டி கண்ணினோரமாய் படும் கம்பிவேலியைப் போலிருக்கிறது கவிதையினுள் மறைந்திருக்கும் கரு பூக்கள்.


கொடுத்திருந்த முகநூலின் முகவரித் தேடிப்போனேன். அங்கு குழந்தைகளின் கவிதைகள் கொட்டிக் கிடந்தன. சிறார் பாடல்களாய்  


குழந்தைகளுக்காகக் கவிதை சுமக்கும் இவரால், எப்படி மனிதர்களைக் கடந்து போக முடிகிறது என ஆச்சரியப்பட்டுதான் போகிறேன்.


குருவி பறந்து போகுது
கூடவே மனசும் ஓடுது

தத்தி தத்தி பறக்குது
கொத்தி கொத்தி கொறிக்குது

கரம்பிலெதையோ தேடுது
வரம்பில்லாம ஓடுது

கொள்ளையில் கும்பலா கூடுது
நம்ம தொல்லையில்லாம பாடுது


என்று எழுத முடிந்த அவரால்தான்,


குறுக்கு நெடுக்கு
பிரிவு நெருக்கம்

முன்னது பின்னது
போனவை வந்தவை என

எல்லாவற்றையும் விடு

இல்லாதிருப்பதை
உணர நேரிட்டால் கூட போதும்
இருந்ததற்கு


என பெரும் புலம்பல்களையும் மௌனங்களையும் தீட்ட முடிந்திருக்கிறது.
நான் அவ்வப்போது செல்லும் சின்னஞ் சிறார்களின் பள்ளிகளுக்கு இனி இவரையும் இவரது கவிதைகளையும் கடத்திச் செல்லலாம் என இருக்கிறேன்.


எனக்கு தெரிந்து எழுதுபவர்கள் தாங்கள் அறியாமலே எங்காவதாயினும் தங்களின் சுய முகவரியை விட்டுச் செல்வார்கள். நமது கணித ஆசிரியரும் அப்படிதான்.

ஒரு கணக்கு கவிதை எழுதியிருக்கிறார். 


எல்லாவற்றிக்கும் எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது

மௌனத்துக்குள்ளும் முனுமுனுப்புக்குள்ளும் 
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கை பார்ப்போருக்குள்ளும் கூட 
ஒரு கணக்கு இருக்கிறது

அவரவருக்குள்ளும் ஒரு கணக்கு 
ஓடிக்கொண்டேயிருக்கிறது

எல்லாவற்றிற்கும்
கணக்கு பார்க்கமுடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது

உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கணக்குக்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்

ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துப் போகின்றன

அனாயாசமாக, கணக்கு
அது ஒரு கணக்கைப் போட்டுவிட்டு
மிக இயல்பாக போய்க் கொண்டே இருக்கிறது


ஆசிரியரின் கணக்கு பிணக்கில்லாத கணக்கு..


இந்த தொகுப்பில், எனக்கென்று மிகவும் பிடித்ததாய் ஒரு கவிதை இருக்கிறது


அடைதலும் அடைத்தலும்..

எல்லோரையும் போல் வாரசந்தையில் வாங்கிவிட்டேன்
குருவிகள் வளர்ப்பது பெரும் பாவம் என்று எனக்கு தோன்றவில்லை


அப்படி பார்த்தால் வளர்ப்பதேன்பதே பாவம்தான்
என் மகளைப் போலதான்
தங்கையும் வளர்க்கப்பட்டிருக்கிறாள்


வளர்க்கப்படுகிறோம் என்பதை அறியாமலே
வளர்கின்றன மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் கூட


வளர்த்தல் வேறு வளருதல் வேறு
புரிகிறது என்றாலும் யாரும் வளர்வதே இல்லை


குடும்ப அமைப்பிற்குள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்
சமூகம் எதை எதையோ கட்டமைத்திருக்கிறது
நாடு என்ற வேலிக்கு உட்பட்டவராக அடக்கப்பட்டிருக்கிறோம்


கூண்டுக்குள் அடைப்பட்டுக் கிடப்பதை
பொறுக்கமுடியாமல் பறக்க விட்டுவிட்டேன்


ஆனாலும்
எங்களை யாரேனும் விட்டாலும் கூட
எங்கு செல்வோம் பறக்க


உண்மைதான், நம்மை திறந்துவிட்டு பார்க்கட்டும், நாம் செல்லும் திசையறியாமல் முழித்துக் கொண்டுதான் இருப்போம். செதுக்கப்பட்ட பாதைகள் மட்டுமே நமக்கு பழக்கமானவை.

ஆசிரியரின் ஓவியங்கள் 



கோடுகள் கொண்டு ஓவியங்கள் வரைவதில் வல்லவராய் இருக்கிறார். தனது கவிதைகளுக்கு தானே ஓவியமிட்டு இருக்கிறார்.இந்த கோட்டோவியங்களில் கவிதையின் ஆழத்தைத் தருகிறார். 

ஆசிரியரின் எழுத்துக்கள்





மனிதனைக் கற்றுக்கொண்டு போகிறவனை ஒரு கட்டுக்குள் அடைக்கவோ வகைப்படுத்தவோ அர்த்தப்படுத்தவோ தேவையில்லை. நீரோடையின் மேல் மிதக்கும் அரவமற்ற பயணத்தில் உள்ள இலைகளின் சாகசங்களை பேசும் சரித்திரம் போல் உள்ளன இக்கவிதைகள். அவ்வப்போது உடையாத நீர்குமிழ்கள், வாழ்வின் நிதர்சனங்களாய் இடைப்பட்டு உடைந்து விடுகின்றன.


பறவை கூட இங்கு சுமை ஒதுக்கி சிறகு உதறி பறக்கிறது . நானும் கூட எழுதி வைத்து படிக்கிறேன் கற்றுக் கொண்டு கடக்க முடியாமல்..


வாழ்வின் இலக்கணம் தப்பாமல் பல, கோடுகளுடனும் சில, புள்ளிகளுடனும் மற்றும் சில செயலிழந்த உறுப்புகளுடனும் பேசுகின்றன கவிதைகள்.


இவரின் எழுத்துக்களில் மனிதன் தன்னைத்தானே தயார்ப்படுத்திக் கொள்ளுதல் பற்றியும் இருக்கிறது. வருங்காலத்திற்காகவும் ஒரு குறியீடை உள்ளடக்கிய செயலுக்காகவும் வெளியே சென்றுவிட்டு திரும்பவும் கதவுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளும் பாதுகாப்பிற்காகவும் மரணத்திற்காகவும் தயார்படுத்துதல் மனிதனுள் நிகழ்ந்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்.


வாசித்த நிமிடங்கள் தாண்டியும், உயிரோடு ஊர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. அதனால்தான் மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவனை, நமக்கு கொடுத்திருக்கிறார் ஆசிரியர், நாமும் கற்றுக் கொண்டு போகட்டும் என்று.  


வாசிப்போம், நூலின் வாசனையோடு..






Comments

  1. அருமை... லயித்து விட்டேன்...

    ReplyDelete
  2. கவிதை புத்தகத்துக்கு கவிதையாய் ஒரு நூல் அறிமுகம்...
    அருமை.. அவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான நூல்.

      Delete
  3. அருமையான நூல் அறிமுகம்! கவிதைகள் சிறப்பாய் இருந்தன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களின் அனுபவங்களை அழகாய் சொல்லி செல்லும் கவிதைகள்

      Delete
  4. கவிதைகள் அழகு !! நூல் அறிமுகம் மிகவும் அழகு !!

    I would like to get this book, please guide me where can I get by courier.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...