பெண்களுக்காக.......
எலும்பு சம்பந்தமான மருத்துவமனை ஒன்றிற்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. ஒரே ஒரு மருத்துவர் வைத்தியம் பார்க்கும் இடம் தான் அது. ஆனால் ஒரு கல்யாண வீடு போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள்....பெண்கள்.....
ஏன் இந்த அவல நிலை பெண்களுக்கு....நாற்பது வயது முதல் தொண்ணூறு வயது பாட்டி வரை அங்கு பார்க்க முடிந்தது. பெரும்பாலான பெண்கள் பருமனாகவே இருந்தார்கள். நொண்டிக் கொண்டும், சரிந்து நடந்து கொண்டும், நடக்கவே முடியாமலும் எத்தனை விதமானவர்கள்....
ஆண்கள் சற்று குறைவுதான். அப்படியே இருந்தாலும், பெரும்பாலானோர் விபத்தில் சிக்கி அதனால் எலும்பு சிகிச்சைக்கு வந்திருந்தார்கள்.
எழுபதுகளில் இருந்த ஒரு தம்பதியர், அங்கு வந்திருந்தனர். அந்த கணவர் தான் மனைவியை தாங்கி பிடித்து, கூட்டி வந்து, இருக்கையில் அமர வைப்பதும், இரத்த பரிசோதனைக்காக அழைத்து செல்வதும், மறுபடியும் அமர வைப்பதுவுமாக அருகிலேயே நின்று கவனித்து கொண்டிருந்தார். மனைவி மீது அவருக்கு இருந்த கரிசனம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
என்னருகில் இருக்கை காலியானதும் வந்தமர்ந்தார். அவர் சொன்ன ஒரு உண்மை என்னை உறுத்தியது. 'பெண்கள் நோய் சிறியதாக இருக்கும் போதே சரிவர கவனித்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வயது போன காலத்தில் உடன் வாழ்பவர்களுக்கு சிரமம்தான்.' என்று தான் இந்த தள்ளாத வயதில் படும் கஷ்டங்களை கூறிக்கொண்டிருந்தார்.
நம் பெண்கள் குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று பெரிதாக அலட்டி கொண்டு, menopause காலகட்டத்தில் வரும் முதுகு வலி, கால் வலி, இடுப்பு வலி முதலியவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கண்டபடி நிமிர்வதும், குனிவதும், எடை அதிகம் உள்ள பாத்திரங்களை தூக்குவதுமாக முதுகெலும்பை ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.
காலையில் வேலை பார்க்கும் பரபரப்பில் சாப்பிடாமலே இருந்து, பிறகு 11 மணி அளவில் சாப்பிடுவதும், மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதும், மாலை வேளையில் 'வாக்கிங்' என்ற போர்வையில் அக்கம் பக்கம் பெண்களுடன் கதை பேசிக் கொண்டே ஆமை வேகத்தில் நடந்து விட்டு வருவதும் உடம்பு சதை போடுவதற்கு காரணமாகிறது.
வேலை செய்யுங்கள். குடும்பத்தை கவனியுங்கள். ஆனால் உங்களையும் சற்று பார்த்து கொள்ளுங்கள். அழகாக இருக்க வேண்டும், உடம்பை slim ஆக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பணக்காரத்தனமோ பகட்டுதனமோ இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் சரியான முறைகளில் அமருவதோ, நடப்பதோ, படுப்பதோ இல்லாமல், நம் எலும்புகளையும் மூட்டுகளையும் பாடாய்ப்படுத்துகிறோம். ஒரு வரம்புக்கு மேல் அவை நம்மை பாடாய்ப்படுத்துகிறது.
அறுபது வயதுகளில் அமைதியாய் போகவேண்டிய முதிர் காலம் மருத்துவமனை படிகளில் ஏறி இறங்குவதில் கழிகிறது. நம்முடைய துணைவருக்கும், பிள்ளைகளுக்கும் துன்பத்தையும் கவலையையும் கொடுக்கிறோம்.
40+ வயதுகளில் பெண்களுக்கு மாதவிடாய் (menopause) சமயங்களில் ஏற்படும் hormone மாற்றங்கள், அதிக அளவிலான இரத்தபோக்கு, கால்சியம் குறைபாடுகள், அதனால் எலும்புகளில் உண்டாகும் தேய்வு என்று இயற்கையே சதி செய்ய காத்து கொண்டிருக்கும் போது, நாமும் அதற்கு வாகாக உடல் எடையை அதிகரித்து கொள்வதும், முதுகெலும்பிற்கும் , மூட்டு எலும்புகளுக்கும் அதிக உழைப்பை கொடுப்பதும் சரியல்ல.
நம்முடைய மன உளைச்சலும் (மகளின் திருமணம், மகனின் வேலை, பிள்ளைகளின் பிடிவாதங்கள், வந்த மருமகளின் மெத்தனம்) இந்த மாதிரி எலும்பு வலிகளுக்கு ஒரு காரணமாக இருப்பதால், அதிலிருந்து உங்களை சற்று விடுவித்து பாருங்கள். அமைதியை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். வலி குறைகிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.
மருத்துவரை பார்க்க போகும் பெண்களுக்கு :
கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்.
- மருத்துவர் உங்கள் கால்களை உயர்த்தி, மடக்கி எல்லாம் பரிசோதனை செய்வார். அதனால், சேலையை தவிர்த்து சுடிதார் அணிந்து செல்லுங்கள். உங்களுக்கும், உங்களை சோதிக்கும் மருத்துவருக்கும் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கலாம். 'சேலைக்குத்தான் என் ஓட்டு' என்றால், கண்டிப்பாக உள்ளாடை (panties ) அணிந்து செல்லுங்கள். இதை படிக்கும் ஆண்கள் உங்கள் விட்டு பெண்களிடம், அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி யாராக இருந்தாலும் அவர்களிடம் கூறுங்கள்.
- MRI scan எடுக்கும் இடத்திலும் இதே நிலைமைதான். நம் உடைகளை களைந்து (except panties ) அவர்கள் தரும் nightie யைத்தான் அணிய சொல்வார்கள். கவனத்தில் கொள்ளுங்கள்.
நல்ல பதிவு & நல்ல அறிவுரை
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுப் பதிவு. நம் பெண்கள் சின்னச் சின்ன நோய் என்றால் சுயவைத்தியம் செய்து கொள்வார்கள். முடியாமல் போகும் பட்சத்தில்தான் கணவரிடம் கூறி டாக்டரைப் பார்க்கிறார்கள் என்பது என் மனக்குறை. உங்கள் கட்டுரையில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று. நனறி!
ReplyDeleteமூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் கண்ட காட்சிகள் தான் என்னை எழுத தூண்டியது. என்னுள் பட்டதை பதித்தேன். நன்றி....
ReplyDeleteme and my back, lifting procedures
ReplyDeleteஎல்லாம் ரொம்ப உபயோகமான தகவல்கள் சகோதரி....