நம் அம்மா காலத்தில் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் எல்லாம் கிடையாது. அண்ணாச்சி கடையில் லிஸ்ட் கொடுத்தால் சாமானெல்லாம் வீடு தேடி வரும்.
நாமெல்லாம் சூப்பர் மார்க்கெட் தேடி போய் வாங்கினாலும் தேவையற்றதை வாங்காமல் இருந்தோம். ஆனால் இப்போதைய இளம் தாய்மார்களின் நிலையே வேறு. கண்ணில் பட்டதை எல்லாம் வீட்டுக்கு வாங்கி வந்துவிடுகிறார்கள்.
ஆனால் குழந்தைகள் ஓன்று கேட்டால் மறுக்கும் குணம் எங்கிருந்து வருகிறது என்பது மட்டும் புரியவில்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஓல்ட் மாடல் ஆகவே இருக்காங்க.
நேற்று நீல்கிரிஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண்குழந்தை அவளின் அம்மாவுடனும் தாத்தாவுடனும் வந்திருந்தாள். ஐந்து வயதிருக்கும் அந்த சுட்டிக்கு.
பார்க்கும் சாக்லேட் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தது. அவளின் அம்மாவோ எடுக்காதேன்னு சொல்லி சொல்லி சலிச்சே போயிட்டா. கடைசியில் ஒரு குழந்தைக்கு ஒரு சாக்லேட் தான் எடுக்கணுமாம் இந்த கடையில் என்றாள். அவ்வளவுதான். அதன் முகமே மாறிவிட்டது.
ஒன்றை எடுப்பதும் இன்னொன்றை பார்த்துவிட்டால் அதை வைத்துவிட்டு அடுத்ததை எடுப்பதுமாக தடுமாறிக் கொண்டிருந்தது.
அவள் அம்மாவோ இதை உணராமல் பில் போட போக இதுவும் அங்கே போய் அந்த பில் போடும் பெண்ணிடம் ஒரு குழந்தைக்கு ஒண்ணுதானா ன்னு அப்பாவியா கேட்க அந்த பெண்ணை பேசவிடாமல் அந்த அம்மாவே அதை உறுதிப்படுத்த அதன் வாடிய முகம் பார்த்து மனம் காயப்பட்டுப் போனது.
ஷாம்பூவில் இருந்து பரோட்டா போன்ற frozen foods வரை வாங்கி குவிக்கும் தாய்மார்களுக்கு அந்த குழந்தையின் முகமோ மனப் போராட்டமோ தெரிந்திருக்க நியாயமில்லைதான்...
குழந்தைகள் மட்டுமல்லாமல் நீங்களும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம். தப்பில்லை.
குழந்தைக்கு பார்ப்பதையெல்லாம் எல்லாவற்றையும் வாங்கும் ஆசையை குறைக்கக் கற்றுக் கொடுக்கலாம். அதுவும் தப்பில்லை.
அதையும் மீறி அதன் பூப்போன்ற மனதை கொஞ்சம் நினைத்து பார்த்தால் தப்பேயில்லை...அது வாடாமல் பார்த்துக் கொள்வோம்...
சின்ன வயசில் நிறைவேறாத ஆசைக்காக பிற்காலத்தில் அதுவும் உங்களை மாதிரி கண்ணில் படுவதை எல்லாம் வாங்கிக் குவிக்கும்...
ஷாப்பிங் அழைத்துச் செல்லும் முன் :
குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிற்கு வெளியே சட்டை மாட்டி சமர்த்தாய் வைத்திருப்பது அல்ல. வீட்டுக்கு உள்ளே சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து அதை அது தானாகவே வெளி உலகில் கடைபிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- கடைக்கு அழைத்துச் செல்லும் முன் எத்தனை சாக்லேட் வேண்டும் அவர்களுக்கு என்றெல்லாம் அளவிட்டு கூட்டிச் செல்லாதீர்கள்.
- முதலில் அவர்களுக்கும் என்ன தேவை என்று பார்த்து எடுத்துக் கொடுங்கள்.
- இல்லையென்றால் அவர்களின் தேவைகளை ஒரு லிஸ்ட் எழுதச் சொல்லி அதை அவர்களையே எடுக்கச் சொல்லுங்கள்.
- அதற்கு முன் நாமும் என்ன வாங்க வேண்டும் என்று நம் கையில் ஒரு லிஸ்ட்டுடன் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
- ஏதாவது ஒரு பொருளுக்காக குழந்தை அடம் பிடிக்கிறது என்றால், தவறு நம் மீதே குழந்தை மீதல்ல.
- நம்மைவிட அதிகமாய் தான் கேள்விக் கேட்பார்கள். பதில் சொல்ல நாம் சற்று அறிவையும் பொறுமையையும் வளர்த்துக் கொள்வோம்.
அவர்கள் பள்ளிக்குப் போனாலும் கடைகளுக்கு போனாலும் விளையாட போனாலும் நல்ல குணம் மிக்கவர்களாக விளங்க வேண்டும். நம் குழந்தைகள் நம் கையில்தான் நல்லவர்கள் ஆகிறார்கள். ஏக்கங்களை சுமக்கவிடாமல் அவர்களுக்கு வாழ்க்கையை அழகாக்கிக் கொடுங்கள்...
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
ReplyDeleteஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
உண்மைதான்...நன்றி குமார்...
Deleteபூப்போன்ற மனதை கொஞ்சம் நினைத்து பார்த்தால் தப்பேயில்லை...அது வாடாமல் பார்த்துக் கொள்வோம்..
ReplyDeleteவாசிப்பிற்கும் பதிவிற்கும் நன்றி தோழி...
Deleteநாம் தான் முதலில் குழந்தைகளின் ரோல் மாடல்
ReplyDeleteநம்மைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறது...நன்றி எழில்...
Deleteஅனைத்து பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் நன்றி...
Delete