Skip to main content

Posts

Showing posts from September 15, 2013

வளையலின் வாசனையாய்...

நெளிந்துப் போயிருந்தது அந்த வளையல்  கைகள் இறுக்கி, கழட்டி  நெளிவு நிமிர்த்த நினைக்க  நினைவில் வந்து போனாள் என் தாய்...  அவளின் கைப்பார்த்த வளையல் இது  அப்போதே சற்று நெளிந்துதான் இருந்தது    இத்தனை வருடங்களாகியும் அமர்ந்திருக்கிறது  என் மணிக்கட்டில் அலங்காரமாய்...  நிமிர்த்தினால்  வளைவு வடிவாகும்...   விட்டுவிட்டால்  தாயின் பிடிப்பு நிஜமாகும்...  விட்டுவிட்டேன்  வளையலின் வாசனையாய் என்னுடனே   அவள் இருந்துவிட்டு போகட்டுமென்று...

தீண்டும் நாகமாய் மனிதன்...

காலையின் காபி வேளையில் கண்களின் ஓரமாய் நெளியும் அசைவுகள்... முகம் திருப்பினால் முற்றத்தின் கோடியில் முழங்கையளவு சிறு நாகம்... காலடிகளின் நெருங்கும் சத்தத்திற்கு ஒளிய இடம் தேடியது சீண்டிய கொம்பிற்கு சீற்றமாய் முகம் விரித்து பதில் சொல்லியது மூர்க்கம் தெறித்தது அதன் முகப்பில் இருந்தும், போராட்டம் தோற்று வீழ்ந்துவிட்டது... அடித்து வீசப்பட்ட அதன் அமைதிக்கு அதன் அன்னையிடம் யார் பதில் சொல்வது? தன் வட்டத்திற்குள் அது வந்ததாக மனிதன் பேசிக் கொண்டான்...   அதன் வசிப்பிடம் நோக்கி இவன் நகர்த்துகிறான்   தன் நகரின் விரிவுக்கோட்டை...   ஊராட்சிகளை பேரூராட்சிகளை மாநாகராட்சியாக்கி மகிழ்கிறான்... அவர்களின் கோட்டாட்சிக்கும் எல்லைக் காவலாய் ஐயனார் இருப்பார் என்பதை ஏற்க மறுக்கிறான் இவன்... அலெக்ஸான்டர் காலம் தொட்டே எல்லை ஆக்ரமிக்கும் இவனின் பசி அடங்கியபாடில்லை... இயற்கையின் நிலைப்பாடுகளைச் சமன் செய்ய   வாயில்லா இவர்களையாவது விட்டுச் செல் மனிதா...