உதிர்ந்து போன குவளைப் பூக்களின் வண்ணம் உதிரா இதழ்களும் காய்ந்து போன இலைச் சருகுகளும் புளியங்காய்களும் உடைந்த குச்சிகளும் மனிதர்கள் விதைத்துவிட்டு போன குப்பைகளும் குடியிருப்பின் சாலை முழுவதும் அவனின் வருகைக்காக.... இரு கைகளுமே நீண்டது போல் நீளமான துடைப்பங்களை வைத்து குப்பைகளைக் குவிக்க அவன் செய்யும் வித்தைகள்... . குறுகலான பாதையில் நேர்க்கோட்டிலும் பரந்த இடங்களில் வலது இடது கைகளை குறுக்கும் நெடுக்குமாக மாற்றி அவை இடையில் மாட்டிக்கொள்ளும் சாத்தியக்கூறுகளை நம்முன் வைத்து பின் அதை பொய்யாக்கி சூரியனின் வெளிச்சத் துண்டுகளை விடுத்து மற்றவற்றை கூட்டிச் செல்லும் அவற்றின் லாவகம் ஒரு அதிசயம்தான்.... சாலையின் புழுதிகளும் கூட இனி அவனின் வருகைக்காக...