சூரியக்கதிர் இதழில் வெளிவந்த என் சிறுகதை
புதன் கிழமை வந்துவிட்டாலே அப்புவுக்கு ஞாயிற்றுகிழமையின் வாசம் மனதுக்குள் எட்டிப் பார்த்துவிடும். நாலு நாளாய் எண்ணிகிட்டு இருந்தான். அன்று விடிந்ததும் அம்மாவின் கல்லு
இட்லியை சமத்தாக சாப்பிட்டான். சட்டையை மாட்டினான். அம்மா இவனை ஒரப்பார்வையில்
பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
‘என்ன துரை எங்கே கிளம்பிடீங்க...’
என்றாள்.
மலங்க விழித்தான் அப்பு. புரிந்து
போனது அவளுக்கு.
‘போ....அந்த கிழவிகிட்டே வாரம்
ஒருநா திட்டு வாங்காட்டி உனக்கு இன்னைக்கு பொழுது கழியாது. கண்ணு தெரியாதவ.
யாருமில்லாதவ. துணைக்கு நாமதானே பக்கத்துல இருக்கோம். நல்லது கெட்டதுக்கு நான்தானே
ஓடணும். அதுவும் கொள்ளுபேரன்னு நீ ஒருத்தந்தானே இருக்கே...அந்த நெனப்பு கிழவிக்கு
இருந்தாதானே...போன மாசம்தானே உன்னை முருங்கை குச்சியை வச்சி அடிச்சா. வலி
விட்டுபோனா இப்படிதான் போவே...போ..’ என்று ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சின்ன
பாட்டிதான் அந்த கிழவி. ஆனாலும் பாசமற்றவள் என்பது இவளின் நெனப்பு.
அப்பு ரோட்டைத் தொட்டான்.
படகுகார் ஒன்று சர்ரென்று அவனைத் தாண்டியது. புழுதி முகத்தில் அறைந்தபோது லேசாக
சிரித்தான். ஒருநா அந்த வண்டிக்குள்ளே உட்கார்ந்து சீனி நெல்லிக்கா
சாப்பிட்டுகிட்டே போணும்னு நினைத்தான்.
தெரு திரும்பும் முனையில் கொஞ்சம்
பெரிதாய் அந்த காரை வீடு உட்கார்ந்திருந்தது. வேலியிட்டு படலிடப்பட்டு இருந்தது.
அதை பிடித்துக் கொண்டு நின்றான். உள்ளே ஐந்து நெல்லிக்காய் மரங்கள் நிமிர்ந்து
நின்றன. ஒன்று மட்டுமே அர நெல்லிக்காய். மற்றதெல்லாம் சீனி நெல்லிக்காய்.
அப்புவுக்கு அர நெல்லிக்காய்
பிடிப்பதில்லை. சாப்பிடும் போது புளிக்கும். தண்ணிக் குடிச்சா இனிக்கும். அவனுக்கு
சாப்பிடும்போதே இனிக்கும் சீனி நெல்லிக்காய்தான் பிடிக்கும். குட்டி பூசணி மாதிரி
பாகம் பிரித்து இளம் பச்சை நிறத்தில் இருக்கும். நினைத்தவுடன் தின்னும் ஆசை
வந்தது.
மெதுவாய் படலைத் திறந்தான்.
வராந்தாவில் ஆச்சி உட்கார்ந்திருந்தாள் தலைவிரித்து போட்டு சினுக்கோலி கொண்டு
சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற சேலையில் இன்னும் வெள்ளையாய்
இருந்தாள். அப்புவுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அடித்தாலும் சில நேரங்களில் உடம்பு
முழுவதும் தன் கைக்கொண்டு தடவிப்பார்த்து, ‘கணேசன் மவன் இம்புட்டு
வளந்துட்டியா...’என்பாள்..
சத்தமில்லாமல் திறந்தும், படலின்
சிறு அசைவு அவள் காதுக்கு கேட்டுவிட்டது.
‘லலிதா...’ என்றாள்.
‘என்ன ஆச்சி....’ என்றபடி
பின்வாசல் பக்கமிருந்து ஈரமான கைகளைத் துடைத்தபடி ஓடிவந்தாள் வேலைக்கு இருக்கும்
லலிதாக்கா. இவனைக் கண்டதும் கண் விரிய சிரித்தாள்.
‘யாரோ படல திறந்தாங்க...பாரு..’
என்றாள். லலிதா அதற்கு, ‘யாருமில்ல ஆச்சி...காத்து...’ என்று சொல்லிவிட்டு இவனை
இழுத்துக்கொண்டு போய் துணி துவைக்கும் கல்லில் தூக்கி உட்கார்த்தினாள்.
‘பரீட்சை முடிஞ்சிதா..’
‘ஆமாக்கா..’
நீண்ட சடையின் முடிவில் அழகாய்
ரோஸ் கலர் ரிப்பன் கட்டியிருந்தாள்.
‘அக்கா...எனக்கு இது வேணும்...’
என்றான்.
‘ரிப்பனா...பொம்பள பிள்ளையாடா
நீ...’ என்று சிரித்தாள்.
சிரிக்கும் போது அவளின் பெரிய
பல்லெல்லாம் வரிசையாய் சிரித்தது. உடனே ரிப்பன் அவிழ்த்துக் கொடுத்தாள் அவனிடம்.
வாங்கித் தடவிப் பார்த்தான். வழுவழுப்பாய் இருந்தது. அம்மா தலையில் ரிப்பன்
பார்த்ததில்லை. போனவுடன் அவளுக்கு கட்டிவிடவேண்டும் என்ற நெனப்பு வந்தது.
‘நெல்லிக்காவுக்கு தானே
வந்தே..பறிச்சுத் தரேன்...’ என்றவள், சுவரில் சாற்றியிருந்த தொரட்டி கம்பை
எடுத்து, சிறு கொப்பு ஒன்றை உலுக்கினாள். நெல்லிக்காய் கொட்டியது. அப்பு
ஒன்றிரெண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பிறகு, எல்லாவற்றையும் வேகம்
வேகமாய் எடுத்து டிரவுசர் பாக்கெட்டுக்குள் போட்டான். ‘கூடை கூடையா
மார்க்கெட்டுக்கு போகுது. ஆனா உனக்கு கொடுக்க உங்க ஆச்சிக்கு மனசில்ல..’ என்று
புலம்பிக் கொண்டிருந்தாள்.
‘நான் வரேன்க்கா...’ கிளம்பினான்
அப்பு.
‘இரு அப்பு...நா வாரேன், படலைத்
திறக்க...இல்லேன்னா ஆச்சி கண்டுபிடிச்சிரும்.’
கிழவி இன்னமும் வராந்தாவிலேயே
அமர்ந்திருந்தாள். படலின் அருகே வரும்போது, டிரவுசரின் ஒருபக்கப் பை கிழிந்து
நெல்லிக்காய்கள் சிமெண்ட் தரை எங்கும் தடதடத்து சிதறின. இருவரும் மூச்சு விட
மறந்தார்கள். ஆச்சி இருமினாள். அப்புவுக்கு அன்று மாதிரி அடித்துவிடுவாளோ என்று
பயமாக இருந்தது.
கிழவி மேல் ஒரு கண்ணும்
நெல்லிக்காய்களின் மேல் ஒரு கண்ணுமாக அவசரமாக விழுந்தவைகளைப் பொறுக்கி எடுத்தான்.
லலிதா படல் திறக்க, பறந்து ஓடிப்போனான். இவள் படபடக்கும் நெஞ்சுடன் மெதுவாக படலைச்
சாத்தினாள்.
‘என்ன சத்தம்
கேட்டது?..மறுபடியும் காத்தா?...அதுவும் டிரவுசர் போட்ட காத்தா....’ எனச் சொல்லி
சத்தம் போட்டு சிரித்தாள் கிழவி. லலிதாவுக்கு பதில் வரவில்லை.
வாழ்த்துக்கள்
ReplyDeleteமுழுவதும் படிக்கவேண்டுமெறால் என்ன செய்வது :)
பத்திரிக்கையில் வந்ததை படமாய் (image) கொடுத்திருக்கிறேன். அதை டவுன்லோட் செய்து அதில் இருப்பதிலும் படிக்கலாம்.
Deleteமூன்று படத்தின் கீழேயும் கதையை முழுதாய்க் கொடுத்திருக்கிறேன். அங்கும் படிக்கலாம்.
தந்தையின் கோபம் போல் சில வகை பாசம் புரியப்படாமலே வாழ்க்கை கழிந்து விடுகிறது!
ReplyDeleteபுரிப்படாத பாசம் பெரியவர்களுக்கு இடையில்தான் அதிகமாய் இருக்கிறது. காரணம் ஈகோவும் மௌனமும்
Deleteநல்ல நேசம்....
ReplyDeleteநன்றி எழில்
Deleteஆணவம் உட்பட அனைத்தும் ஒரு நாள் அடங்கும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஇதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-