Skip to main content

கௌரவம் - ஒர் அலசல்...





Cast & Crew

Director: Radha Mohan
Producer: Prakash Raj
Music Director: Thaman
Lyricst: Karkky
Allu Sirish, Yami Gautham, Prakash Raj, Nassar 


கௌரவம் படம் பார்த்து ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. சென்ற வாரம் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இலக்கிய வட்டத்தில் அதன் விமர்சனம் வந்தபோது கூட நான் அதிகமாய் பேசவில்லை.  


காரணம் ஒன்றுதான்...மனதில் அந்த படத்தின் தாக்கம் சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த படம் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. 


கௌரவக் கொலைகள்...

இந்த கௌரவக் கொலைகள் டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் நிறைய நடப்பதை நாலைந்து மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் பெரிதுப்படுத்தி இருந்தன. லண்டனில் வாழும் இந்தியர்கள் கூட வீட்டை விட்டு காதலனுடன் போகும் தன் வீட்டு பெண்களை டாக்ஸி ஓட்டுனர்களை வைத்து கண்டுபிடித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள கொலைகள் செய்வதாக படித்திருக்கிறேன். 


கதை...

இதை தான் ராதாமோகன் படமாக எடுத்திருக்கிறார். இளைஞன் ஒருவன் தற்செயலாக தன் நண்பனின் ஊரின் வழியாக பயணிக்க, பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவனை தேட, அந்த தேடல் முடியும் இடம் கௌரவக் கொலையாக இருக்கிறது. 


அவனின் நண்பன் காதலித்தப் பெண் உயர் சாதியை சேர்ந்தவள். கௌரவம் பார்த்த அவளின் வீட்டு ஆண்கள் அவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுகிறார்கள்...அதை கதாநாயகனும் அவன் நண்பர்களும் கண்டுபிடிக்கிறார்கள். மீடியா, சமூக வலைதளங்கள் என்று அனைத்தையும் உபயோகித்து உடன் படித்த நண்பர்களை வரவழைத்து போராடி கடைசியில் கொலையை கண்டுப்பிடிக்கிறார்கள்.      





நிறைகளும் குறைகளும்...

நிஜத்தை கதைப் பண்ணியிருக்கிறார்கள். நேரடியாய் கதைப் பண்ணாமல் நண்பனின் மூலமாய் சொல்லியிருக்கும் முறை சற்று வித்தியாசமானது. இதில் நாமும் கதை வழியாகவே பயணிப்பதால் நமக்கு அந்த வன்முறையின் முழு பாதிப்பும் தெரியாமல் மிதமாய் கதை நகர்கிறது. 


ஆனால் அதுவே டைரக்டர் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தி சொல்ல முடியாமல் போனதற்கும் நம் மனதில் இந்த சமூக கொடூரம் சரிவர பதியாமல் போனதற்கும் காரணமும் ஆகிறது. 


இதை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். 


இதில் உயர் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் தங்களின் பங்கை ஒழுங்காய்ச் செய்திருக்கிறார்கள். எல்லா திரைக்கதைகளிலும் இருக்கும் பெரிய வில்லன் அமைதியாகவும் சிறிய வில்லன் கோபமாகவும் வரும் ஸ்டாண்டர்ட் பார்மட் இந்த படத்திலும் உண்டு. பிரகாஷ் ராஜின் அழுத்தமான நடிப்பினால் அந்தக் குறை காணாமல் போய்விட்டது. 






ஹீரோ அல்லு சிரிஷ் நமக்கு புதுசுதான். இந்த திரைக்கதைக்கு தேவையான இளவயதின் சுறுசுறுப்பை கண்களில் காட்டியிருக்கிறார். இயல்பாய் நடித்திருக்கிறார். 





ஹீரோயின் எமி கௌதமுக்கு கதையில் இருக்கும் பங்களிப்பு குறைவுதான். அதை டைரக்டர் சொன்ன வார்த்தைகளின் வழி நடித்திருக்கிறார்.  





ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன் மூவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் யதார்த்தமானவை. 


இப்போதிருக்கும் படங்களில் வருவது போல் வக்கிரமான காமெடி இல்லாமல் எடுத்திருப்பதே இந்த படத்தின் தரத்தைக் கண்பித்துவிடுகிறது. 


ஆடிசம் வந்த பையனாக வரும் அந்த சிறுவன் கூட பேசாமலே நடித்திருக்கிறான். இளங்கோ குமாரவேல், நாசர், ஸ்ரீ சரண் அனைவரின் யதார்த்த நடிப்பு படத்தின் கதைக்கு ஆணித்தரமாய் அஸ்திவாரம் போடுகின்றன. 


காதல் காட்சிகள் எதுவும் பெரிதுப்படுத்தப்படவில்லை என்பதே இதில் சந்தோஷமான விஷயம். சாதாரணமாய் சந்திப்புக்களை உருவாக்கிக் கடற்கரைக் காதலை ஒதுக்கியிருக்கிறார்.  

'ஒரு கிராமம் கெடக்கு....' என்ற ஒரு பாட்டு, கானா பாலா, பாடியது மட்டும் நல்லாயிருக்கு. 





அங்கங்கே சில தோய்வுகள் கதையில் இருக்கின்றது. 



கதாநாயகன் தன் நண்பர்களை அழைத்து வருவது வரைக்கும் சரிதான். அடுத்து வரும் காட்சிகள் அந்த டெம்போவைக் கொண்டு செல்லவில்லை. மறுபடியும் கதாநாயகனே அலைவதாகத் தான்  காட்சிகள் வருகிறது. 


பாழடைந்த கோயில் என்று அந்த ஊரினரால் காட்டப்படும் ஒரு இடம் பயம் தருவதாக இல்லவே இல்லை. அந்த சிறுவன் அங்கே தான் இருக்கிறான் என்பதும் சாதாரணமாகவே காட்டப்படுகிறது. 

சித்தர் என்று ஒருவர் வருகிறார். இதுவும் எல்லா படங்களிலும் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரம் போல். தவிர்த்திருக்கலாம் இதை. 


அந்த சிறுவன் வரைந்த படங்களை ஹீரோவும் அவன் நண்பர்களும் ஆராயும் போது பார்த்தவுடனே கண்டுப்பிடித்துவிடக் கூடிய ஒரு விஷயத்தை திருப்பி திருப்பி காண்பித்து கொஞ்சம் சலிக்க வைத்திருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியின் போது பெரிய குடும்பத்தில் இருக்கும் இரு பெண்களும் (மனைவியும் மருமகளும் ) 'இனி இங்கு இருக்க மாட்டோம் ' என்று கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். பிரகாஷ்ராஜும் தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏதோ அவசர முடிவு போல் அமைத்திருக்கிறார் டைரக்டர். 


இந்த மாதிரி திரைக்கதையில் சில இடங்களில் தோய்வு இருந்தாலும் கதையை சரியான பாதையில் ராதாமோகன் இட்டுச் செல்வதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 


டைரக்டர் ராதாமோகன்....




பாராட்டியே ஆகவேண்டும் இந்த கதையை எடுத்ததற்கு. ஒரு சமூக அநீதியை வன்முறை இல்லாமல், தியேட்டர்கள் பற்றி எரியாமல் ஒரு கிளை கதையாய் எடுத்து கௌரவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். 

கௌரவம் என்ற போர்வையில் இரு உயிர்கள் பறிக்கப்படும் கொடூரமான செயலை தொட்டுச் சென்றிருக்கிறார். சிறு பாதிப்பையும் உண்டு பண்ணியிருக்கிறார். 



சமூகக் கொடுமையைக் கதையின் கருவாகக் கொண்டு அதை பணியாரமாக்க பூரணமாய் அதை மாவின் உள்ளே வைத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அவசியமில்லைதான். ஆனாலும் இந்த சமூகத்தில் நல்லதொருப் படைப்பைப் படையலாக்கத் தேவையாயிருக்கிறது. 




Comments

  1. அருமையான படையல் சாதத்தை சாப்பிடுபவர்கள் ஒரு மூச்சில் சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம் ,கொஞ்சம் உப்பு குறைவு என்று சொல்லுவது போல இருந்தாலும் பணியாரம் நல்லா இருக்கு அப்படின்னும் சொல்லியதற்கு வாழ்த்துக்கள் தோழி

    இன்றைய வியாபார நோக்கத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுத்த இவர்களை நாம் வரவேற்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சரளா...அவர்களை பாராட்டத்தான் வேண்டும்....

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

கவிதை மொழிபெயர்ப்பு

பாப்லா நெருடா கவிஞர் கலியமூர்த்தி அவர்களின் நாற்பது கவிதைகளை 'ஏதோவொரு ஞாபகத்தின் தடயம்', கோவை காமு அவர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து 'Traces of some memory' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை, இரண்டு மாதங்கள் முன்பு, கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அன்று என் கையில் கொடுத்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இலக்கியக்குழு சார்பாக தோழர் கங்கா அவர்கள், அவருடைய ஜீவாநாவா சிந்தனைப்பள்ளியில் அந்த நூல் குறித்து, சென்ற ஞாயிறு (23.6.2024) அன்று, இணையத்தின் வழியாகப் பேச அழைத்தபோது மறுக்க இயலவில்லை. ஈழக்கவிஞர் சேரன், பாப்லா நெருடா, சுகிர்தராணி போன்றோரை உரைக்குள் கொண்டுவந்தேன். கவிதை மொழிபெயர்ப்பு குறித்த நுண் ஆய்வுக்குள் செல்லும் சமயமெல்லாம், எனக்கு நெருடாவின் கவிதைகள் கண் முன் வராமல் இருக்காது. அவருடைய ‘Walking Around’ கவிதையை, வெவ்வேறு காலகட்டங்களிலும் ஸ்பானிஷ் மொழியிலிருந்து பலர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றனர். Angel Flores, Leonard Grucci, H R Hays, Merwin, Bly, Eshleman, Ben Belitt என்று பலர். அவர்களின் மொழிபெயர்ப்பின் ஒப்பீட்டு...