நாங்கதாங்க பெண்கள் 1
இது புதியதரிசனம் இதழில் தொடராய்
தற்சமயம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது..
புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்
புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்
பெண்களைப் பற்றி எழுதுங்கன்னு என்கிட்டே சொல்லிட்டாங்க.
நான் யோசிக்கவே இல்லீங்க. கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன. சந்தோஷமா எழுத
ஆரம்பிச்சிட்டேன்.
ரெகுலரா ஆபீஸ் போகிற பெண்கள், நேரம் காலம்
இல்லாம கலைத்துறையில காவல்துறையில வேலை பார்க்கிற பெண்கள், வீட்டுல நேரம் போகாம
இருக்கிற பெண்கள், வயசான பாட்டிங்க, அவங்க பேத்திமார்கள் இப்படி எல்லோருக்கும்
சேர்த்துதான் எழுதப் போறேன்.
முதலில் நான் ஒரு பெண் என்பதில் எனக்கு நிறைய
பெருமை உண்டு. ஆனால் நிறைய பெண்கள் ஏண்டா பொண்ணா பிறந்தோம்னு வருத்தப்படுவாங்க.
வருத்தமே பட தேவையில்லை. யோசிச்சுப் பாருங்க, ஒரு வயசுக்கு மேலே ஆண்களுக்கு கலர்
கலரா சட்டை கூட போடமுடியாதுங்க. பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க, இந்த கிழவனுக்கு
இந்த வயசுல மைனர் மாதிரி ஆசையைப் பாருன்னு சொல்லி சொல்லியே, லைட்டா வெளிறிப் போன
கலர்ல சட்டையை போட வச்சிருவாங்க. ஆனா நாம வயசாகி காட்டன் புடவை கட்டினா கூட
அதுலேயும் கலர் கலராகதானே உலா வரோம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட அவங்களுக்கு
கிடைக்காத சுதந்திரம் நமக்கு கிடைச்சிருக்கே. அதனால் பெண்ணாய் பிறந்ததை என்ஜாய்
பண்ணுவோம்.
காலைல எழுந்துக்கிற நேரத்தில் இருந்தே, அது என்ன
எழுந்துக்கிற நேரத்தில் இருந்துன்னு மட்டும் சொல்றீங்க, தூங்குற நேரத்திலும்தான்னு
நீங்க சொல்றது கேட்குது...அந்த சப்ஜெக்ட்டுக்கு அப்புறம் வருவோம். காலையில்
எழுந்துக்கிற நேரத்தில் இருந்தே சந்தோஷமும் கவலையும் ஸ்டார்ட் ஆகிருதுங்க.
சந்தோஷம் என்னன்னா, சூடா நாமளே நமக்கு காபி
போட்டு குடிக்கிறது. அதில் வருத்தம் என்னன்னா, வீட்டில் இருக்கும்
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காபி ஒவ்வொரு ஸ்டைல்ல ஒவ்வொரு டைம்ல கலக்க
வேண்டியிருக்கிறதுதான். அப்புறம் எல்லோரையும் கத்தி கத்தி எழுப்பிவிடனும்.
அதுக்குத்தானே டானிக்கா காபி குடிக்கிறோம். சமைக்கணும், அழுக்கு துணி எல்லாம்
எடுத்து மிஷினுக்கு சாப்பிடக் கொடுக்கணும். அதுவும் பெரிய பசங்க இருந்தா ஜீன்ஸ்
துணியை எல்லாம் போராடி உருவணும், அப்புறம் நாம கிளம்பணும். இப்படி எத்தனையோ...
ஒரு நாள் காலைல இப்படி அரக்கபறக்க நான் வேலைப்
பார்த்துகிட்டு இருக்கும் போது, வாக்கிங் போய்க்கிட்டிருந்த கடைசி வீட்டு தோழி என்
வீட்டு கேட்டுக்கு முன்னாடி நின்னு, என் பெயரை ஏலம் விட்டுகிட்டு இருந்தா.
அவளை பற்றி முதல்ல சொல்லி ஆகணும். அவ தலையில்
இருந்து நாலு முடி உதிர்ந்திட்டா கூட பெரிதாக கவலைப்படுவா. ஒரே பட்டுச் சேலையை
ரெண்டு கல்யாணத்துக்கு கட்டிட்டா வேற சேலையே இல்லைன்னு அதுக்கும் கவலைப்பட்டு RMKV
க்கு போவா. ஆனா அவ சமைத்த சமையல் சரியா இல்லேன்னா கவலையேபட மாட்டா. அவ
வீட்டுக்காரர் அவரு அக்கா வீட்டுலே ஒரு தடவை தன் வீட்டுல ஒரு தடவைன்னு தினமும்
ரெண்டு சாப்பாடு சாப்பிடுவார். அவருக்கு சாப்பாட்டில அவ்வளவா விருப்பம்
கிடையாதுன்னு ஊர் முழுவதும் இவ சொல்லிக்கிட்டு அலைவா. எந்த விஷயத்தையும் கொஞ்ச
நாள்தான் கொண்டாடுவா. அப்புறம் தூர வீசிட்டு அடுத்த விஷயத்திற்கு போயிருவா.
இன்னைக்கும் அப்படிதான் ஏதாவது இருக்கும்ன்னு
நினைச்சேன். ‘அகி, நம்ம ஏரியாவில ஒரு பிட்னெஸ் சென்டர் திறந்திருக்காங்க.
கார்டியோ, ஏரோ, ஜிம், வெயிட் லிப்டிங்..’ அப்படி இப்படின்னு மூச்சிரைக்க
அடுக்கிகிட்டே போனா. அதில் சேர்ந்து எக்ஸ்சர்சைஸ் செய்து உடலை குறைக்க போவதாக உடனடி
சபதம் எடுத்தாள். இப்போது என்பது கிலோ இருக்கிற அவளை அறுபது கிலோ ரெண்டே மாதத்தில்
ஆக்குவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்களாம்.
ஐந்து அல்லது ஆறு குறையலாம், எப்படி இருபது
குறையும் என்று கேட்டதற்கு, அதுதானே ஸ்பெஷல் இவங்ககிட்டே, அதுக்கு தானே இருபத்திமூவாயிரம்
ரூபா வாங்குறாங்க. தினமும் எக்ஸ்சர்சைஸ் முடித்து போகும்போது ஒரு ஸ்பெஷல் டீ வேற
தராங்க என்றாள். அந்த ரூபாய்க்கு பிரித்தல் கணக்கு வேறு சொன்னா. என்ன சொன்னாலும்
இவ கேட்க மாட்டான்னு தெரியும். பாவம் அவ வீட்டுக்காரர்ன்னு நெனைச்சிக்கிட்டு அவ சொன்னதைக்
கேட்டுகிட்டேன்.
அங்கு சேர்ந்ததில் இருந்து என்னைப் பார்க்கும்
சமயமெல்லாம் நான் மெலிஞ்சிட்டேனான்னு சொல்லுன்னு டார்ச்சர் வேற. அக்கம் பக்கம்
இருக்கும் பெண்களை எல்லாம் சேர சொல்லி அந்த சென்ட்டருக்கு propaganda secretary ஆகவே
மாறிட்டா.
ஒரு இருபது நாள்தான் தாக்கு பிடிச்சா.
அவ்வளவுதான் வாக்கிங்ல கூட ஆளைக் காணோம். போன்ல பிடிச்சா, வா உடனே என்றாள். போனா,
அங்கே கட்டிலில் படுத்திருந்தாள். ஒரே புலம்பல். ‘என்ன டீயோ தெரியல. வயிற்றுக்கு
ஒத்துக்கல. அப்பவே நினைச்சேன், எப்படி இப்படி இவ்வளவு சீக்கிரம் மெலிய
முடியும்ன்னு’ என்று நான் கேட்ட கேள்வியையே என்கிட்டே சொன்னாள். பரவாயில்லை
விடுன்னு சொல்லிட்டுவந்து ஐந்து நாள் ஆகல, கேக் செய்ய சொல்லித் தராங்க வரியா என்ற
அடுத்த என்டேர்டைன்மென்ட்டுக்கு தயாராகிட்டா. இப்படிதாங்க நிறைய பேர் இருக்காங்க.
பெண்களைப் பற்றி இன்னும் நிறைய எழுதிகிட்டே இருக்கலாம்.
அவ்வளவு அதிசயமானவர்கள். இன்னும் பேசுவோம்...
ஆரம்பமே ரொம்ப இன்ரெஸ்டிங்காக இருக்கிறது
ReplyDeleteநாங்கதாங்க பெண்கள் 1 = Ahila Puhal - ரெகுலரா ஆபீஸ் போகிற பெண்கள், நேரம் காலம் இல்லாம கலைத்துறையில காவல்துறையில வேலை பார்க்கிற பெண்கள், வீட்டுல நேரம் போகாம இருக்கிற பெண்கள், வயசான பாட்டிங்க, அவங்க பேத்திமார்கள் இப்படி எல்லோருக்கும் சேர்த்துதான் எழுதப் போறேன். = அருமையாக அன்றாட நிகழ்வை எழுதுகிறார் திருமதி Ahila Puhal - நல்ல துவக்கம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திருமதி Ahila Puhal = தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி அய்யா உங்களின் பாராட்டு என்னை இன்னும் அதிகமாய் உற்சாகப்படுத்தும்..
Deleteஅடுத்த என்டேர்டைன்மென்ட்டுக்கு தயாராகிட்டா. இப்படிதாங்க நிறைய பேர் இருக்காங்க.
ReplyDeleteஏங்க இந்த மூளை கொஞ்சம் வளர்ற மாதிரி ஏதாவது வகுப்பு எடுக்கறாங்களா?
ஹாஹா...விசாரிக்கணும் ராஜி ..
Deleteதொடருங்கள்... தொடர்கிறோம்...
ReplyDeleteஅருமை.
நன்றி குமார்..
Deleteபெண்களின் இயல்பை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்க..
ReplyDeleteரொம்ப நன்றிங்க
Deleteஅடடா, பெண்கள் பெருமைகளுடன், சிறுமைகளையும் சொல்லி நகையாடி நடுநிலையாக எழுதுவதால் உங்க கட்டுரை சிறப்படைகிறது, அகிலா! :)
ReplyDelete