Skip to main content

Posts

Showing posts from December 25, 2011

மறக்கலாமா?

மறக்குமா ? மறக்கத்தான் முடியுமா? மாடிப்படியில் குதித்து ஏறியபோது  இடறிய பாவாடையும்  ரயில் பிடித்து நடக்கும் போது  கிழிந்த சட்டையும்  கண்ணாமூச்சி ஆடும் போது  ஒளிந்து கொண்ட மாட்டு கொட்டகையும்  மாடி படிகட்டின் இடுக்கில் அமர்ந்து  படித்த கதை புத்தகங்களும்    ரயில்வே கேட்டில் உட்கார்ந்து கொண்டு  எண்ணிய புகைவண்டியின் பெட்டிகளும்  தூது எடுத்துபோன  அக்காவின் காதல் கடிதங்களும்  சித்தியின் வளைகாப்பில் அடுக்கிய கண்ணாடி வளையல்களும் பெருமாள் கோயில் போவதாக சொல்லி  ஊர் சுற்றிய பெருமாள்புரமும் இறங்க பயந்து காலை மட்டுமே  நனைத்த தாமிரபரணி ஆறும்  மறப்பது சுலபமா? இந்த மாய உலகில் மறந்தது போல் நடிப்பது சுலபமா ?

முதியோர் என்றொரு கவிதை

என் கத.... வெவரம் தெரியாத வயசுல    ஆத்தாளும் அப்பனும் நல்லவைங்கதான்... கம்பஞ் சோறும் கருவாடும் சக்கரதான்... வீட்டு முத்தம் சொர்க்கம்தான் ஆத்தா...   வெவரம் தெரிஞ்ச வயசுல   வாக்கப்பட்டு போன எடமே சரிபடலதான்   மாமியாளும் கொளுந்தியாளும் கெட்டவைங்கதான்... அரிசி சோறும் வத்த கொழம்பும் கசப்புதான்... இனிச்சது புருசன் மட்டும்தான் ஆத்தா.... வெவரம் புரிஞ்ச வயசுல  மகனும் மருமகளும் அந்நியந்தான்  வந்து வாய்ச்சவ சரியில்லதான்... வறுபடுறது புருசன் மட்டும்தான் ஆத்தா... வெவரம் தப்புன வயசுல  கண்ணு இருண்டு போச்சுதான் ... காது கேக்காம போச்சுதான்... கூழும் கஞ்சியும் இறங்கலத்தான்.... தொண ஆரும் இல்ல, நா மட்டும்தான் ஆத்தா.....