இன்று உன் ஞாபகம்... என்னைவிட இளையவனாய் பிறந்து என்னை முந்தி, நீ மாய்ந்து உலக வாழ்க்கை நிஜமில்லை என்று எனக்கு நீ உணர்த்திய தினம் என்னருகில் உன்னை அமர வைத்து உன் தலையில் குட்டு வைத்து கணக்கு பாடம் ஏற்றிய ஞாபகம் கிரிக்கெட் மட்டையை ஒளித்து வைத்து உன் அழுகையினுடே உன்னை படிக்க வைத்த ஞாபகம் சாலையில் நடந்து போகும் போது எதையாவது வாங்கி வரச்சொன்னால் என் கைபிடிப்பை விலக்கி, ஓடிப்போய் வாங்கிவந்து மீண்டும் என் கைப்பிடிக்குள் நீ வந்த ஞாபகம் உன் பயம் போக்க என் பயம் மறைத்து நடு இரவில் வீட்டை சுற்றிய ஞாபகம் வண்டி ஒட்டவே தெரியாத உன்னை துணை வைத்து நான் கார் ஓட்ட கற்றுக் கொண்ட ஞாபகம் ஊருக்குள் ஓடிய வதந்தியை நம்பி நீ எனக்கு பச்சை புடவை எடுத்து கொடுத்த ஞாபகம் இனி நீ என்றும் என் ஞாபகத்தின் சுவடுகளில் தான் நிஜத்தில் இல்லை என்பதும் என் ஞாபகம்....