Skip to main content

Posts

Showing posts from September 29, 2013

சாளரத்தின் பதில்...

அசைக்கவே முடியாத வழித்தடங்களாய்    மாறிப்போன மரத்தின்  வேர்கள்,  விழுதுகளை சரி நிறுத்தி  தாங்கிக் கொண்டன இலைகளின் பாரத்தை...  கிளைவிட்டு அடைத்து மெழுக ஒரு நீலவானமே தேவைப்பட்டது... மேலே நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் சொட்டாய் வழிந்த நீர்த்துளிகள்  நிலாக்களைக் காட்டிச் சென்றன...  தொட்டு வீசிய வாடைக் காற்று   சட்டென்று திறந்துவிட்டது சாளரத்தின் பாதியை... கருப்பின் நிழலை வறுமையாக்கி வானின் வெளிச்சப் பூக்களை  உள் தெளித்து  முத்தமிட்டுக் கொண்டிருந்தது,  அறை முழுவதும்  ஊமையாய் படர்ந்திருந்த இருளை...     இன்னும்  மூடுவதும் திறப்பதுவுமாக காற்றின் அசைவுக்கு நடந்துக் கொண்டேயிருக்கிறது  சாளரத்தின் பதில்...  

ஜன்னலோர இருக்கை பேருந்தில்...

ஜன்னலோர இருக்கை பேருந்தில்...  நிறுத்தம் ஒன்றில்  தொப்பை சுமந்த கணவனும்  செப்புச் சிலையாய் அவன் மனைவியும்  சம்பந்தமேயில்லாமல் பேருந்தின் உள் ஒலித்துக் கொண்டிருந்தது,  சிந்திய வெண்மணி  சிப்பியில் முத்தாச்சு என்று... வைசியாள் வீதியின் வளைவில்  நெருங்கி கடக்கும் பேருந்தில்  சிறு மார்பு நசுங்க  பட்டுசட்டையணிந்த பெண்குழந்தையும்  அருகாய் கண்களை உறுத்திய   துருக் கோர்த்த ஜன்னல் கம்பிகளும்...  செல்வபுரத்து நீர்நிலை தொட்ட ஈரக் காற்று  ஏதோ ஒரு பறவையின் மணத்துடன்  நாசியை நனைக்க... வெள்ளையடிக்கப்பட்ட மூடுகளுடன் தென்னைகள்  வரிசையாய் தோப்புக்குள்  பண்ணைக்காரனின் பவிசைக் காட்டியபடி நிற்க... கண்ணயர விடாமல் கடக்கும் காட்சிகளைக்  கவிதை மறந்து காற்றாய்ச் சுவாசிக்க இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு  நிறுத்தத்தில் தரைத் தொட்டேன்  நான் மட்டுமாக...