Skip to main content

நூல் மதிப்புரை : பசுமை வளையம்

நூல் : பசுமை வளையம்
ஆசிரியர் : ஆட்டனத்தி என்கிற தண்டபாணி  

(27.4.2014 அன்று நடைபெற்ற கோவை இலக்கிய சந்திப்பில் 
இந்த நூலைப் பற்றிய என் மதிப்புரை)



நூல் மதிப்புரை :

காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப் பாட்டி கதைசொல்லும் மரபு உண்டு.

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும்.

பெருங்கதைக்கும் சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்.
"சிறுகதை வாழ்க்கையின் சாரம் என்றால் நாவல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி.. வாழ்க்கையின் சிக்கல்களை, அதன் உயர்வை, அதன்சிறுமைகளை, உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில், அவற்றின் குண விஸ்தாரத்துடன் சிருஷ்டிப்பதுதான் நாவல், நாவலுக்குக் கால எல்லை கிடையாது. சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் இவற்றின் நிகழ்ச்சியை, மனோதர்மத்தால், சிருஷ்யின் மேதை குன்றாமல் கற்பனை செய்வதுதான் நாவல்". என்று நாவலைப்பற்றி எழுதியிருக்கின்றார். 

நமது நாட்டில் வழங்கும் பஞ்சதந்திரக் கதை, விக்கிரமாதித்தன் கதை எல்லாமே சிறுகதைத் தொகுதியென்று சொல்லலாம்.

இந்த பசுமை வளையம் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் ஆட்டனத்தி அவர்கள் வனத்துறையில் பணியாற்றியவர். இந்த மாதிரி இந்த துறையில் இருப்பவர்கள் எல்லோருக்குமே அனுபவங்கள் இருக்கும். ஆனாலும் இவரைப்போல் சிலருக்கே எழுத்து வருகிறது. அவற்றை பகிரும் எண்ணம் அவருக்கும், அதை படிக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கிறது.  

இவர் வனத்தின் வாசத்திலேயே வாழ்ந்திருக்கிறார் என்பது இந்த சிறுகதைகளின் மூலம் தெரிகிறது. மரங்களின் மணத்திலேயே பெயர் சொல்லிவிடுவார் போலும். அத்தனை நுணுக்கமாக விவரங்களைச் இந்த கதைகளில் விட்டுச் செல்கிறார். வன வாழ்க்கையின் அதிசயமான நிகழ்வுகளை கதையாக்கி இருக்கிறார் இந்த நூலில்.

இயற்கையோடு இணைந்து, யானையின் மனதிற்குள் நுழைந்து பேசுகிறார். புலிகளின் பல்ஸ் பிடித்து பார்த்திருக்கிறார். நம்மையும் விலங்குகளோடு வாழவைத்திருக்கிறார்.


இனி கதைகளை அலசுவோம்

பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு. இராமாயணத்திலே பல சிறுகதைகள் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலைகளில் பல சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் இவைகள் பெருங்கதைகளோடு தொடர்பு கொண்டவை. இவற்றைக் கிளைக்கதைகள் என்பர்; இத்தகைய கிளைக் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை -அல்லது கருத்தை வலியுறுத்தவே கூறப்பட்டுள்ளன. இந்த பசுமைவளையம் சிறுகதை தொகுப்பிலும் அப்படிதான்.

இந்த தொகுப்பில், மொத்தமாய் 14 கதைகள்.
வட இந்திய பயணம் சார்ந்த கதைகளாக இரண்டு இருக்கிறது. இரண்டுமே ஒரே மாதிரியானவை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் உணர்வுகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். படிக்கும் கட்டத்தில் கதையின் போக்கு ஒரே மாதிரியான உணர்வையே கொடுத்தாலும் முடிவுகளை மட்டும் மாற்றி படைத்திருக்கிறார். நன்றாக உள்ளது.

இலுப்பைப்பூக்கள் என்று ஒரு கதை.
அதில் மிகவும் ஏழையாய் ஊருக்குள் நுழையும் ஓர் அர்ச்சகர், யானைகளின் தொல்லைகளை ஒழிக்க பூசை செய்ய வேண்டி அர்ச்சகருக்காக காத்திருக்கும் அந்த ஊருக்கு வந்து சேருகிறார். அங்கு அவரின் கீழ் பணியாற்றும் கீழ்ஜாதி மலைப்பெண்ணை பயன்படுத்திக் கொள்கிறார். அவளும் இணங்கிதான். அவளை திருமணம் செய்ய சொல்லும் ஊரின் முடிவை ஏற்க பிடிக்காமல் ஓர் இரவில் ஊரைவிட்டு தப்பிக்கிறார். ஆனால் யானையின் காலில் மிதிப்பட்டு இறக்கிறார். கதையின் முடிவு நமக்கு, ‘தவறு செய்தால் தண்டனை கிடைக்கும்’ என்கிற நீதியை விட்டுச் செல்கிறது.

பெரிதினும் பெரிது கேள் என்னும் இன்னொரு கதையில் இறக்கும் தருவாயில் பலமிழந்து இருக்கும் ஒரு யானைக்கு  உணவு கொடுத்து அதை கும்கி யானையாக பயிற்சி கொடுக்க செய்யும் வனத்துறை அதிகாரியிடம் அந்த யானைக்கு இருக்கும் நன்றியை, உணவுக்காக அது அவர் வீட்டின் கதவை தட்டுவதன் மூலமும், அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் மேல் தும்பிக்கை வைத்து தடவுவதிலும் வெளிப்படுத்துகிறது. இதிலும் நன்றியுணர்வு, அன்பு என்னும் நீதியை அழகாய் வலியுறுத்துகிறார்.

ஐந்தாம் அறிவு என்னும் இன்னொரு கதையில், கர்ப்பமாயிருக்கும் பெண் யானையின் பிளிறலில் என்னவாயிற்றோ என்று எண்ணி அதை தேடிவரும் ஆண் யானையின் பதைப்பை உணர்வு பொங்க வார்த்தைகளில் கொட்டியிருக்கிறார். ஆண் யானை சேற்றுக்குள் மாட்டிவிடுவதும் உதவிக்கு வரும் வன உழியர்களை நெருங்கவிடாமல் அதை சுற்றி மற்ற யானைகள் இருப்பதும் இறுதியில் அது இறப்பதுவுமாக சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அதனுடன் அதே போல் இணை கோடுகளாய் பயணிக்கும் அடிபட்ட ஒரு வனத்துறை அதிகாரியின் மருமகனின் கதையையும் சொல்லிச் செல்கிறார்.

இதே போல் இன்னும் இரண்டு கதைகளிலும் ஒப்பீடு கதைகளை (comparative parallel stories) சொல்லியிருக்கிறார். தேவையில்லை என்பது என் கருத்து. கதையின் தளம் இயற்கை மட்டுமாக இருந்திருந்தால் அழகாய் இருந்திருக்கும். விலங்கின் கதையை சொல்லும் பொழுது மனிதனுக்கும் சிறு வேறுபாடுகளுடன் அது பொருந்தும். அதை ஆசிரியர் சொல்ல வேண்டியதில்லை. படிக்கும் வாசகன் தானாக முடிவு பண்ணவேண்டும். அதுதான் ஒரு சிறுகதை படிக்கும் வாசகனுக்கு படைப்பாளி விட்டுச்செல்லும் வார்த்தைகள். வாசகன் அதை முற்றுப் பெறச்செய்வான். இனி எழுதும் கதைகளில் ஆசிரியர் இதை கவனித்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக அமையும் தொகுப்பு.
  
விலங்கொடு மக்கள் என்னும் இன்னொரு கதையில், தான் ஈன்ற ஆண்குட்டியை காணாமல் தேடும் தாய்புலியைப் பற்றி எழுதியிருக்கிறார். நம் இனத்தில் பெண்பிள்ளை பிறந்தால் அதை கொல்லும் அதிகாரத்தை ஆண்வர்க்கம் எடுத்துக் கொள்வதைப்போல், ஆண் புலிகள் தனக்கு பிறக்கும் ஆண் குட்டிகளை வெளியேற்றும் வேலையைச் செய்யும் என்பதை சொல்லுகிறார். அதனால் அந்த தாய்புலிக்கு ஏற்படும் முதல் சந்தேகமே ஆண்புலி மேல்தான். அந்த உணர்வுகளை நாமும் உணரும்படி எழுதியிருக்கிறார்.   

இவருடைய எல்லா கதையின் இறுதியிலும் ஏதோவொரு அறம் வலியுறுத்தப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தையும் கூட ஒரு கதையில் வலியுறுத்துகிறார். அதை தனியாய் விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன். இவருடைய எழுத்துக்கள் மிக சாதாரணமானவை. எழுத்துக்களில் இலக்கியநயம் சற்று குறைந்திருந்த போதிலும், அலங்காரங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாய் இருக்கிறது. உண்மையும் வார்த்தைகளில் வீரியமும் இருக்கிறது. கதை சொல்லும் நேர்த்தி புலப்படுகிறது.

கதை நடையைப் பற்றி என்னை உறுத்திய ஒன்றை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சில இடங்களில், characterization அதாவது கதைப்பாத்திரங்களை விவரிக்கும் போது, தன்னிலையில் ஆரம்பித்து, படர்க்கை இடம் சார்ந்து பயணித்திருக்கிறார். உதாரணத்துக்கு, விலங்கொடு மக்கள் கதையில் புலியின் மனபுலம்பலில் தொடங்கி, சட்டென்று புங்கனோடை பள்ளம் விவரித்து, புலியை ஒரு கதாபாத்திரமாக படர்க்கையில் விவரித்துள்ளார்.

அதுபோல் சாய் கால் டாக்ஸி (பங்காளிதனம் என்னும் கதையில்) , கவிராஜ் பேக்டிராப்ஸ் (பசவு என்னும் கதையில்)  போன்ற தனிப்பட்ட நிறுவனங்களின் பெயர் குறிக்கும் வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. 
      

சரி, என்கிட்டே இந்த நூலை கொடுத்து பேச சொல்லிட்டாங்க. கண்டிப்பா இதுலே என்னை பாதித்த ஒரு கதையை ஆசிரியரிடம் விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன்.

விறகுகளுக்குள்ளும் சில வீணைகள்  
இந்த கதையின் சுருக்கம் என்னவென்றால், ஒரு கிராமத்து பெண், அவளின் குடிகார கணவன், பிறந்த மூன்றில் நிலைத்திருக்கும் ஒரு வயது குழந்தை. இதற்கிடையில் அசலூரில் இருந்து வந்து இங்கு வேலைச் செய்யும் ஒரு மனிதர். அவரின் தனிமையின் ஏக்கத்தை இவளிடம் ஒருவழி பாதையில் இருவரும் தனித்து வரும் சமயம் கூறுகிறார். அதன் பின் இவளும் ஒரு நாள் அவரை ஓர் இடத்திற்கு வரசொல்கிறாள். இருவருக்குளும் சந்திப்புக்கு தேவையான உணர்வுகள் கொட்டியிருக்கின்றன.

சந்திக்கும் சமயம், தன் இரு குழந்தைகளின் இறப்பையும் சொல்லி, மிஞ்சியிருக்கும் குழந்தை தாய் பால் மூலமே உயிர் பிழைக்கிறது என்றும் சொல்லி சீக்கிரம் போக வேண்டும் என்கிறாள். குழந்தைகள் குறித்த அந்த வார்த்தைகள் அவரை மாற்றிவிடுகின்றன. இருவரும் எதிர் எதிர் திசைகளில் பிரிகிறார்கள்.

கதையை மிக நேர்த்தியான எழுத்துக்களில் கொண்டு சென்றிருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எடுத்துக் கொண்ட கதையின் கருவும் ஓகே தான்.

சிறு நெருடல் மட்டும் எனக்கு. 
அந்த மனிதர் தன் ஏக்கத்தை சொன்ன பிறகு அவளின் உணர்வுகளை ஆசிரியர் அங்கங்கே சொல்லுகிறார். அதில் அந்த பெண் இவரை நினைத்து மருகுவதும் இவரின் நினைவாகவே இருப்பதுமாக சொல்லியிருக்கிறார். அந்த மனிதரை காணும் பொழுதெல்லாம் இருவரும் கண்ணிலேயே பேசிக்கொள்வதும் நடப்பதாக ஆசிரியர் கூறுகிறார். இதிலிருந்து ஆசிரியர் அவளுக்குள்ளும் ஆசைகள் ஒளிந்திருப்பதை சொல்லிவிட்டார்.

எனக்கென்ன சந்தேகம் என்றால், சந்திக்கும் சமயம் அவள் கூறிய குழந்தை பற்றிய விஷயம் சீக்கிரம் போகவேண்டும் என்பதே. இதில் இவர் மனம் மாறியது சரியானதே. 

வளின் மனதில் ஆசையை கிளரச் செய்துவிட்டு இந்த மனிதர் என்ன நினைக்கிறார் என்பதை ஆசிரியர், ‘இவள் எதைப் புரிய வைக்க இங்கே வந்தாளோ அதையே தானும் புரிந்துக்கொண்டதாய் நினைத்தவனின் மனப்பொய்கையில் மகிழ்ச்சிப் பூக்கள் நிரம்பி வழிந்தன. ‘ என்று கூறுகிறார்.. அவள் நினைத்துக் கொண்டிருந்ததை வேறு விதமாக அல்லவா ஆசிரியர் நம்முன் காட்டியிருக்கிறார். இப்போது அந்த மனிதரின் நினைப்பில் மட்டும் அவள் எப்படி வேறு விதமாக நினைக்கமுடியும்?...

அதுவும் கதையின் இறுதி வரி , ‘எரியும் விறகுகளாய் வந்தவர்கள் இப்போது வீணைகளாய்..’ என்றும் முடித்திருக்கிறார்.

என் கேள்வி, பெண்ணின் மனதை எவ்வளவு எளிதாய் கலைத்துவிட்டு, முதலில் வசியப்படுத்தும் முயற்சியிலும் தான் நினைப்பதையே அவளையும் நினைக்க வைத்து, மீண்டும் வேண்டாம் என்பதையும் தான் நினைப்பதையே அந்த பெண்ணையும் நினைக்க வைத்து தன் எண்ணங்களைப் பெண்ணின் மேல் திணித்திருப்பது கேள்விக்குரியது. பெண்ணின் உணர்வுகளுக்கு நீங்கள் எழுதும் எழுத்துக்களில் கூட சற்று மதிப்பு கொடுங்கள் என்பதே என் கருத்து.

தனி மனித ஒழுக்கத்தை போற்றவேண்டும் என்பதில் எனக்கும் எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனாலும் இங்கு பெண்ணின் உணர்வுகளை ஆணை வைத்தே தீர்மானிப்பது என்பதை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. அவளுக்கென்று ஆசாபாசங்கள் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளுதல் அவசியம். அதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் கதையைக் கொண்டு சென்றிருக்கலாம். ஆசிரியர் முடிந்தால் இதற்கு பதில் சொல்லலாம்.   

மற்றப்படி நீதியின் பக்கமே நிற்கிறது நூல். இப்போது உள்ள சிறு கதைகளில் மாறுப்பட்ட சிந்தனைகளும் நம் கலாச்சாரத்தில் இல்லாத முடிவுகளும்தானே அதிகமாய் காணப்படுகிறது. அதை மாற்றி நாம் ஆத்திசூடியில் படித்ததை எல்லாம் கதைகளில் உணரவைத்து நமக்கு ஒரு புத்துணர்வு உண்டாக்கியிருக்கிறார். உண்மையையும் அன்பையும் மீண்டும் இந்த உலகிற்கு வாழும் ஆதாரமாக கொடுத்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதைகள் பற்றி சொல்லும்போது, "கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை" என்கிறார்.

இவருடைய கதைகளை படித்தபிறகு அன்பின் சிந்தனைகள் அதிமாகியதாகவே எனக்கு தோன்றியது. ஆசிரியர் இன்னும் நிறைய அனுபவங்களை எழுதவேண்டும். படிக்க வாசகர்களும் தயாராக இருக்கிறோம்.   


நன்றி...வணக்கம்...

Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...