Skip to main content

Posts

Showing posts from August 11, 2013

இனிய சுதந்திரம்...

பள்ளி சென்ற காலத்திலிருந்து எத்தனையோ சுதந்திர தினங்கள் கண்முன்னே கழிந்தன... முதிர்வில்லாத வயதில் இந்த தினம் இனிப்பின் மறுவடிவமாய்... சற்று அறிவு தெளிந்த நிலையில் நம் சுதந்திரம் என்று நெஞ்சை நிமிர்த்திய ஞாபகம்... சமூகத்தை உணரும் இந்த வயதில் அதன் முகம் மனிதர்களின் முகமாகிப் போனது... வாதனைகளின் பாதைதானே வாழ்க்கை என்று தினம் கழிக்கும் அநேகம் பேருக்கும் கூட இன்று சுதந்திர தினம் தான் நேற்று, நாளை போல் இன்றும் ஒரு நாள் தான்... வறுமை, இனம், சாதி பிரிவு ஒழித்து பாலின வன்முறைகளைக் கொளுத்தி சமூகம் உயர்த்தி சுதந்திரத்தை அர்த்தப்படுத்தினால்தான் இன்றைய நாளும் சுதந்திரமாகும்... செய்வோம்... சுதந்திரதின வாழ்த்துக்கள்... ~ அகிலா...

கடந்த காலத்தின் மீள்வாய்...

கடந்த காலத்தின் மீள்வாய் ஏதோ ஓன்று நடந்தேவிடுகிறது... பூட்டிட்டுக் கொண்டு சுவற்றின் பொந்துத் தேடி அதனுள் ஒட்டியிருந்தாலும் சாளரம் திறந்து வந்து இழுத்தே சென்றுவிடுகிறது... பள்ளத்தாக்கின் வாசலில் நிறுத்தி உள்ளே வருகிறாயா என்கிறது பிடி விலக்கி முகடு தொட நினைத்து ஓடும் பயணத்தின் வெளியை மேகமாய்த் தழுவி இன்னுமாய் சலனப்படுத்துகிறது... அதன் சுவாசத்தில் நான்தான் நீ என்கிறது... ஆட்கொண்டு விட்டு, மமதையாய், ‘’இருந்துக் கொள்’ என்று விட்டுச் செல்கிறது... கண்ணீரின் கழுவலில் சுவற்றின் பொந்துக்கே திரும்ப நேருகிறது... கடந்த காலத்தின் மீள்வாய் ஏதோ ஓன்று நடந்தே ஆகிறது...   

பாட்டி...

ஊருக்கு கிளம்பும்  தன் தங்கைகள் நாத்தனார்கள்  மகள்கள் மருமகள்கள் பேத்திகள் ஆகியோருக்கு அடுக்கியிருப்பாள்  முறுக்கு முதல் ஊறுகாய் ஜாடி வரை...  தலை சாய்க்கும் இடம் மட்டும்  எண்ணெயாய்ப் போன வெள்ளைச் சுவற்றில்  சாய்வாய்க் கால் நீட்டி அமர்ந்திருக்கும் அவளின்  மார்பு முட்டிச் சாயும் என்னை அணைக்கும்  அவளின் சேலை முழுவதும்  வாசமாய் அடுப்பின் புகை...